அண்மைய செய்திகள்

recent
-

"முருகனை வழிபடாத குடும்பத்தில் பிறந்து, முருகனைப் போற்றிப் பாடிப் பரவசமானேன்" -கவிஞர் வாலி


நான் ஒரு இந்து ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தவன், ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்தவன்.

எப்படி எங்கள் குடும்பம் இருந்திருக்கும் என்று சொல்ல தேவையில்லை.

ஆனால், நான் இன்று நெற்றியில் குங்குமமும், விபூதியும் பூசுகிறேன். இது என் வாழ் நாள் முழுவதும் இருக்கும்.

காரணம், நான் ஸ்ரீரங்கத்தில் இருந்த போது, சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டு, கடன்கள் பட்டு பல வருடங்களாக வாழ்ந்த நேரம் அது.

ஒருநாள் மதியம் திருவானைகா சிவன் கோவிலில் ( ஸ்ரீரங்கத்துக்கு நேர் எதிரே உள்ளது.) கொடுக்கும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட நடந்தே சென்றுவிட்டேன்.

சாப்பிட்டுவிட்டு அகிலாண்டேஸ்வரி சன்னதியில் வெளியே உள்ள மண்டபத்தில் "அம்மா நீ ஒருத்தி தான் எனக்கு உதவ முடியும்" என்று மனதில் கூறி அவளை வெளியில் இருந்தவாறே வேண்டி கும்பிட்டுவிட்டு களைப்பாற அமர்ந்தவன் எப்படியோ படுத்து உறங்கிவிட்டேன்.

அன்னையின் மடியில் படுத்து உறங்கியது போன்ற உணர்வு அன்று எனக்கு ஏற்பட்டது.

கனவிலே முருகன் வந்து 'என்னைப் பற்றி பாடு' என்றான்.

அன்னையின் எச்சில் என் உதட்டிலும், நாவிலும் பட்டு தெறித்தது.

'திடுக்'கிட்டு விழித்துக்கொண்டேன்.

'அம்மா, முருகா' என்று சொல்லி வணங்கிவிட்டு நடையாகவே வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டில் அனைவரும் 'எங்கே சென்றுவிட்டாய்? சாப்பிட்டாயா?' என்று கேட்டார்கள்.

'நண்பன் வீட்டில் அம்மா சாப்பாடு கொடுத்தார்கள்' என்று சமாளித்து விட்டேன்.

வீட்டில் சொல்ல முடியாது.

'அதுவும் சிவன் கோவிலுக்கு போனியா?' என்று வேற கேள்வி வரும். நண்பர்களிடம் மெதுவாக சொன்னேன்.

அங்கு கொடுத்ததோ ஒரு கையளவு பிரசாதம் தான், ஆனால் எனக்கு வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வு,

பிறகு சாப்பிட்ட களைப்பு போல அங்கேயே தூங்கியதையும் சொன்னேன். கிண்டல் அடித்தார்கள், கற்பனை, கற்சிலை என்று எல்லாம் என்னிடம் நகையாடினார்கள்.

ஆனால் என் உள்ளுணர்வு சொல்லியது இது உண்மை என்று.
.
எனக்கு TMS அவர்களின் குரல் மிகவும் பிடிக்கும். அவரின் விலாசத்தை கஷ்டப்பட்டு வாங்கிவிட்டேன். நண்பர்கள் சொன்ன வரிகள் என்னை உறுத்தியது.

அதன் வரியில் முருகன் மேல் பாடல் புனைந்து TMS க்கு போஸ்ட் கார்டு லே எழுதி அனுப்பிவிட்டேன். அகிலாண்டேஸ்வரி தாயே நீயும் உன் மகனும் தான் இனி எனக்கு துணை என்று வேண்டிக்கொண்டேன்.
.
TMS இருக்கும் பிஸியில் என் போஸ்ட் கார்டை எங்கு பார்ப்பார் என்று நினைத்து மறந்துவிட்டேன்.

ஆனால் என் தாயின் அருள், முருகனின் கருணை TMS என் கார்டை பார்த்து, அவரே அதற்க்கு மெட்டும் போட்டு பாடிவிட்டார்.

பிறகு எனக்கு அவரிடம் இருந்து கடிதம் வந்தது, 'என் முருகன் பாடலை நீ எழுதி கொடுத்தாய், மிகவும் நன்றாக இருந்தது, நானே இசை அமைத்து பாடி உள்ளேன், வரும்  திங்கள் அன்று வானொலியில் காலை 06.30 மணிக்கு ஒளிபரப்பாகும், கேட்டுவிட்டு உன் கருத்தை அனுப்பு, மெட்ராஸ் க்கு வா, உனக்கு நான் சன்மானம் தரணும், இது போன்று பாடல்கள் நிறைய நீ எழுது' என்று போட்டு இருந்தார்.

எனக்கு நம்ப முடியவில்லை, சந்தோசத்தில் 'தாயே, முருகா' என்று வீட்டிலேயே உரக்க கூவிவிட்டேன். வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரே ஆச்சர்யம், கோபம், என்னது என்று கோபமாக கேட்டார்கள்.

நான் பதில் பேசவில்லை, கடிதத்தை கொடுத்தேன். அனைவரும் வாங்கி படித்தார்கள்.

அவர்களுக்கும் சந்தோசம் தான்.

முகத்தில் தெரிந்தது, ஆனால் வெளியில் காட்டி கொள்ளாது இருந்துவிட்டார்கள்.

அப்பா மட்டும் என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.

பதில் சொல்லவில்லை.

ஆனால் எனக்கு உற்ச்சாகம் அளித்தார், அப்போதும் அவர்
ரெங்கநாதனை பற்றி ஒரு பாட்டு எழுதி TMS பாடணும்
என்றார்.

எனக்கு உள்ளூர சிரிப்பு, இதுவரை சாப்பாடு போடாத ரெங்கநாதனை பற்றி நான் என்ன எழுதணும் என்று நினைத்தேன்.

அப்பா மெட்ராசுக்கு செல்ல உத்தரவு கொடுத்துவிட்டார்.

நண்பர்கள் தான் அதிக அளவு சந்தோஷப்பட்டார். மெட்ராஸ் சென்றேன், TMS சை பார்த்தேன், பாடலுக்குண்டான அன்பளிப்பாக சின்ன தொகையை கொடுத்து என்னை 'நீ ஏன் சீனிமாவுக்கு பாடல் எழுத கூடாது?' என்று கேட்டார்.

'நான் என்ன வர மாட்டேன் என்றா சொன்னேன்? கூப்பிடுங்கள் உடனே உங்கள் பின்னால் ஓடி வருகிறேன்' என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.
.
ஒருநாள் அவர் என்னை விஸ்வநாதனிடம் அறிமுகப்படுத்தி இவனை சரியாக பயன்படுத்து, நன்றா எழுதுகிறான் என்று சொல்லி வைத்தார்.

என் மனதில் தோன்றியது காசி விஸ்வநாதர் தான். அம்மையும் அப்பனும் எனக்கு கருணை புரிந்து விட்டார்கள் என்றே நினைத்தேன்.

ஆம் விஸ்வநாதன் உதவியால் நான் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்த நான், சாப்பாட்டில் கை வைக்க நேரமில்லாமல் எழுதி கொடுத்துக் கொண்டே இருந்தேன்.''

- கவிஞர் வாலி.

வாலியின் முதல் முருகன் பாடல்:-
.
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன் - நீ
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்

அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
.
- கற்பனை என்றாலும்
.
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே

கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
.
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்

"முருகனை வழிபடாத குடும்பத்தில் பிறந்து, முருகனைப் போற்றிப் பாடிப் பரவசமானேன்" -கவிஞர் வாலி Reviewed by Author on September 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.