அண்மைய செய்திகள்

recent
-

“கேட்ட வரம் அளிக்கும் கீர்த்திபெற்ற சீமாட்டி மடு அன்னைக்கு மடுப்பதியில் மகோன்னத விழா---


காட்டில் குடியிருக்கும் கானகச் செல்வியாம் மடு அன்னைக்கு மடுப்பதியில் மகோன்னத விழா---தேசிய இன ஒன்றிப்புக்கு களமாக அமையும் மடுத்திருப்பதி!

“கேட்ட வரம் அளிக்கும் கீர்த்திபெற்ற சீமாட்டி
காட்டில் குடியிருக்கும் கருணையுள்ள என் தாயே பாட்டில் மலர் தொடுத்தேன் பாலோடு தேன் எடுத்தேன் நாட்டில் அமைதி என்ற நதியைத் திருப்பவிடு”


என்று மடு அன்னைக்கு பாமாலை சூட்டினார் சொல்லின் செல்வர் இளவாலை அமுது என்ற நம் ஈழத்துப் புலவன்.
மடுத்திருப்பதி! மக்களனைவரையும் கவர்ந்திழுக்கும் மந்திரச்சொல். வனவிலங்குகள் வாழும் அடர்ந்த காட்டின் மத்தியிலேää எழில்மிகு அன்னையாகää கானகச் செல்வியாக மடு அன்னை கோவில்கொண்டு எழுந்தருளியிருக்கின்றாள். அவளை அண்டிவரும் அனைவருக்கும் அவள் அடைக்கலம் கொடுக்கின்றாள்; அருள்மழை பொழிகின்றாள்.
வுழக்கமாக ஆவணித்திருவிழா பாடசாலை விடுமுறை காலத்தில் வருவதால் ஆவணித்திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பல இலட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மடுத்திருப்பதியின் சுருக்கமான வரலாற்றையும் இத்திருத்தலத்தின் அற்புத ஆற்றலையும் இத்திருத்தலம் வழங்கும் ஆன்மீகப் புதுப்பித்தல் அனுபவத்தையும்ää இத்திருத்தலம் இன்றைய இலங்கைச் சூழமைவில் எவ்வாறு தேசிய இன ஒற்றமைக்கு களமாக அமைகின்றது என்பதையும் இக்கட்டுரை சுருக்கமாக ஆராய முற்படுகின்றது.

மடுத்திருப்பதியின் தொடக்க வரலாறு
ஒல்லாந்தர் இலங்கையை ஆண்ட காலப்பகுதியோடுதான் மடுத்திருப்பதியின் வரலாறும் ஆரம்பமாகின்றது. மன்னாரில் இருந்து 10 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் இருக்கும் மாந்தை என்ற கிராமத்தின் ஆலயம்தான் மடு மாதா திருச்சுருபத்தின் ஆதி இருப்பிடமாகும். ‘செபமாலை மாதா’ என்று அழைக்கப்பட்ட அந்தத் திருச்சுருபம்தான் இன்றைய மடுமாதா.
ஓல்லாந்தருடைய ஆட்சியில் கத்தோலிக்கருக்கு எதிராகக் கொடூரமான வேத கலாபனை ஆரம்பித்தது. இந்தக் கலாபனையில் இருந்து தங்களைக் காப்பாற்றும் பொருட்டும் செபமாலை மாதாவின் திருச்சுருபத்தைப் பாதுகாக்கும் பொருட்டும் மாந்தை மக்கள் அங்கிருந்து புறப்பட்டனர். குருக்களின் துணையில்லாத அந்த வேளையிலும் மாந்தையில் இருந்த 20 பக்தியுள்ள குடும்பங்கள் செபமாலை மாதாவின் திருச்சுருபத்தைத் தூக்கிக்கொண்டு அடர்ந்த வன்னிக் காட்டினுள் புகுந்தனர். திசை தெரியாது அங்கும் இங்கும் அலைந்தனர். இறுதியாக ‘மருதமடு’ என்ற இடத்திற்கு எவ்வித ஆபத்தும் இன்றி மாதாவின் வழிநடத்தலோடு வந்து சேர்ந்தார்கள்.
இவ்வேளையில் யாழ்ப்பாண நகரில் ஒல்லாந்தருடைய வேதகலாபனை தொடர்ந்துகொண்டிருந்தது. எழுநூறு கிறிஸ்தவர்கள் மட்டில் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக யாழ்ப்பணத்திலிருந்து வன்னிக்காட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் பூநகரியைக் கடந்து பயத்தோடும்; பதட்டத்தோடும் அடர்ந்த காட்டினுள் அலைந்துகொண்டிருந்தார்கள். ஏற்கனவே அங்கு வந்திருந்த மாந்தைக் கிறிஸ்தவர்களோடு இவர்களும் சேர்ந்து அன்னையின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார்கள்.

யாழ்ப்பாணத்திலிந்து தப்பிவந்தவர்களில் போர்த்துக்கேய தளகர்த்தனின் மகளாகிய ‘எலேனா’ என்பவளும் ஒருவர். இவள்தான் முதன் முதலில் மடு அன்னைக்கு சிறிய ஆலயம் அமைத்தாள். இவளுடைய இந்த நற்செயலுக்காக கிறிஸ்தவர்கள் இந்த இடத்தை ‘சிலேனா மருதமடு’ என்று அழைத்தார்கள். இந்த இடம்தான் இன்றைய மடுத்திருப்பதி ஆகும்.
அருளும் ஆற்றலும் நிறைந்த மடு மண்
மடுத்திருப்பதியின் அற்புத ஆற்றல் உலகறிந்த விடயமாகும். மடு அன்னையின் பரிந்துரையால் பல அற்புதங்கள் நடைபெறுகின்றன. அதனால்தான் இப்பதிநோக்கி மக்கள் இலட்சக்கணக்காகக் கூடுகின்றனர். பொன் விளையும் பூமி என்று சொல்வார்களே! அதுபோலதான் மடு அன்னையின் திருப்பதியில் உள்ள மண்கூட மருந்தாகத் திகழ்கின்றது. ஆம்ää இந்த மண் அருள்நிறைந்த மண்! ஆற்றல் நிறைந்த மண்! இத்திருத்தல மண்ணுக்கு சிறப்பான பெருமை உண்டு. உலகின் எங்குமே இல்லாத ஒரு நடைமுறை இங்கு உள்ளது. அதுதான் இத்திருத்தலத்திலிருந்து பெறப்படும் மண் நோய் தீர்க்கும் அருமருந்தாக விளங்குவது.
இத்திருப்பதியின் வளாகத்திலிருந்து பெறப்படும் மண் ஆசீர்வதிக்கப்பட்டு பிரதான ஆலயத்தின் ஒரு மூலையில் அதற்கென அமைக்கப்பட்ட ஒரு தொட்டியில் வைக்கப்படுகின்றது. இந்த மண்ணை மக்கள் தம் வீடுகளுக்கு எடுத்துச்செல்கின்றார்கள். குணமளிக்கும் மருந்தாக இந்த மண்ணைப் பயன்படுத்துகின்றார்கள்.

‘கோயில் மருந்து’ என்று இது அழைக்கப்படுகின்றது. நோய்க்கு மருந்தாகவும் தீய சக்திகளில் இருந்து பாதுகாப்புப்பெறும் கவசமாகவும் மக்கள் இதைக் கருதிப் பயன்படுத்துகின்றார்கள். இந்த மண்ணை நீரில் கரைத்து நோயாளிகளுக்கு குடிக்கக் கொடுக்கின்றாக்ள். நெற்றியில் நெஞ்சில் பூசுகின்றார்கள். தீமைகள் தம்மை அணுகாவண்ணம் தம் வீட்டு மூலைகளில் தெளிக்கின்றார்கள். மடுத்திருப்பதியின் புனிதத்திற்கும் அருள் வளத்திற்கும் சிறப்பான ஒரு எடுத்துக்காட்டாக ‘கோயில் மருந்து’ என்று அழைக்கப்படும் இந்த மடு மண் அன்று தொடக்கம் இன்று வரை திகழ்கின்றது.
பாம்பு தீண்டிய நிலையில் இங்கு கொண்டுவரப்படும் மக்கள் இப்பதியை அடைந்ததும் குணம் பெறுகின்றார்கள் என்பதும் மக்களின் ஆழமான விசுவாசமாகும்.
மடு அன்னை குறைவுபடாத தாயன்புக்கு இலக்கணம்
“கருணை மழை பொழியும் கானகச் செல்வி” என மடு அன்னை அழைக்கப்படுகின்றாள். குறைவுபடாத தாயன்புக்கு இலக்கணமாக இவள் விளங்குகின்றாள்.
“சொந்த சுமையைத் தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்.” ஏன்ற விரக்தியின் வார்த்தைகள்தான் இன்று எப்பக்கத்திலும் ஒலிக்கின்றது. துன்பங்கள் துயரங்கள். இழப்புக்கள் மத்தியில் மக்கள் ஆறுதல் தேடித் தஞ்சமடையும் தாயாக மடு அன்னை விளங்குகின்றாள்.

“தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை” என்று சொல்வார்களே! அத்தகையதோர் உணர்வுடன்தான் மக்கள் இத்திருப்பதி நோக்கி ஓடோடி வருகின்றார்கள்.
தாயன்பு - அது தனி அன்பு! அது தனித்துவமான அன்பும்கூட! அம்மை அப்பனாக விளங்கும் இறைவனுடைய தாயன்பை திருவிவிலியம் தெளிவாகச் சொல்கிறது. “நீங்கள் மார்பில் அணைக்கப்படுவீர்கள். மடியில் வைத்துச் சீராட்டப்படுவீர்கள். ஒரு தாய் தன் குழந்தையைத் தேற்றுவதுபோல நானும் உங்களைத் தேற்றுவேன்.” இறைத் தந்தையின் இத்தகைய அன்பையே மடு அன்னையும் பிரதிபலிக்கின்றாள்.
“பெரும் சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள்.

உங்களை நான் இளைப்பாற்றுவேன்” என்று நம் ஆண்டவர் இயேசு கூறினாரே! அந்த ஆண்டவன் இயேசுவின் தாயல்லவா நம் மடு அன்னை! தனயனின் அதே வார்த்தைகளை தாயும் கூறி அழைக்கின்றாள். அந்த அன்னையின் அருகில் இருக்கää அவளது பாதத்தில் அமர்ந்து தம் குறைகளைச் சொல்ல அவளது தாயன்பில் திழைத்திருக்க அவளது பிள்ளைகள் இலங்கையின் நாலா திசைகளில் இருந்தும் வந்து குவிகின்றார்கள். அன்னையிடமிருந்து ஆறுதலையும் தேறுதலையும் பெறுகின்றார்கள்.

ஆன்மீகப் புதுப்பித்தல்
மடுத்திருப்பதிக்கு வருவோரிடம் ஓர் ஆழமான ஆன்மீகப் புதுப்பித்தல் நடைபெறுவது ஒரு சிறப்பான அம்சமாகும். இதற்கான அகச்சூழலும் புறச்சூழலும் மடுத்திருப்பதியிலே நிறைவாக அமைந்துள்ளன. வெறும் பொழுதுபோக்கிற்காகவோää அல்லது கேளிக்கைக்காகவோ மக்கள் இங்கு வருவதில்லை. தமது ஆன்மீக வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தவேண்டும்ää புதிய வாழ்வைக் காண வேண்டும் என்ற தாகத்தோடும் வேகத்தோடும்தான் மக்கள் இத்திருப்பதியை நோக்கி வருகின்றார்கள்.
இத்திருத்தலத்தின் நுழைவுப் பகுதியை அண்மித்தவுடனேயே திருப்பயணிகள் செபமாலையைச் செபிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அல்லது தேவதாய்க்கு பாடல்களைப் பாடத்தொடங்கிவிடுவார்கள். மிகுந்த பக்தி சிரத்தையோடு மடு அன்னையின் புண்ணிய பூமியிலே தம் பாதங்களைப் பதிப்பார்கள்.
இத்திருப்பதியிலே தங்கியிருக்கும் நாட்களில் தங்களுடைய அதிகமான நேரங்களை அன்னையின் பாதத்தில் அமர்ந்திருந்து செபமாலை செபிப்பதிலே செலவிடுவார்கள். எல்லாவற்றையும்விட மேலாக ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெற்று அன்னையின் திருத்தலத்தில் ஓர் ஆன்மீகப் புதுப்பித்தல் அனுபவத்தைப் பெறுகின்றார்கள்.
ஒவ்வொரு நாள் நவநாள் வழிபாட்டுக்குரிய கருப்பொருட்கள் மிகவும் கவனமாகத் தேர்வுசெய்யப்பட்டு அதன் அடிப்படையில் காலைத் திருப்பலியும் மாலை நற்கருணை ஆராதனையும் மறையுரையும் இடம்பெறும். ஓவ்வொரு நாளும் மூன்று வேளையும் ஒலிபெருக்கி ஊடாக செபமாலை ஒலித்துக்கொண்டே இருக்கும். அன்னையைப் புகழும் பாடல்கள் காற்றில் கலந்து வந்துகொண்டே இருக்கும். இப்பதியில் தங்கியிருக்கும் நாட்களில் திருப்பயணிகள் ஆன்மீகப் பாதையில் வழிநடத்தப்படுகின்னறார்கள்.

இப்பதியிலிருந்து தமது இல்லிடம் நோக்கிச் செல்லும்போது ஒரு ஆன்மீகப் புதுப்பித்தல் அனுபவத்தோடுதான் அவர்கள் செல்கின்றார்கள்.
மடுத்திருப்பதி ஓற்றுமையினதும் ஒன்றிப்பினதும் மையம்
மடுத்திருப்பதி ஓற்றுமையினதும் ஒன்றிப்பினதும் மத்திய நிலையமாகத் திகழ்கின்றது. ஆம்! எக்குலத்தவராயினும் எம்மொழியினராயினும் எவ்வினத்தவராயினும் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே என்ற உணர்வுடன் இத்திருப்பதி அனைத்து மக்களையும் வரவேற்கின்றது.
இத்திருப்பதியின் நுழைவாயிலில் அமைந்துள்ள மடு அன்னையின் திருச்சுருபம் ‘வரவேற்பு மாதா’ என்று அழைக்கப்படுகின்றது. மடு அன்னை இரு கரங்களையும் விரித்தவளாய் தன் திருப்பதி நோக்கி வரும் அனைவரையும் தன் கைகளை நீட்டி அழைக்கும் தோற்றத்தோடு விளங்குவது கண்ணுக்கினிய காட்சியாகும்.

எல்லா மக்களையும் வரவேற்று ஒன்றுசேர்க்கும் இடமாக –
ஒற்றுமையினதும் ஒன்றிப்பினதும் மையமாக இத்திருப்பதி திகழ்கின்றது. யுத்தம் முடிவடைந்துவிட்டது என்று சொல்லப்பட்டாலும் யுத்தத்தின் சத்தங்கள் மட்டும்தான் ஓய்ந்துள்ளன. யுத்தத்தின் வடுக்கள் இன்னும் மாறவில்லை. மனக்காயங்கள் இன்னும் ஆறவில்லை. இந்நிலையில் மக்கள் மத்தியில் மன்னிப்புää ஒப்புரவுää சமாதானம் போன்ற உயர்ந்த விழுமியங்களை ஏற்படுத்துவற்கு அவர்கள் ஒன்றுசேரக்கூடிய ஒரே இடம் இந்த நாட்டில் மடுத்திருப்பதிதான்.
இனமத பேதமின்றி மக்கள் ஒன்றுசேர்ந்து வந்த ஓரு தாய் மக்களாக ஒரே குடையின்கீழ் நிற்பது மடுத்திருப்பதியில்தான். ஆகவேதான் அன்று தொட்டு இன்றுவரை மடுத்திருப்பதி இந்த நாட்டு மக்கள் மத்தியல் ஒற்றுமைய.ஒன்றிப்பை.சமாதானத்தை ஏற்படுத்துவதில் பாரிய பங்களிப்பை ஆற்றிவருகின்றது. ஒருவர் மற்றவரை எதிரியாக நினைத்துக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில் ஒருவர் மற்றவரைப் பார்க்கää சிரிக்கää பேச புரிந்துகொள்ள தக்கதோhர் தளமாக மடுத்திருப்பதி விளங்குகின்றது.
நிறைவாக
“மருதமடு மாதாவே மனுக்குலத்தின் தாயாரே
கருணைஅருட் செபமாலை கனிந்திட நாம் செய்தாயே!”


காற்றில் கலந்துவரும் இக்கானத்தைக் கேட்கும்போதெல்லாம் மடுத்திருத்தலத்தின் நினைவுகள் நம் நெஞ்சில் நிழலாடும். மடு அன்னையின் மாறாத தாயன்பிலே நம் உள்ளம் உறவாடும். ஆம்! மடு அன்னை மனுக்குலத்தின் தாய்தான்! பாவப்பட்ட இம்மனுக்குலத்திற்கு அவள்தான் நம்பிக்கை நட்சத்திரம்.

“பவம் செய்தோம் பாரினிலே
தவம் செய்தோம் உன் தயவால்.
பட்சமுடன் பாரம்மாää பாவியெம்மைக் காரம்மா!”


இந்த வரிகள் பாவ நாட்டத்தால் சீரழிக்கப்பட்ட மானிடத்தின் உள்ளக் குமுறல் பாவத்தில் சிக்குண்டு தவிக்கும் மனுக்குலத்தின் இதய ஓலம்! தாயைச் சரணடையும் ஒரு சேயின் உணர்;ச்சிமிக்க உச்சரிப்புக்கள்!

ஊதாரி மகனாய் - ஊதாரி மகளாய் அலைந்து திரியும் இந்த மானிடத்திற்கு மரியன்னையின் தாயன்பே ஒரே நம்பிக்கை! ஆம் அவள்தான் பாவிகளின் அடைக்கலம்! நமக்காக இறைவனிடம் பரிந்து பேசும் முதன்மையான பரிந்துரையாளர்.

கன்னி மரியாள் களங்கமற்ற நீர்ச்சுனை. இறைமகனையே தன் உதரத்தில் சுமந்த திருப்பேழை. கடவுளையே தாங்கி நின்ற பதிர்ப்பாத்திரம். ஆன்மாவோடும் உடலோடும் விண்ணேற்றமடைந்த அன்னை மரியாவுக்கு மடுப்பதியில் பெருவிழா.

அலகையை வென்று அகிலத்தைக் காத்த அந்த அன்னைக்கு இறைவன் அளித்த அன்புப்பரிசு அவரை விண்ணகத்திற்கு அழைத்துக்கொண்டது.
தாய் விண்ணேறிச் சென்றால் சேய்கள் நமக்கெல்லாம் அது பெருவிழாதானே! அதனால்தான் மடுத்திருப்பதி விழாக்கோலம் பூண்டுள்ளது. மக்கள் வெள்ளத்தினால் நிரம்பி வழிகின்றது.
“மருதமடு மாதாவே மனுக்குலத்தின் தாயாரே” என்ற கான வரிகள் காற்றில் என்றும் கலக்கட்டும். அதன் வழி மடுத்தாயின் புகழ் என்றும் நிலைக்கட்டும்
…………………………….
-அருட்திரு தமிழ் நேசன் அடிகளார்-


“கேட்ட வரம் அளிக்கும் கீர்த்திபெற்ற சீமாட்டி மடு அன்னைக்கு மடுப்பதியில் மகோன்னத விழா--- Reviewed by Author on August 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.