அண்மைய செய்திகள்

recent
-

கௌதமாலா புதிய அதிபர் சவால்களை சமாளிப்பாரா.....?


பாதுகாப்பு வாதம், ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ போன்ற தேசியவாதக் கொள்கைகளை முன்வைத்து அடுத்த தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ட்ரம்ப், கெளதமாலா தேர்தலைக் கூர்ந்து கவனித்தார்.

சான்ட்ரா டாரஸ்-
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் உற்றுநோக்கிய ஒரு தேர்தல், மத்திய அமெரிக்க நாடான கெளதமாலா அதிபர் தேர்தல். ஏனெனில், பெருகிவரும் குடியேறிகளின் வருகையைத் தடுக்க, அந்த நாட்டை மிரட்டிப் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகிறவர் புதிய அதிபர். அமெரிக்காவின் தெற்கு எல்லை நோக்கிப் படையெடுக்கும் குடியேறிகளை அதிகளவில் உற்பத்தி செய்யும் பிரதேசமாக அது மாறியிருப்பதால், அமெரிக்காவின் கழுகுப்பார்வை, கெளதமாலாவில் பதிந்துள்ளது.

ஆகஸ்ட் 11-ம் தேதியன்று கெளதமாலா நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், வலதுசாரி வாமஸ் கட்சியைச் சேர்ந்த அலான்ட்ரோ யமாடே (63) வெற்றிபெற்றுள்ளார். மருத்துவரான யமாடே, சிறைத்துறையின் முன்னாள் இயக்குநர்; நான்கு முறை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டதால் ‘நிரந்தர வேட்பாளர்’ என்ற கிண்டலுக்கு ஆளானவர்; ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தோற்றவர். சென்ற அதிபர் தேர்தலில், நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டு படுதோல்வி அடைந்தார். இந்தத் தேர்தலிலும் முதல் சுற்றில் 13.92 சதவிகித வாக்குகள் பெற்று பின்தங்கியிருந்தார். இரண்டாவது சுற்றில் 59 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.


சோஷலிச ஜனநாயக தேசிய நம்பிக்கைக் கட்சியின் சார்பில் முன்றாவது முறையாகப் போட்டியிட்ட சான்ட்ரா டாரஸ் (63), மீண்டும் தோல்வியைத் தழுவியுள்ளார். முதல் சுற்றில் 26 சதவிகித வாக்குகள் பெற்று முதல் இடத்தில் இருந்த அவர், இரண்டாவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் ஆல்வரொ கோலோனின் மனைவியான சான்ட்ரா, பதவிக்காக தன் கணவரையே விவாகரத்து செய்தவர்.

அலான்ட்ரோ யமாடே
அரசியல் அமைப்புச் சட்டப்படி, அதிபரின் நெருங்கிய உறவினர் யாரும் அதிபர் பதவிக்கு வரக்கூடாது. அதிபர் தேர்தலில் போட்டியிடு வதற்கு இந்தச் சட்டம் தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக, கடந்த அதிபர் தேர்தலின்போது தன் கணவரை விவாகரத்து செய்தார் சான்ட்ரா. அப்போது, தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜிம்மி மொராலெஸிடம் தோற்றார்.

மொராலெஸின் பதவிக்காலம் 2019-ம் ஆண்டில் முடிவடைந்ததால், கெளதமாலா தேர்தலைச் சந்தித்தது. இரண்டாவது முறை போட்டியிட அதிபருக்குத் தடை இருப்பதால், மொராலெஸ் இந்த முறை போட்டியிடவில்லை. மக்களின் செல்வாக்கைப் பெற்ற தலைவர்கள் நிற்க முடியாமல்போனதால், வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் அதிக ஆர்வம் காட்டவில்லை.


மக்கள் செல்வாக்கைப் பெற்ற முன்னாள் அட்டர்னி ஜெனரல் தெல்மா ஆல்டானா, முன்பு அரசு வழக்கறிஞராக இருந்தபோது தவறு செய்ததாகக் கூறி, போட்டியிடத் தடைவிதித்தது நீதிமன்றம். ஊழலுக்கு எதிராகப் போராடியவர் தெல்மா. பல ஊழல் அரசியல்வாதிகளை, தன் திறமையான வாதத்தால் சிறைக்கு அனுப்பியவர். அவருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்ட தால், போட்டியிடாமல் நாட்டைவிட்டு வெளியேறினார்.

பிரபலமான முன்னாள் ராணுவ சர்வாதிகாரி எஃப்ரான் ரியாஸ் மான்டினின் மகள் சூரி ரியாஸ் போட்டியிடவும் தடைவிதிக்கப்பட்டது. கடந்த ஜூன் வரை அவர்தான் முன்னிலையில் இருந்தார்.

சான்ட்ரா டாரஸ்
சான்ட்ரா டாரஸ்
மூன்று முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மைய வலதுசாரி கட்சியின் வேட்பாளர் மாரியோ எஸ்ட்ராடா (58), போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்டார். அபிமான வேட்பாளர்கள் களத்தில் இல்லாததால். வாக்காளர்கள் விரக்தியடைந்தனர். விளைவு, முதல் சுற்றில் 19 வேட்பாளர்களில் ஒருவர்கூட 50 சதவிகித வாக்குகள் பெறவில்லை.

கடந்த 1996-ம் ஆண்டு உள்நாட்டுப் போருக்குப் பிறகு, ஏழ்மை, பட்டினி, வன்முறை ஆகியவை கெளதமாலாவை ஆட்டிப்படைக்கின்றன. உலக வங்கியின் 2016 தரவுகளின்படி, கெளதமாலாவில் நடக்கும் கொலைகள் விகிதம், அமெரிக்காவைவிட ஐந்து மடங்கு அதிகம். வன்முறை, ஆள்கடத்தல், கொலை, ஆயுதத்தாக்குதல்கள் நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றன.


விண்ணைத் தொட்ட விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம், பாதுகாப்பின்மை போன்றவை மக்களை வதைத்தன. உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழல் நிலவுவதால், மக்கள் கூட்டம் கூட்டமாக நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கினர். அவர்களில் பெரும்பாலானோர் சேருமிடம் அமெரிக்க - மெக்ஸிகோ எல்லை.

இதைத் தடுக்க, கடந்த முறை அதிபராக இருந்த மொராலெஸை மிரட்டி `பாதுகாப்பான மூன்றாம் பாதுகாப்பு நாடுகள்’ என்று ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது அமெரிக்கா. இதன்படி, அமெரிக்காவில் அடைக்கலம் தேடி வருபவர்கள் முதலில் சொந்த நாட்டில் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்காமல் அமெரிக்கா வருபவர்களை, விண்ணப்பிக்கத் தகுதியில்லாதவர்கள் என அமெரிக்கா நிராகரித்துவிடும்.

அகதிகளாக மக்கள் வெளியேறுவதைத் தடுக்க முடியாமல் தவிக்கும் எல் சால்வடார், ஹோண்டுராஸ் நாடுகளைக் கட்டாயப்படுத்தி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தது அமெரிக்கா. இந்த ஒப்பந்தம் கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், கெளதமாலாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதன் விதி, தற்போதைய அதிபரின் கையில் இருக்கிறது.

அதனால்தான், பாதுகாப்பு வாதம், ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ போன்ற தேசியவாதக் கொள்கைகளை முன்வைத்து அடுத்த தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ட்ரம்ப், கெளதமாலா தேர்தலைக் கூர்ந்து கவனித்தார். ‘இந்த ஒப்பந்தத்தில் மொராலெஸ் கையெழுத்திடக் கூடாது’ என்று கடுமையாக எதிர்த்த யமாடேயின் முன் நிற்கும் சவால்கள்... இந்த ஒப்பந்தமும், பொருளாதாரத் தடை விதிக்கத் துடிக்கும் ட்ரம்பும் மட்டுமல்ல; சொந்த நாட்டைவிட்டு மக்கள் வெளியேறக் காரணமான வறுமையும், வன்முறையும்தான்!

கௌதமாலா புதிய அதிபர் சவால்களை சமாளிப்பாரா.....? Reviewed by Author on August 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.