அண்மைய செய்திகள்

recent
-

கொடுத்த வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்காத நீதிபதி இளஞ்செழியன்! தென்னிலங்கை மக்களை நெகிழச் செய்யும் செயற்பாடுகள் -


வரலாற்றில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தும் வழக்குகளை கையாண்டு, தீர்ப்பளித்து நீதியை நிலை நாட்டியவர் என்று இன்று இலங்கையின் மூவினத்தினராலும் கௌரவப்படுத்தப்படுகிறார் நீதிபதி இளஞ்செழியன்.
நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்ட காலத்திலிருந்து எந்தவிதமான அடக்குமுறைகள் இருந்தாலும் அவற்றுக்கெல்லாம் அடிபணியாது தன் கடமையை சரிவரச் செய்தவர். தற்போதும் செய்து கொண்டிருக்கிறார்.
இன்பிரச்சினையால் பிரிந்துகிடக்கும் இலங்கையர்கள் ஒற்றுமைப்படும் தருணங்கள் மிகமிகக் குறைவானது தான். இலங்கை கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியை ஆதரித்துப் பேசுவதில் மட்டும் ஒற்றுமைப்படும் இந்நாட்டினர் வேறெந்த கருமங்களிலும் ஒன்றுபடுவதில்லை என்பதை கண்ணூடே பார்த்திருக்கிறோம்.

அதேபோன்று நீதிபதி இளஞ்செழியனின் மனிதாபிமான செயல் கண்டு இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாராட்டியது மட்டுமல்ல அவர் மீதான கௌரவத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலடியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் காரை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மெய்ப்பாதுகாவலர் இருவர் காயமடைந்தனர்.
நல்லூர் பின்வீதி வழியாக தனது மெய்ப்பாதுகாவலருடன் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தனது காரில் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது. கோயில் பின்வீதி வழியாக அவரது கார் நாற்சந்தியை வந்தடைந்தபோது, அதற்கு வழிவிடும் வகையில் அவருடைய காருக்கு முன்னால் மோட்டார் சைக்களில் சென்ற அவருடைய மெய்ப்பாதுகாவலர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வாகனங்களை மறித்து வழியேற்படுத்தினார்.

அப்போது, அந்த இடத்தில் நடந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த காவலருடைய இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியைப் பறித்தெடுத்து நீதிபதியின் காரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.
இத்துப்பாக்கி சூட்டின்போது நீதிபதியின் மெய்பாதுகாவலராக 15 ஆண்டுகளாக கடமையாற்றிய சரத் ஹேமசந்தர மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தனது உயிரை அருகிலிருந்து பாதுகாத்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்ட இளஞ்செழியன், இன்று முதல் எனக்கு இரண்டு பிள்ளைகள் அல்ல, நான்கு பிள்ளைகள் உள்ளார்கள் என்றும், அவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து நான் கவனித்துக்கொள்வேன் என்று இறுதிக்கிரியை முடிந்தவுடன் தெரிவித்திருந்தார்.
உயிரிழந்த தமது பாதுகாவலரின் இரண்டு பிள்ளைகளையும் தமது வாழ்நாள் முழுவதும் ஆதரிப்பதாக உறுதியளிப்பதாகவும் நீதிபதி இளஞ்செழியன் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

கொடுத்த வாக்குறுதிக்கு அமைய, பிள்ளைகளின் படிப்புச் செலவினை ஏற்றதோடு அவர்களின் வீட்டினையும் திருத்தியமைத்து கொடுத்தார். அதுமாத்திரமன்றி ஒவ்வொரு மாதமும் பிள்ளைகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு மாதமும் அவர் நேரில் சென்று நலன்விசாரிக்கும் போதும் அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் கூடி நீதிபதி இளஞ்செழியனைச் சந்தித்துப் பேசி தங்கள் அன்பை பாராட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இன்றைய தினம் பாதுகாவல் கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகளாகிய நிலையில் அவரின் கல்லறைக்குச் சென்று வணக்கம் செலுத்தியதோடு அப்பிள்ளைகளையும் பார்த்து பேசியிருக்கிறார் நீதிபதி.
அவரின் மனிதாபிமானச் செயலை தென்னிலங்கை பெரும்பான்மை தரப்பினர் பாராட்டி வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதியில் கொஞ்சம் கூட பிழையின்றி செய்துவரும் நீதிபதி இளஞ்செழியன் தொடர்பான நன்மதிப்பு மேலும் மேலும் மக்கள் மத்தியில் ஆழப்பதிந்துவருகிறது. அவர் வழங்கும் நீதியான தீர்ப்பினைப் போல....
கொடுத்த வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்காத நீதிபதி இளஞ்செழியன்! தென்னிலங்கை மக்களை நெகிழச் செய்யும் செயற்பாடுகள் - Reviewed by Author on July 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.