அண்மைய செய்திகள்

recent
-

தமிழீழ அரசு பிரகடனம் தொடர்பில் ராஜீவ் காந்தியின் நிலைப்பாடு! தவறவிட்ட தமிழ் அரசியல்வாதி! -


இணைந்த வடகிழக்கை தமிழீழ அரசு எனப் பிரகடனப்படுத்தி அறிவிப்பொன்றை விடுக்குமாறும் அதனைத் தான் அங்கீகரிப்பதாகவும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி இரகசிய தூது அனுப்பிய போதிலும் வடகிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் அந்த சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டார் என இந்திய அரசியல்வாதியான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்திருந்த அவர் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
ஆகக் குறைந்த அதிகாரங்களுடன் இயங்கிய மாகாண சபைகள் ஆரம்ப நிலைக்குத் திரும்பிவிட்டன.
இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரு காரணமாகும். கூட்டமைப்புக்கு மாற்றுக் கட்சி தேவையாகும். இந்நிலையில் புலிகள் அழிந்தது கூட நல்லதுதான்.

நீங்கள் கூறும் மாற்றுக் கட்சிக்கு கூட்டமைப்புக்கு மாற்றுக் கட்சியாகவே வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி இருக்கின்றதே..?
அது புலிகளின் நிழலாகவே இருக்கின்றது. பயங்கரவாதிகள் என்று கூடச் சொல்லலாம். இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். ஏனென்றால் ரணில், சிறிசேன கூட்டரசாங்கத்தில் தமிழர்கள் இழந்தவையே அதிகமாகும். வடக்கு, கிழக்கு தமிழர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்.

நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்றால்..?
ஒரு பட்டியலை வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதை விடவும் ஆட்சிப்பீடமேறும் அரசாங்கத்திற்கு பட்டியலிட்டு அவற்றைச் செய்வதற்கு வலியுறுத்த வேண்டும். இப்போதும் அப்படித்தான், கூட்டமைப்பு பட்டியலிட்டுக் கொண்டிருக்கின்றதென அறிய முடிகின்றது.
பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச போட்டியிட்ட போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பொன்றை நான் ஏற்படுத்திக் கொடுத்தேன். சந்திப்புக்குச் சென்றவர்கள் நீண்ட பட்டியலொன்றை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.
ஆட்சிப் பீடம் ஏறுவதற்கு முன்னர் அரைவாசியையும் ஆட்சிப் பீடம் ஏறியதன் பின்னர் எஞ்சியவற்றையும் செய்வதற்கும் மகிந்த உறுதியளித்திருந்தார்.
எனினும் மகிந்த தோற்கடிக்கப்பட்டு விட்டார். தமிழர்களின் முழுமையான ஆதவை அன்றிலிருந்தே மகிந்த எதிர்பார்த்திருக்கின்றார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சீனாவின் கைக்கூலியென்ற விமர்சனம் முன்வைக்கப்படுகின்றதே..?
சகல நாடுகளுடனும் நட்புறவைப் பேண வேண்டும். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான கடனை மகிந்த அரசாங்கம் சீனாவிடம் இருந்து பெற்றுக் கொண்டது. ஆனால் ரணில், சிறிசேன அரசாங்கம் அதனை சீனாவுக்கே குத்தகைக்கு விட்டு விட்டது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி இரகசிய தூது அனுப்பியிருந்ததாக கூறியிருந்தீர்கள். யாரிடம் அனுப்பியிருந்தார்..?
வேறு யாரிடம் அனுப்பினார். வேறு யார் தான் இருந்தனர். என்னிடம்தான் அனுப்பியிருந்தார். அந்த விடயத்தை வரதராஜபெருமாளிடம் தெரிவித்தால் அவர் செய்வாரா இல்லையா என்ற சந்தேகம் என்னுள் எழுந்தது.
ராஜூவ் காந்திதான் இவ்வாறு செய்யச் சொன்னாரென, வரதராஜப் பெருமாள் கூறிவிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் யோசித்துவிட்டுதான் ஒரு முடிவுக்கு வந்தேன்.
எனக்கு கிடைத்த இரகசியத் தூதை வரதராஜபெருமாளின் காதுகளுக்குக் கொண்டுச் சென்றேன். எனினும் ராஜூவ் காந்தியின் ஆட்சி கவிழ்ந்த நிலையிலேயே இணைந்த வடகிழக்கை தமிழீழ அரசாக வரதராஜ பெருமாள் பிரகடனப்படுத்தினார். ஆட்சி இல்லாத நிலையில் ராஜூவ் காந்தியால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

மீண்டும் வலியுறுத்துவீர்களா..?
எதற்கு தமிழீழ அரசுக்கா..? புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர். மாகாண சபைகளும் ஆரம்ப நிலைக்கு சென்றுவிட்டன. இனிமேல் இந்தியாவுக்கு வலியுறுத்த வேண்டியதில்லை. இலங்கையின் அரசியல் விடயத்தில் இந்தியா தலையிடாது என குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ அரசு பிரகடனம் தொடர்பில் ராஜீவ் காந்தியின் நிலைப்பாடு! தவறவிட்ட தமிழ் அரசியல்வாதி! - Reviewed by Author on September 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.