அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு ஆளுநர் விடுத்துள்ள விசேட அறிக்கை!


வட மாகாணத்தில் மீளக் குடியமர்ந்த மக்களின் அரச காணிகள் தொடர்பான பிணக்குகளை தீர்த்து வைக்கும் ஆளுநரின் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வடக்கு ஆளுநர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வட மாகாணத்தில் மேற்குறித்த துரித வேலைத்திட்டத்தின் கீழ் 05 மாவட்டங்களிலும் போர் நடவடிக்கை காரணமாக ஆவணங்களை இழந்தவர்களுக்கும், அரச காணிகளில் நீண்ட காலமாக அபிவிருத்திசெய்து காணி ஆவணமின்றி இருப்பவர்களுக்கும் காணிக் கச்சேரி நடாத்தி 2013ம் ஆண்டு முதல் இதுவரை 89530 அனுமதிப்பத்திரங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

எனினும் நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளாக இம்மாகாணத்தில் அரச காணிகள் தொடர்பாக பின்வரும் பிணக்குகள் இனம்காணப்பட்டுள்ளன.
1. முப்படையினர் மற்றும் பொலிஸார் காணிகளை வைத்துள்ளமை.
2. இன்னமும் 20 வீதம் இழந்த காணி ஆவணங்கள் வழங்கப்படாமை.
3. 10 வீதத்திற்கும் மேற்பட்ட காணிப் பிணக்குகள் தீர்க்கப்படாதுள்ளமை.
4. இடம்பெயர்ந்த காணி உரிமையாளர்கள் மீளக்குடியமராதுள்ளமை.
5. சில உரிமையாளர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் காணியை கைமாற்றியுள்ளமை.
6. மக்கள் இடம்பெயர முன்னர் குடியமர்ந்திருந்த பல கிராமங்கள் 2013ம் ஆண்டிற்குப் பின்னர் வேறு திணைக்களங்கள் தமக்குரிய காணிகள் என உரிமை பாராட்டுதல்.
7. சிவில் நிர்வாகம் தடைப்பட்டிருந்த 1990ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து காணியற்ற மக்களுக்கு காணி வழங்குதல் நடைமுறைப்படுத்தப்படாமை.
8. காணியை நீண்டகாலக் குத்தகையில் முன்னர் பெற்றுக்கொண்டவர்கள் குத்தகைப் பணத்தைச் செலுத்தி புதுப்பிக்காமை மற்றும் சட்டத்திற்கு முரணாக அரச காணிகளை புதிதாக கைப்பற்றி வர்த்தக நோக்கத்திற்காக பாவிக்கின்றமை.
9. சில அரச அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு, அசமந்தப்போக்கு மற்றும் பொதுமக்களிடமிருந்து எதிர்பார்ப்பு காரணமாக காணிப்பிரச்சினைகள் தீர்க்கப்படாமை.
10. சில மத நிறுவனங்கள் தமக்கு சொந்தமில்லாத காணிகளை ஆக்கிரமித்து வைத்துள்ளமை.
மேற்குறித்த விடயங்கள் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாலும் கள விஜயம் மற்றும் பொதுமக்கள் சந்திப்பின்போது அறியப்பட்ட வகையிலும் உறுதிப்படுத்தப்படுகின்றன.
பின்வரும் நடவடிக்கைகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் எனது அறிவுறுத்தலின் பிரகாரம் துரித வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
1. ஆரம்பகட்டமாக வட மாகாணத்தில் அரச காணிகள் தொடர்பான கடமைகளைச் செய்யும் உத்தியோகத்தர்கள், அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்களுடன் மத்திய அரசாங்கத்தின் காணி ஆணையாளர் நாயகத்தின் பங்களிப்புடன் கூட்டம் நடாத்தி மத்திக்கும் மாகாணத்திற்குமிடையில் புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2. இப்பிணக்குகளை முழுமையாக தீர்ப்பதற்கான 03 ஆண்டு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, கண்டாவளை, கரைச்சி பிரதேச செயலகங்களின் கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளில் தரவுகள் சேகரிக்கப்பட்டு பிணக்குகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
3. LDO அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு அளிப்பு வழங்குவதற்காக இந்த வருடத்திற்கான இலக்கு 10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்பகட்டமாக, கடந்த 08.06.2019 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் 1500 அளிப்புகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
4. சகல பிரதேச செயலகங்களிலும் காணியற்றோர் பட்டியல் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதுவரை தமது பெயர்களை பதிவு செய்யாத காணியற்றவர்கள் தமது பெயர்களை குறித்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்யமுடியும்.
5. மக்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய அரச காணிகளை பிரதேச செயலர்கள்
இனம்கண்டு அவற்றை காணியற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்க(காணிச்சட்ட விதிகளுக்கமைய) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
6. எதிர்வரும் 01 மாத காலத்தினுள் (யூலை 01ம் திகதி தொடக்கம் யூலை 31 வரை)இ காணியை குத்தகையில் பெற்றவர்கள் குத்தகைப் பணத்ததைச் செலுத்தி புதுப்பித்தல் மற்றும் அத்துமீறிப் பிடித்து வர்த்தக நடவடிக்கை செய்பவர்கள் முறைப்படியான குத்தகை ஆவணத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதனை கடைப்பிடிக்க தவறுபவர்களுக்கெதிராக சட்ட விதிகளுக்கமைவாக நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
7. மத்திய வகுப்புத் திட்டத்தில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள், R இலக்க அளிப்பு காணிகளுக்கான கொள்விலையை செலுத்தி புதிய அளிப்பினை பெற்றுக்கொள்ள காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.
8. எதிர்காலத்தில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக முதலீட்டாளர்களுக்கு காணி வழங்குவது தொடர்பாக காணி வங்கி முறைமையொன்று உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே எதிர்காலத்தில் அரச காணிகளின் முகாமைத்துவம் மற்றும் நிர்வாகத்தினை சுமுகமான முறையில் சட்ட விதிமுறைகளுக்கமைவாக மக்கள் பயன்பெறும்பொருட்டு பிணக்கிற்குரிய காணிக்காரர்கள் தமது விண்ணப்பங்களை காணி அமைந்துள்ள பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
மேலதிக விபரங்களுக்கு இல.59, கோவில் வீதி, யாழ்ப்பாணம் முகவரியில் அமைந்துள்ள மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்துடன் 0212220836 எனும் தொலைபேசி இலக்கத்துடன் அல்லது நேடியாக தொடர்பு கொள்ளவும். விபரங்கள், விண்ணப்பப் படிவங்கள் வடக்கு மாகாண சபை இணையத்தளத்தில் பார்வையிடவும் பதிவிறக்கம் செய்ய முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ஆளுநர் விடுத்துள்ள விசேட அறிக்கை! Reviewed by Author on June 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.