அண்மைய செய்திகள்

recent
-

அசத்தும் தூத்துக்குடி டிகிரி தாத்தா! ஓய்வுக்குப் பிறகு 6 எம்.ஏ பட்டங்கள்!


”டிகிரி படிக்கலைங்கறதுக்காகவே நண்பர்களெல்லாம் என்னை ஒதுக்கினாங்க. அதுக்காகவே ஓய்வுபெற்ற பிறகு, 62 வயதில் படிக்க ஆரம்பிச்சு 6 எம்.ஏ பட்டங்கள் பெற்று அடுத்த எம்.ஏ செமஸ்டர் தேர்வுக்குப் படிச்சுட்டு இருக்கேன்” எனச் சொல்கிறார் 74 வயதாகும் கணேசன் தாத்தா.

தூத்துக்குடி, ரஹ்மத்துல்லாபுரத்தில் டிகிரி தாத்தா என்றால் எல்லோருக்குமே தெரியும். பரபரப்பான தூத்துக்குடியில் ஒரு சிறிய தெருவில் உள்ளது கணேசன் தாத்தாவின் வீடு. வீட்டின் மாடிப்பகுதியில் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே தமிழ் இலக்கண நூலில் வார்த்தைகளை அடிக்கோடிட்டபடி படித்துக்கொண்டிருந்தார். அடுத்த பக்கத்தைப் புரட்டும்போது வாசலை நோக்கித் திரும்பி உற்றுப் பார்த்தவர், கண் கண்ணாடியைக் கழட்டி மேசையில் வைத்துவிட்டு வெளியே வந்து நம்மை கை குலுக்கி வரவேற்றார். அடுக்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் பாடப் புத்தகங்கள், குறிப்பு எடுக்கும் நோட்டுகள், பேனா, பென்சில், ரப்பர், நாளிதழ்கள் எனக் காட்சி அளிக்கிறது அவரது மாடிவீட்டு வரவேற்பறை.

சாய்வுநாற்காலியின் நுனிப்பகுதியில் அமர்ந்தபடியே பேசத் தொடங்கினார் தாத்தா, ``எம்பேரு கணேசன். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரிதான் எனக்குச் சொந்த ஊரு. எங்க அப்பா ஒரு விவசாயி. எங்கூடப் பொறந்தது மூணு  அக்கா, ஒரு அண்ணன். நாதான் கடைக்குட்டிப் பையன். அப்பாவோட ஒத்த வருமானத்தை வச்சுத்தான் குடும்பம் ஓடுச்சு. 8-ம் வகுப்புலயும் 9-ம் வகுப்புலயும் இங்கிலீஷ் பாடத்துல பெயில் ஆனதுனால இரண்டு வருஷம் கூடுதலாப் படிச்சேன். தக்கிமுக்கி ஒருவழியாப் 10-ம் வகுப்பை முடிச்சேன். வீட்டுக் கஷ்டத்துல அதுக்குமேல படிக்கவும் வைக்கல. தொடர்ந்து படிக்க எனக்கு விருப்பமும் இல்ல. வீட்டுக்குப் பாரமா இருக்கக்கூடாதுன்னு சென்னையில உள்ள ஒரு பிரின்டிங் பிரஸ்ல ஆபீஸ் வேலைக்குச் சேர்ந்தேன். தொடர்ந்து, கம்போஸிங், பிரின்டிங், சீலிங், பைண்டிங்னு 6  வருஷத்துல எல்லா வேலைகளையும் கத்துக்கிட்டேன்.

அதுக்குப் பிறகு, தூத்துக்குடியில ஸ்பிக் உரத் தொழிற்சாலையில், அலுவலக உதவியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். எங்கூட வேலைக்குச் சேர்ந்தவங்களெல்லாம் பகுதி நேரமா பட்டப்படிப்பு படிச்சாங்க. அதன் மூலமா தொடர்ந்து, பதவிஉயர்வுல முன்னேறினாங்க. ஆனா, நான் அப்படியேதான் இருந்தேன். வேலையில இருக்கும்போது டிகிரி இல்லங்குறதுக்காக சகஜமாப் பேசுற நண்பர்கள்கூட பேச்சைக் குறைச்சாங்க. அதை நினைச்சு நிறைய தடவை வருத்தப்பட்டிருக்கேன். படிப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்காம நானும் அலட்சியமா இருந்துட்டேன். 31 வருஷம் வேலை பார்த்துட்டு 2004-வது ஓய்வு பெற்றேன். ஓய்வுபெற்றதும் முத்தையாபுரத்தில் சொந்தமா பிரின்டிங் பிரஸ் தொடங்குனேன்.

அதுல கம்ப்யூட்டர் அறிவு தேவைப்பட்டுச்சு. அதனால, கம்யூட்டர் சென்டர்ல டி.சி.ஏ படிச்சு முடிச்சேன். கடைக்கு வர்றவங்க இங்கிலீஷ்ல சில வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுவங்க. அது எனக்குப் புரியாது. அப்படி புரியாத வார்த்தைகளைத் தனியாகக் குறிச்சு வச்சு, அதற்கு ’இங்கிலீஷ் டு தமிழ்’ டிக்‌ஷ்னரியில அர்த்தம் பார்ப்பேன். தொடர்ந்து ரெண்டு, மூணு மாசத்துல இங்கிலீஷ் மேல ஒரு ஆர்வம் வந்துச்சு. ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் சேர்ந்தேன். 5 மாசத்துல சரளமா இங்கிலீஷ் பேசுற அளவுக்கு முன்னேறினேன். இங்கிலீஷ் பாடத்தால இரண்டு முறை தோல்வியடைஞ்ச என்னாலயா இங்கிலீஷ் பேச முடியுதுன்னு எனக்கே ஆச்சர்யமா இருந்துச்சு. அதுக்குப் பிறகு, எங்கிட்ட யாராவது ரெண்டு வார்த்தை இங்கிலீஷ்ல பேசுனாக்கூட நான் நாலு வார்த்தை பேசினேன். கடந்த 2008-ல் ``18 வயது பூர்த்தியடைந்தவரா நீங்கள்? வீட்டிலிருந்தே படித்து பட்டம் பெறலாம்”னு பஜாரில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் போஸ்டர் விளம்பரத்தைப் பார்த்தேன்.

வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்ற மரியாதையை அரசியல்வியாதி பிறவிகளுக்கெல்லாம் சொல்லும் நாம் உண்மையில் இவருக்கு தான் சொல்ல வேண்டும்: "வாழ்த்த வயதில்லை ஐயா வணங்குகிறோம்". உங்களின் கடின உழைப்பு, விட ...

கணேசன் தாத்தா.

அதைப் பார்த்ததும் பட்டப்படிப்பு படிக்கணும்னு ஆர்வம் வந்துச்சு. அடுத்தநாளே பி.ஏ சோசியாலஜிக்கு அட்மிஷன் போட்டேன். முதல் செமஸ்டருக்குப் புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரமிச்சேன். பாடப் புத்தகத்தை கையில எடுத்து வருஷக்கணக்கு ஆனதுனால, ஒரு பக்கத்தை வாசிச்சு முடிக்கவே அரைமணி நேரம் வரை ஆச்சு. தொடர்ந்து, வாசிக்க வாசிக்கப் பழகிப்போச்சு. எப்பவுமே புத்தகங்களைக் கையில வாங்கினதும் கடைசி பக்கத்துல உள்ள மாதிரி வினாத்தாளை வாசிப்பேன். அதுல உள்ள கேள்விகளைக் குறிச்சுப் படிப்பேன். அதுக்குப் பிறகுதான் பாட வாரியாப் படிப்பேன். ஒவ்வொரு பாடத்தைப் படிக்கும்போதும் முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடு போட்டுப் படிப்பேன். குறிப்பெடுத்தும் வைப்பேன். பாடத்தை முழுமையாப் புரிஞ்சுக்கிட்டு கதை புத்தகம் வாசிக்கிறது மாதிரி வாசிச்சுப் படிக்கணும். அசைன்மென்ட் எழுதும்போது திரும்ப ஒருதடவை புத்தகத்தைப் புரட்டுறதுனால மரத்துலப் பதிஞ்ச ஆணி மாதிரி மனசுல நல்லா பதிஞ்சிடும்.

செமஸ்டருக்கு முன்னால குறிப்புகளை மட்டுமே வச்சு ஞாபகப்படுத்தி பரீட்சை எழுதிட்டு வந்திடுவேன். முதல் தடவை செமஸ்டர் எழுத எக்ஸாம் ஹாலுக்குள்ளப் போகும்போது, ``ஐயா.. இது பரீட்சை நடக்குற இடம். இங்கெல்லாம் வரக்கூடாது. மதியம் 1 மணிக்குப் பரீட்சை  முடிஞ்சதும் ஸ்டூடன்ஸ் வெளியே வருவாங்க. பார்க்க வேண்டியவங்களைப் பார்த்துக்கோங்க. அதுவரை அந்த மரத்தடியில வெயிட் பண்ணுங்க. இல்லேன்னா, வீட்டுக்குப் போயிட்டு வாங்க” என ஹால் சூப்பர்வைசர் சொல்ல... கையில வச்சிருந்த ஹால்டிக்கெட்டைக் காட்டியதும் வாயடைத்துப் போயி, ``உங்க சீட் மூணவாது பெஞ்சுல இடது பக்கம். உட்காருங்கய்யா” எனச் சொன்னார். அவர் மட்டுமல்ல... எக்ஸாம் ஹாலுக்குள்ள இருந்த எல்லா ஸ்டூடன்ட்ஸும் எந்திரிச்சு நின்னு அதிர்ச்சியா பார்த்தாங்க.

கொஸ்டீன் பேப்பர் வாங்கி முழுமையாப் படிச்சுப் பார்த்து, ஒரு மணி நேரத்துல மெயின் ஷீட்டை எழுதி முடிச்சுட்டு, அடிஸ்னல் ஷீட் வாங்க முதல்ல எழுந்திரிச்சி நின்னதும் நான்தான். அந்த செமஸ்ட்ர் எழுதி முடிக்கிற வரைக்கும் என்னைப் பத்திதான் எக்ஸாம் சென்டர்ல பேச்சு. அடுத்தடுத்த செமஸ்டர்கள்ல எல்லா ஸ்டூடன்ஸும் சகஜமாப் பேச ஆரம்பிச்சாங்க. சில பசங்க சந்தேகங்களும் கேட்பாங்க. என்னை எதிர்பார்த்து ஒரு கூட்டமே உண்டு. 2011-ல் பி.ஏ-வை முடிச்சேன். அதுக்குப் பிறகு சட்டம் படிக்கணும்னு ஆசைப்பட்டு 2012-ல் ஆந்திராவிலுள்ள ராஜீவ்காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் லாவில் எல்.எல்.பி-க்கு அட்மிஷன் போட்டேன். ஆனா, முதல் செமஸ்டர் எழுதப்போகும்போது என்னோட அட்மிஷனை ரத்து செஞ்சுட்டாங்க. ``பத்தாம் வகுப்புக்குப் பிறகு  பன்னிரண்டாம் வகுப்பு படிக்காம பட்டப்படிப்பு முடித்துள்ளது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது”னு காரணம் சொன்னாங்க” எனப் பேசிக்கொண்டிருந்தவர், நாற்காலிக்கு அடியில் உள்ள வெத்தலையை எடுத்து இடித்து வாயில் ஒதுக்கிபடியே மீண்டும் பேச ஆரம்பித்தார். 


”என்னோட அட்மிசனை ரத்து செஞ்சதுக்காக அந்த இன்ஸ்டிட்யூட் மேல கோர்ட்ல கேஸ் போட்டேன். அதுக்குப் பிறகு வைராக்கியமா டுடோரியலில் சேர்ந்து 12-ம் வகுப்பு முடிச்சேன். தொடர்ந்து, 2013-ல் எம்.ஏ சோசியாலஜிக்கு அட்மிசன் போட்டேன். ஜனவரியில ஒரு அட்மிசன், ஜூனில் ஒரு அட்மிசன் என வருசத்துக்கு இரண்டு அட்மிசன் போட்டு இரண்டரை வருசத்துல இரண்டு எம்.ஏ முடிச்சேன். 2015-ல் வரலாறு,  பொது நிர்வாகம், 2017-ல் அரசியல் அறிவியல், மனித உரிமையியல், 2018-ல் சமூகப் பணிகள் என இதுவரை 6 எம்.ஏ முடிச்சிருக்கேன். இப்போ 7வது எம்.ஏ தமிழ் முதல் செமஸ்டர்  எழுதிக்கிட்டிருக்கேன். 2020 ஜனவரியில் 8வது எம்.ஏ பொருளாதாரம் முதல் செமஸ்டர் எழுதப் போறேன்.

தினமும் இரண்டு மணிநேரம்தான் படிப்பேன்.  காய்ச்சல், தலைவலின்னா மட்டும்தான் தூக்கம் வரும் மத்தபடி தூக்கம் வராது. காலையில 6 மணிக்கும், மாலையில 3.30 மணிக்கும் கிரவுண்டுக்குப் போயி வாக்கிங் போவதுடன் விளையாடுவதை வழக்கமா வச்சிருக்கேன். இன்னும் மூணு வருசத்துல ஆங்கிலத்துலயும் பெண் கல்வியிலயும் இரண்டு எம்.ஏ முடிச்சுடுவேன். அதோட, மொத்தம் 10 எம்.ஏ கணக்கு ஆயிடும். கடைசியா சோசியாலஜியில பிஹெச்.டி-யை மட்டும் முடிக்கணும் அவ்வளவுதான். இப்போ எனக்கு 74 வயசாகுது. 62 வயசுல படிக்க ஆரம்பிச்சு 74 வயசுக்குள்ள 6 எம்.ஏ முடிச்சது தமிழகத்துலயே நான் மட்டும்தான் என நினைக்கிறேன். அதனால, என்னோட ஆர்வத்தை மதிச்சு இலவசமா பி.ஹெச்.டி படிப்பதற்கு தமிழக அரசு உதவி செய்யணும். எனக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கணும். அதோட, குடியரசுத் தலைவரின் பாராட்டையும் பெறணும்.

இப்போதைய மாணவ, மாணவிகளுக்கு நான் சொல்றது என்னன்னா, ஓய்வு எடுக்க வேண்டிய இந்த வயசுல அதுவும் ஓய்வுக்குப் பிறகு படிச்சு என்னால 6 எம்.ஏ முடிக்க முடிஞ்சுதுன்னா. ஏன் உங்களால முடியாது? அம்மா, அப்பா படிக்கிறதுக்காக உங்களுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்காங்க. அதை நினைச்சு நல்லாப் படிக்கணும். இந்தக் கிழவனால முடிஞ்சது என்னோடப் பேரன் பேத்திகளான உங்களால் முடியாதா. ஆர்வமும் முயற்சியும் ஈடுபாடும் தன்னம்பிக்கையும் இருந்தா எல்லாமே முடியும்” என பொக்கை வாய்ச் சிரிப்புடன் விடைகொடுத்தார் டிகிரி தாத்தா.
அசத்தும் தூத்துக்குடி டிகிரி தாத்தா! ஓய்வுக்குப் பிறகு 6 எம்.ஏ பட்டங்கள்! Reviewed by Author on June 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.