அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீஸ்வர வளைவு விடயத்தில் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களின் பாதுகாப்புக்காகவே அவசரக் கூட்டத்துக்கு-கொன்சன்.

திருக்கேதீஸ்வரம் வளைவு விடயத்தில் எமது சபையைச் சார்ந்த தவிசாளர்,
உறுப்பினர்கள் பிரச்சனைகளுக்கு உட்படக்கூடாது என்பதற்காகவும் எம்
மத்தியில் சமய சமூக முரண்பாடுகள் உருவாகக் கூடாது என்பதற்காகவே நாங்கள் 12 உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு அவசரக் கூட்டத்தைக் கூட்ட தவிசாளரிடம் கடிதம் ஒன்றை கையளித்தோம் என மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ஐ.இ.கொன்சன் குலாஸ் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று வியாழக் கிழமை (04.07.2019) மன்னார் திருக்கேதீஸ்வரம் வளைவு
தொடர்பாக மன்னார் பிரதேச சபையின் அவசரக் கூட்டம் இதன் தவிசாளர்
எஸ்.எச்.எம்.முஐhஹீர் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த தமிழ் தேசிய
கூட்டமைப்பு உறுப்பினரும் மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான ஐ.இ.கொன்சன் குலாஸ் இவ் அமர்வில் தொடர்ந்து உரையாற்றுகையில்

மாந்தை சந்தியில் திருக்கேதீஸ்வர கோவிலுக்கான தோரண துழைவாயில் அமைத்தல் விடயமாக நான் தெரிவிக்கும் கருத்தானது

மன்னார் மாவட்டம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க மும் மத மக்களையும்
தன்னகத்தே கொண்டதுடன் அன்று தொடக்கம் இன்று வரை மத முரன்பாடுகளுக்கு அப்பால் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் ஒரு மாவட்டமாகும்.

ஆனால் அன்மைகாலமாக மாந்தை சந்தியில் திருக்கேதீஸ்வர கோவிலுக்கான தோரண வளைவு அமைப்பதில் தொடர்பாக பல முரண்பாடுகள் தோன்றி நீதிமன்றம் வரை
சென்றுள்ளதுடன் இது விடயமாக பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளும் தொடர்கின்றன.

மனிதன் ஒருவன் பிறக்கும்போதே அவனுடன் மதம், இனம், மொழியும் இனைந்து வருகின்றது. இதனால் தன்னுடைய இனத்தை, மொழியை மதித்து ஒருவன் வாழ்கின்றான் என்றால் இதற்கு மதவாதம், இனவாதம் என கூறமுடியாது.

ஆனால் ஒவ்வொருவரும் வாழ்வின் பொறிமுறையோடு ஒன்றுபட்டு வாழ்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

உள்ளுராட்சி மன்ற விதிகளுக்கமைய ஒரு வளைவு அமைப்பதாயின் என்ன என்ன விடயங்கள் சம்பந்தமாக நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதிலிருந்து சற்றுக்கூட சறுக்கி விடாதவாறு பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். அவ்வாறு செயற்படாது போனால் தவிசாளர் எடுக்கும் முடிவுகளுக்கு அனைத்து உறுப்பினர்களும் சபையும் எந்தவிதத்திலும் ஒன்றினைந்து பொறுப்புக்கூற முடியாது.

இந்த வளைவு விடயமாக எமது சபையைச் சார்ந்த தவிசாளர், உறுப்பினர்கள்
பிரச்சனைகளுக்கு உட்படக்கூடாது என்பதற்காகவும் எம் மத்தியில் சமய சமூக முரண்பாடுகள் உருவாகக் கூடாது என்பதற்காகவே நாங்கள் 12 உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு அவசரக் கூட்டத்தைக் கூட்ட தவிசாளரிடம் கடிதம் ஒன்றை கையளித்தோம்.

இந்த வளைவு அமைப்பதில் ஏற்படும் நன்மை தீமை ஒருபுறமிருக்க
பிரச்சனைகளுக்குரிய இரு மத மக்களும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு சபையாகவே எமது சபை திகழ வேண்டும் என்பது எமது அவாவாக இருக்க வேண்டும்.

இது ஒரு மதப் பிரச்சனையாக இருப்பதால் இரு சமயத் தலைவர்களும் கலந்துரையாடி ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுப்பதுடன் நல்லிணக்கம் ஒன்றை உருவாக்குவதில் ஈடுபடுவதே சால சிறந்ததாகும்.
திருக்கேதீஸ்வர ஆலயம் மாந்தை சந்தியிலிருந்து ஆயிரம் மீற்றருக்கு அப்பால் உள்ளது. அதேபோல் மாந்தை மாதா ஆலயம் மாந்தை சந்தியில் அமைந்துள்ளது.

திருக்கேதீஸ்வரத்துக்கு தெற்கு இருந்து வருகை தரும் பக்தர்கள் ஏ 14
பிரதான பாதையிலிருந்து  முனியப்பர் வீதி வழியூடாக ஆலயம் செல்லுகின்றனர். அதேபோல் வடக்கிலிருந்து வரும் பக்தர்கள் சிவபுரம் என்ற வழியாக ஆலயம் வரும் நிலை இருக்கின்றது.

ஆகவே மாந்தை சந்திக்கு அருகாமையில் மாந்தை மாதா ஆலயத்தை அண்டி வளைவு அமைப்பது மாதா ஆலயம் வருபவர்களுக்கு அது ஒரு இடையூறாக அமைவதனால் இவ் மாந்தை சந்தியிலிருந்து 150 மீற்றருக்கு அப்பால் இவ் வளைவு அமைத்தால் நலமிக்கதாக அமையும் என இவ்வாறு தெரிவித்தார்.
திருக்கேதீஸ்வர வளைவு விடயத்தில் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களின் பாதுகாப்புக்காகவே அவசரக் கூட்டத்துக்கு-கொன்சன். Reviewed by Author on July 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.