அண்மைய செய்திகள்

recent
-

வங்காள விரிகுடா என்ற பெயர் தவறானது... சோழ மண்டல கடல் என்பதே சரியானது...அமெரிக்க பேராசிரியர்கள்


புதுச்சேரி: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 8ம் தேதி உலக பெருங்கடல் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கடலின் இயற்கை, மரபினை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கம் புதுவை கடல்சார் சூழலியல் அருங்காட்சியகத்தில் நடந்தது. அருங்காட்சியக நிறுவனர் அறிவன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்க சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஓசெர் மற்றும் மேனன் ஆகியோர் கலந்து கொண்டு பேசியதாவது: உலகின் 70 சதவீத மக்கள் கடற்கரையோரங்களில் வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. 70 விழுக்காடு நீரால் சூழப்பட்ட பெருங்கடலே எங்கும் பரவி விரிந்து கிடக்கிறது. இதைத்தான், விரிநீர் வியனுலகம் என்ற குறளில் வான்சிறப்பின் வழியாக திருவள்ளுவர் படம் பிடித்து காட்டுகிறார்.

அறிவியல்படி கடல்கள் பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கும் என நம்பப்படுகிறது. அப்போது நிலம் ஒரே இடத்தில் துண்டிடப்படாத அமைப்பாகவும், ஒரே பெருங்கடல்கள் இருந்திருக்கலாம் என நம்புகின்றனர். தற்போதைய உலகின் மொத்த கடல் பரப்பு 361,740,000 சதுர கிமீ பரவிக்கிடக்கிறது. தற்போது அவை, பசிபிக், அட்லாண்டிக், இந்தியன், ஆர்டிக், பசிபிக் பெருங்கடல் என பிரிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி உலகின் மூன்றில் ஒரு பகுதி நீரால் மூடப்பட்டிருக்கிறது. பசிபிக்கின் மொத்த பரப்பு 17 ஆயிரத்து 700 கி.மீ, இது ஏறத்தாழ உலகின் பாதியளவாக இருக்கிறது. உலகின் மூன்றாவது பெரிய கடல் 73,430,000 சதுர கி.மீ பரப்பு கொண்ட இந்தியப் பெருங்கடல்தான். உலகின் வெப்ப மண்டல கடலாகவும் இருந்து வருகிறது.

உலகில் உள்ள கடல்களில் தனிச்சிறப்புடைய இயற்கை தகவமைப்பினை கொண்டது இந்தியப் பெருங்கடல் மட்டும்தான். பல சிறு கடல்களின் பெயர்களை ஒருங்கிணைத்தே பெருங்கடல் என சொல்கிறோம். அதன்படி அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய கடல்களும் இந்தியப் பெருங்கடலில்தான் அடங்கும். இந்தியப் பெருங்கடல் என்பது குமரி கடலையே குறிக்கிறது. கடல் பற்றிய பெரும் அறிவு கொண்டவர்கள், தமிழ் மக்கள்தான். கடல் என்ற சொல்லாட்சி சங்க இலக்கியத்தில் நூற்றுக்கணக்கில் பரவி கிடக்கிறது. ஆழி என்ற கடல் குறித்த சொல் சங்க இலக்கியத்தில் 43 இடங்களில் வருகிறது. கடல் சார்ந்த நிலத்தை நெய்தல் என வரையறுத்து, அந்த மக்கள் குறித்து ஏராளமான செய்திகள் தமிழில் விரவிக்கிடக்கின்றன. அப்படிப்பட்ட இந்திய பெருங்கடலை கட்டியாண்ட பெருமை தமிழகத்தின் மூவேந்தர்களையே சாரும், அதில் சோழர்களின் பெரும் ஆற்றல், புகழ் குறித்து தெரிந்து கொண்ட ஐரோப்பியர்கள், நமது கடல் பகுதியை சோழமண்டலக் கடல் என்றுதான் அழைத்தனர்.

சோழர்களின் பெருமையும், அவர்களது கடல் ஆளுமையும் உலகம் அறிந்ததுதான். அதனால்தான் மத்திய அரசு சோழர்களின் கடல் ஆளுமை பெருமையை எண்ணி ராஜேந்திர சோழனுக்கு 2015ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி அஞ்சல் தலையை வெளியிட்டிருக்கிறது. சோழக்கடல் என்பதுதான் சரியானது: 2,172,000 சதுர கி.மீ கொண்ட தற்போதைய வங்காள விரிகுடா என்ற பரப்பு சோழ மண்டலக் கடலையும் அதற்குள் அடக்கிக்கொள்கின்றது. சோழமண்டலக் கடலுக்கும் வங்காள விரிகுடாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வங்க மொழி என்ற சொல் 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இடியமா பெங்கல்லா என்ற போர்த்துகீசியர்கள் அவ்வாறு அழைத்தனர். இச்சொல் முகமதிய ஆட்சியின் பொழுதுதான் முதன்முதலாக வருகிறது. வங்கதேசப் பகுதியில் தொடங்கி இந்தியாவின் மேற்கு வங்க பகுதி வரையில் பரந்த குடாப்பகுதியே விரிகுடா எனப்படுகிறது. இப்பகுதியில்தான் பெரிய ஆறுகளான கங்கை, பிரம்மபுத்திரா, ஐராவதி, மகாநதி போன்ற ஆறுகள் கலக்கின்றன. இதனையே வங்காள விரிகுடா என சொல்வது முறையாகும்.

ஆனால் நமது கடல் சோழமண்டலக் கடல், இதனை ஐரோப்பியர்களின் ஒலிப்பில் வேறாக விளங்கியது. சோழமண்டலத்தை கோரமண்டல் என்று அழைத்தார்கள். உலகக் கடல்களில் 29 கடல்களையும், 4 பெருங்கடல்களையும் கொண்ட இவ்வுலகில் சோழமண்டலக் கடலுக்கென ஒரு மிகப்பெரிய வரலாறும் உண்டு. சோழமண்டலக் கடலுக்கான வரலாற்றைப் போலவே, இந்தியாவின் மேற்கிலும் மலையாளக்கரை அல்லது மலைவாரக் கடல் என்ற சொற்கள் எப்படி அரபிக் கடல் என்றானது என்ற கேள்வியினை உடனடியாக அரசுகள் எண்ணிப்பார்க்க வேண்டும். கோதாவரி ஆறு கலக்கும் இடம் துவங்கி இலங்கையின் மன்னார் வரையுள்ள கடல் பரப்பு சோழமண்டலக் கடலுக்கான பெயருக்குரியது. மத்திய மாநில அரசுகள் இப்பெயரை மரபு அடிப்படையில் நிறுவிட தாழ்மையுடன் வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் பேசினர். கருத்தரங்கில் புதுச்சேரியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, அருங்காட்சியக ஊழியர்கள் சிவா, சங்கீதா மனோரஞ்சினி ஆகியோர் செய்திருந்தனர்.


வங்காள விரிகுடா என்ற பெயர் தவறானது... சோழ மண்டல கடல் என்பதே சரியானது...அமெரிக்க பேராசிரியர்கள் Reviewed by Author on June 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.