அண்மைய செய்திகள்

recent
-

வசியம் செய்த வானொலி ராஜா


வசியம் செய்த வானொலி ராஜா...

‘ராஜா கையை வெச்சா அது ராங்கா போனதில்லே...’ - இது இளையராஜாவின் ரசிகர்களுக்குப் பிடித்த பாடல். ‘அபூர்வ சகோதரர்கள்’ (1990) படத்தில் இடம் பெற்றது. இந்தப் பாடல் காதில் விழும்போதெல்லாம் கே.எஸ்.ராஜா இதை ஒலிபரப்பியிருந்தால் எப்படி அறிவித்திருப்பார் என்று நினைத்துக்கொள்வேன். ஆனால், இந்தப் பாடல் வெளியாவதற்கு ஓராண்டு முன்பாகவே அவர் காலமாகிவிட்டார். அதற்குப் பல ஆண்டுகள் முன்பாகவே இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் வர்த்தகச் சேவையில் அவரது அறிவிப்புகள் நின்று போயிருந்தன.

எழுபதுகள் கே.எஸ்.ராஜாவின் காலமாக இருந்தது. ‘வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில் ஆவலோடு குழுமியிருக்கும் ரசிகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம்’ என்று நிகழ்ச்சியைத் தொடங்குவார். இலங்கையில் மட்டுமில்ல, அவருக்குத் தமிழ் நாடெங்கிலும் ரசிகர்கள் இருந்தார்கள். ‘மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் அன்பு அறிவிப்பாளன் கே.எஸ்.ராஜா’ என்று அவர் நிகழ்ச்சியை முடிக்கும்வரை ரசிகர்கள் வானொலிப் பெட்டியை விட்டு அகல மாட்டார்கள்.

ஒரு படத்தின் பாடலிலோ, வசனத்திலோ ராஜா என்கிற பெயர் வந்துவிட்டால் அதைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொள்வார். ‘ராஜா’ (1972) படத்தில் 'நீ வர வேண்டும் என்று எதிர்பார்த்தேன்’ பாடலின் பல்லவிக்கு முன்பாக பி.சுசீலா ‘ஓ...ராஜா’ என்று சேய்மையில் இருக்கும் நாயகனை விளிப்பார். பதிலுக்கு டி.எம்.எஸ் அண்மைக் குரலில் ‘ராஜா’ என்பார். இந்தப் பாடல் வெளியான காலத்தில் ‘வணக்கம் கூறி விடை பெறுவது’ என்று சொல்வது ராஜாவாக இருக்கும். தொடர்ந்து ‘ராஜா’ என்று சொல்வது சுசீலாவாகவோ டி.எம்.எஸ்ஸாகவோ இருக்கும்.

தமிழ்ச் சேவை

அன்று இந்த அளவுக்குத் தொலைக்காட்சி அலைவரிசைகள் இல்லை. தூரதர்ஷனோ, ரூபவாஹினியோகூட இல்லை. ஆனால், திரையிசைப் பாடல்களால் காற்றை நிறைத்தது இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை. காலை ஏழு மணிக்கு பொங்கும் பூம்புனல். பிறகு பிறந்த நாள், ஒரு படப்பாடல், அன்றும் இன்றும் என்று தொடரும் காலை நிகழ்ச்சிகள், பத்து மணிக்கு நீங்கள் கேட்டவையுடன் முடியும். நண்பகலில் புது வெள்ளம், இன்றைய நேயர், பூவும் பொட்டும் - மங்கையர் மஞ்சரி, மலர்ந்தும் மலராதவை, இசையும் கதையும் என்று தொடரும் நிகழ்ச்சிகள், மீண்டும் இன்னொரு நீங்கள் கேட்டவையுடன் மாலை ஆறு மணிக்கு முடியும். இரவு நிகழ்ச்சிகள் வேறு.

நிகழ்ச்சிகளின் பெயர்களைப் போலவே அறிவிப்புகளிலும் தமிழ் மிளிரும். ஆங்கிலக் கலப்பு இராது. அறிவிப்பாளர்களுக்குத் தாங்கள் ஒலிபரப்புகிற பாடலைக் குறித்தும் பங்கு பற்றிய கலைஞர்களைக் குறித்தும் தெரிந்திருந்தது. ராஜேஸ்வரி சண்முகம், விமல் சொக்கநாதன், மயில்வாகனன் சர்வானந்தா, சில்வெஸ்டர் பாலசுப்பிரமணியம், கமலினி செல்வராசன் என்று பல அறிவிப்பாளர்கள். அப்துல் ஹமீதும் கே.எஸ்.ராஜாவும் நட்சத்திரங்கள். அப்துல் ஹமீதின் குரலில் அமைதியும் அழுத்தமும் இருக்கும். கே.எஸ்.ராஜாவின் குரலில் துள்ளலும் உற்சாகமும் வேகமும் பாவமும் இருக்கும். இவற்றைப் பருகி வளர்ந்ததால்தான் இன்றையத் தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் தமிழைப் போன்ற ஒரு மொழியைப் பேசும்போது சகித்துக்கொள்வது பெரும்பாடாக இருக்கிறது.

ராஜாவின் காலம்

ராஜா குறிப்பிட்ட நிகழ்ச்சியில் ஒரே உணர்வுள்ள பாடல்களைத் தெரிவுசெய்து ஒலிபரப்புவார். பாடலைப் பற்றி ஒன்றோ, இரண்டோ வரிகள் சொல்வார். இடையில் அவரது குறும்புத்தனமும் இருக்கும். ‘குடியிருந்த கோயில்’ (1968) படத்தில் இடம் பெறும் பாடல் ‘என்னைத் தெரியுமா?’ பாடலின் அடுத்த வரி வருவதற்குள் ராஜா நுழைந்துவிடுவார். ‘தெரியுமே… டி,எம்.சௌந்தரராஆஆஜன்’. அவரது உற்சாகம் ரசிகனையும் தொற்றிக்கொள்ளும்.

ராஜாவின் நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கவை திரை விருந்தும் உமாவின் விநோத வேளையும். திரை விருந்து திரைப்பட விளம்பர நிகழ்ச்சி. இதில் ஒலிபரப்பான படங்கள் திரையிடப்பட்ட மகாத்மா - நெல்லியடி, செல்லமகால் - கொட்டாஞ்சேனை, சாந்தி - யாழ்ப்பாணம் முதலான திரையரங்குகள் தமிழ்நாட்டு நேயர்களுக்கும் பரிச்சியமானவையாக இருந்தன.

உமாவின் விநோத வேளை ஒரு போட்டி நிகழ்ச்சி. இதன் விதிமுறைகள் எனக்குத் தலைகீழ்ப் பாடம். ராஜா விதிகளை அதிவிரைவாகவும் ஏற்ற இறக்கங்களோடும் சொல்லுவார். ‘என்னுடன் தொடர்ச்சியாக இரண்டு நிமிடங்கள் உரையாட வேண்டும். உரையாடும்போது ஆம், இல்லை, முடியாது போன்ற சொற்களையோ அதற்குச் சமமான சொற்களையோ உபயோகிக்கக் கூடாது. தலையசைத்துப் பதிலளிக்கக் கூடாது. தொடர்ச்சியாக ஐந்து விநாடிகள் மௌனம் சாதிக்கக் கூடாது. ஒரு சொல்லை இரண்டு தடவைக்கு மேல் உபயோகிக்கக் கூடாது. ஒரே சொல்லில் பதிலளிக்கக் கூடாது.’

இந்த நிகழ்ச்சியை ஒரு முறை எங்கள் கல்லூரியில் நடத்தினேன். ராஜாவின் பாணியை அச்சொட்டாகப் பின்பற்றினேன். நிகழ்ச்சி முடிந்ததும் நண்பர் ஆறுமுகம் என்னிடம் நேராக வந்தார். அவரும் ராஜாவின் ரசிகர். பாராட்டப் போகிறார் என்றுதான் நினைத்தேன். அவர் சொன்னார்: ‘இலக்கம் 27, செட்டியார் தெரு, கொழும்பு 11, உமா ஜூவல்லர்ஸ் ஸ்தாபனத்தார் வழங்கும் நிகழ்ச்சி இது - என்று எங்கே சொல்லி விடுவாயோ என்று பயந்துகொண்டே இருந்தேன்.’

சகாப்தத்தின் முடிவு
எழுபதுகளின் ராஜாவுக்கு எண்பதுகள் சோதனைக் காலமாக அமைந்து விட்டது. இலங்கை வானொலியிலிருந்து ராஜா நீக்கப்பட்டார் என்பதுதான் முதலில் வந்த சேதி. தமிழீழத்துக்கு ஆதரவாக இருந்ததுதான் காரணம் என்றார்கள். அப்போது அவர் தமிழ்நாட்டில் சில காலம் வசித்ததாகவும் பிறகு இலங்கைக்குத் திரும்பிவிட்டதாகவும் சொன்னார்கள். இறுதியில் அவர் சார்ந்திருந்த விடுதலைக் குழுவுக்கும் பிற குழுக்களுக்கும் இருந்த பகைமையின் காரணமாக, 1989இல் ஒரு நாள் ராஜா கொல்லப்பட்டார் என்றார்கள். அவரது அறிவிப்புகள் அவர் நாவிலிருந்து வெளியேறிய மறுகணம் காற்றிலேறி தமிழ்நாட்டை அடைந்தன. ஆனால், அவரது மரணச் சேதி கடல் கடந்து வருவதற்குத் தாமதமானது.

'நீயா’ (1979) படத்துக்கு ராஜா வழங்கிய திரை விருந்தை மறக்க முடியாது. படத்தில் தனது காதலனின் உயிர் பிரியும்போது ‘ராஜா, என்னை விட்டுட்டு போயிட்டீங்களே’ என்று ஸ்ரீப்ரியா அழுவதாக ஒரு வசனம் வரும். நிகழ்ச்சியின் முடிவில் ராஜா அந்த வசனத்தை வைப்பார். தொடர்ந்து அவரே ‘இல்லை ஸ்ரீப்ரியா, இன்று உங்கள் ராஜா விடைபெறும் நேரம் வந்துவிட்டது. மீண்டும் அடுத்த வாரம் இதே வேளையில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன்’ என்று சொல்லி முடிப்பார்.

இனி எத்தனை கலைஞர்கள் ‘ராஜா’ என்று அழைத்தாலும் அவரால் வர முடியாது. அவரோடு நல்ல தமிழ் அறிவிப்புகளுக்கான சகாப்தமும் முடிவுக்கு வந்துவிட்டதோ என்று அச்சமாக இருக்கிறது.

(கட்டுரையாளர் மு.இராமனாதன் ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர். தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com)

வசியம் செய்த வானொலி ராஜா Reviewed by Author on June 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.