அண்மைய செய்திகள்

recent
-

ரதன தேரர் தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் இரண்டையும் விடுவிப்பாரா? செல்வம் எம்.பி கேள்வி -


ரதன தேரர் உண்மையை பேசும் மதகுருவாக இருந்தால் கன்னியா மற்றும் நீராவியடி பிரதேசங்களை நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பாரா என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுனியா - தோணிக்கல் ஐக்கிய விளையாட்டு கழகத்திற்கு கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அலுவலகம் மற்றும் கடின பந்து பயிற்சி கூடத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கின்றது. இதனூடாக கம்பெரலிய போன்ற திட்டத்தினூடாக அபிவிருத்திகள் மக்களுக்கு சென்றடையும் வேலைத்திட்டங்களை நாம் செய்து வருகின்றோம்.

நாம் கம்பெரலியவை கிராமப்புறங்களில் வழிநடத்துவதில்லை என சிலர் கூறுகின்றனர். சிலர், நாம் அரசாங்கத்துடன் இல்லை, எதிர்க்கட்சியில் உள்ளோம். தமிழ் தேசியக்கூட்டமைப்பு தான் அரசாங்கத்துடன் இருக்கின்றது என கூறுகின்றனர். எனவே சந்தர்ப்பவாத கதைகளை பேசுவதற்கு நாம் அனுமதி கொடுக்க முடியாது.
கம்பெரலியவை பொறுத்தவரையில் நாடாளுமன்றத்தில் உள்ள அத்தனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகின்றது. அதில் பல அபிவிருத்திகளை செய்து வருகின்றோம். அபிவிருத்தி விடயங்களில் கவனம் செலுத்துவதென்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.
எங்களை பொறுத்தவரையில் அரசியல் தீர்வு மற்றும் அபிவிருத்தி ஆகிய இரண்டு விடயங்களையும் ஒரே நேர் பதையில் கொண்டு செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
ஏனெனில் எமது மக்கள் யுத்தத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களாக உள்ளார்கள். இன்றும் மலசலகூடங்கள் இல்லாத வீடுகள் இருந்து கொண்டே இருக்கின்றது.

ஆகவே எங்கள் செயற்பாட்டின் ஊடாக மக்களுக்கான அபிவிருத்தியை கொண்டு செல்லும் செயற்பாட்டை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
இதற்குமப்பால் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த அத்துரலிய ரதன தேரர் மிகவும் மோசமான கருத்தை மக்களை கவர வேண்டும் என்பதற்காக பேசி முடித்திருக்கின்றார்.
தமிழ் மக்கள் புத்த கோவிலை விரும்பவில்லை என்றால் நாங்களே எடுத்துவிடுவோம் என தெரிவித்துள்ளார். இது வேடிக்கையாக இருக்கின்றது.
நாடாளுமன்றத்தில் எமது உறுப்பினர்கள் எமது பாரம்பரிய இடமான கன்னியா பிள்ளையார் ஆலய வளாகத்தில் புத்த கோவில் அமைக்கப்படுவது தொடர்பாகவும், முல்லைத்தீவு நீராவியடியில் பிள்ளையார் ஆலயத்தில் புத்த கோவிலை அமைப்பது தொடர்பாகவும் தமது ஆட்சேபனையையும் பல தடவைகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இது ரதன தேரருக்கு தெரியாதா? அல்லது தெரியாதது மாதிரி உள்ளாரா? என்பது வேடிக்கையான விடயமாகவுள்ளது.
புத்தர் ஞானம் பெற்ற நாளான இன்று கூட நீராவியடியில் புத்த கோவில் வரவேண்டும் என சிங்களவர்கள் போராட்டம் நடத்தி கொண்டிருக்கின்றனர்.
ரதன தேரர் உண்ணாவிரத்திற்கு பின்னர் தமிழ் மக்கள் தன்னுடைய பேச்சை கேட்பார்கள் என நினைக்கின்றார். அவர் உடனடியாக செய்ய வேண்டிய வேலை இந்த இரண்டு புத்தகோவில்களையும் எடுக்க வேண்டும்.
உண்மையை பேசும் மதகுருவாக இருந்தால் எங்கள் மக்கள் போராடிய, எங்கள் மக்களுக்கு கிடைக்கின்ற இரு பிரதேசத்தையும் நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்க வேண்டும்.

எமது மக்கள் பாராம்பரியமாக புனிதத்துவத்துடன் வழிபடுகின்ற இடங்களை ரதன தேரர் உண்மையில் புத்த மதத்தினை பின்பற்றுகின்றவராக, அதன் அடிப்படையோடு செயற்படுகின்றவராக இருந்தால் இந்த இரண்டு விடயத்திலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி அந்த இடங்களை மீள எமது மக்களிடம் கையளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ரதன தேரர் தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் இரண்டையும் விடுவிப்பாரா? செல்வம் எம்.பி கேள்வி - Reviewed by Author on June 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.