அண்மைய செய்திகள்

recent
-

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை வழக்கு! இறுதி கட்டளைக்கான திகதி அறிவிப்பு -


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், இறுதிக் கட்டளை எதிர்வரும் 27ம் திகதி வழங்கப்படும் என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று அறிவித்துள்ளது.

மாணவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததுடன் மற்ற மாணவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வழக்கின் 2ஆவது சந்தேகநபரான காவல்துறை உத்தியோகத்தரின் கைத்துப்பாக்கியிலிருந்த ரவையே மாணவனுக்குள் பாய்ந்து அவர் உயிரிழந்தார் என்று அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ம் ஆண்டு ஒக்ரோபர் 20ம் திகதி நள்ளிரவு காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் காவல்துறை மா அதிபர் பாரப்படுத்தினார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் உள்பட 5 காவல்துறையினரைக் கைது செய்தனர்.
அவர்கள் ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 5 காவல்துறை உத்தியோகத்தர்களும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் ஐவரும் காவல்துறை சேவையில் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர்.

வழக்கில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த 5 சந்தேகநபர்களில் இரண்டாவது சந்தேகநபர் எக்கநாயக்க முதியான்சலாகே ஜயவர்த்தன, நான்காவது சந்தேகநபர் தங்கராஜன் லங்காமனன், ஐந்தாவது சந்தேகநபர் கமல விதானகே நவரத்ன பண்டார ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து அரச சாட்சிகளாக மாற்றப்பட்டனர்.
மேலும் கடமைக்கு பொறுப்பாகவிருந்தவரான முதலாவது சந்தேகநபர் சரத் பண்டார திசாநாயக்க மற்றும் சூடு நடத்தியவரான மூன்றாவது சந்தேகநபர் சமர ஆராய்சிலாகே சந்தன குமார சமர ஆராச்சி ஆகிய இருவருக்கும் எதிராக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 296ம் பிரிவின் கீழான கொலைக் குற்றச்சாட்டின் கீழ் பிராது பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.
அதனடிப்படையில் சிவில் மற்றும் காவல்துறை சாட்சிகள் நிறைவடைந்திருந்தன. அதனையடுத்து நிபுணத்துவ சாட்சிகளுக்காக வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முன்னிலையாகினர். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மன்றில் தோன்றினர்.
வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றில் முன்னிலையானார். சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை மற்றும் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை என்பன விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

அதனை அடுத்து தமது பக்க சாட்சியங்கள் நிறைவடைந்ததாக அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றுரைத்தார். எதிரிகள் தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்ததாக மன்றுரைக்கப்பட்டது.
அதனால் சுருக்க முறையற்ற விசாரணையின் இறுதிக் கட்டளை வரும் 27ம் திகதி வியாழக்கிழமை வழங்கப்படும் என்று நீதிவான் தவணையிட்டார்.
வழக்கின் சந்தேகநபர்களான காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவருக்கும் எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதா இல்லையா? என்பது தொடர்பான கட்டளையே வரும் 27ம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் வழங்கவுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை வழக்கு! இறுதி கட்டளைக்கான திகதி அறிவிப்பு - Reviewed by Author on June 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.