அண்மைய செய்திகள்

recent
-

ஒவ்வொரு மதங்களிலுமுள்ள மதத் தீவரவாதிகளாலேயே மதப் பிரச்சனைகள் தோன்றுகின்றன--தமிழ் சங்கத் தலைவர் அருட்பணி தமிழ் நேசன் அடிகளார்

ஒவ்வொரு மதங்களிலும் சமய தீவிரவாதிகள் காணப்படுகின்றனர். இவர்களாலாலேயே சமயப் பிரச்சனைகள் தலைதூக்கி வருகின்றன. இவர்களை இனம் கண்டு வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பட்சத்தில் சமயங்களுக்கிடையே உருவாகும் பிரச்சனைகளை கட்டுப்படுத்த முடியும் என மன்னார் தமிழ் சங்கத் தலைவர் அருட்பணி தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

செவ்வாய் கிழமை  10.09.2019 தேசிய சமாதானப் பேரவையும் மற்றும்
தொடர்பாடலுக்கான பயிற்சி நிலையம் அமைப்பும் இணைந்து மதங்களுக்கு இடையே நல்லிணத்தையும் சக வாழ்வையும் முன்னெடுத்து வரும் நோக்குடன் பல தரப்பட்ட முக்கியஸ்தர்களை  சந்தித்து அவர்களின் கருத்துக்களை பெற்ற நிகழ்விலே அருட்பணி தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து தனது கருத்தில் மேலும் தெரிவிக்கையில்

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களாகிய நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்த நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு குடி பெயர்ந்து போகப்போவதில்லை. ஆகவே நாம் இங்கு இருக்கும்போது ஒருவருடைய முகத்தை ஒருவர் பார்க்கத்தான் வேண்டும். இந்த மண்ணில்தான் நாம் வாழப்போகின்றோம். இது அடிப்படையான விடயம்.

ஆனால் இங்கு இருக்கும் மக்களின் ஒற்றுமையை குழைப்பதற்கான சக்திகள் இங்கு பலர் இருக்கின்றார்கள். எல்லா சமயங்களிலும் தீவிர தன்மையுள்ளவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் தங்களைச் சார்ந்த சமயங்களை மிகவும் அன்பு செய்கின்றவர்கள் போல் செயல்பட்டாலும்  அந்தளவு மதத்துக்கு எதிரான செயல்களைத்தான் செய்கின்றார்கள்.

இது அவர்களுக்கு விளங்காது. அவர்கள் நினைக்கின்றார்கள் நாங்கள் எங்கள்
மதத்தில் அதிக பற்று வைத்திருக்கின்றோம். நாங்கள் எங்கள் மதத்துக்காக
எல்லாம் செய்கின்றோம் என நினைக்கின்றார்கள்.

எல்லா மதங்களிலும் இப்படியாக இருப்பவர்கள் ஒவ்வொரு மதத்திலும் ஐந்து,
பத்து வீதமானவர்கள்தான் இருக்கின்றார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள்
சேர்ந்து வாழ்ந்தவர்கள் தற்பொழுது நடந்து கொண்டிருக்கின்ற சம்பவங்களை
நினைத்து மனதுக்குள் மனம் புழுங்கிக் கொண்டு இருக்கின்றனர்.

நான் நினைக்கின்றேன் மதங்களில் இருக்கின்ற தீவிரவாதிகளை நாம் இனம் கண்டு இவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும்.

இது ஒவ்வொரு மதங்களிலும் வெளியிலும் நடக்க வேண்டும். தேசிய மட்டத்தில் நாம் நோக்கும்போது நாம் நினைக்கின்றோம் பௌத்த பிக்குகள் பொல்லாதவர்கள் என்று. நமக்குத் தெரிய வேண்டும் அவர்களுக்குள்ளேயும் மிக நல்லவர்கள் பலர் இருக்கின்றார்கள் என்று. இவ்வாறுதான் எமது மாவட்டத்திலும் இருக்கின்றார்கள். இவர்கள் நினைக்கின்றார்கள் தாங்கள் தங்கள் மதத்துக்கு நல்லது செய்கின்றார்கள்
என்று. ஆனால் இவர்கள்தான் தங்கள் மதங்களுக்கு தீங்கை விளைவிக்கின்றார்கள். இறைவன் இவர்களின் செயல்பாட்டை ஒருபோதும் அங்கிகரிக்க மாட்டார்.

ஆகவே நல்ல மனம் கொண்டவர்கள் இவ்வாறானவர்களை இனம் கண்டு இவர்களை ஓரம் கட்டி அடையாளப்படுத்தும் பொறிமுறையை நாம் கையாள வேண்டும். இன்னொரு பொது விடயத்தையும் நாங்கள் அவதானித்துள்ளோம் தனிப்பட்டவர்களின் நலனுக்காக தங்களுடைய காரியத்தை கொண்டு செல்வதற்காக தங்களைச் சார்ந்த மதத்தை இனத்தை இழுத்தெடுத்து பிரச்சனைகளுக்கு வித்திடுவது.

அதாவது இருவருக்கு தனிப்பட்ட பிரச்சனை ஒன்று உருவாகிவிட்டால் அதை மத அல்லது இனப் பிரச்சனையாக உருவெடுக்க வைப்பது.

அண்மையில் நடைபெற்ற கண்டி சம்பவம் ஓர் உதாரணமாகும். ஆகவே
தனிப்பட்டவர்களின் பிரச்சனை ஒன்று உருவாகும்போது சமூதாய பிரச்சனையாக இதை உருவெடுக்க விடக்கூடாது. இதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

ஒவ்வொரு மதங்களிலுமுள்ள மதத் தீவரவாதிகளாலேயே மதப் பிரச்சனைகள் தோன்றுகின்றன--தமிழ் சங்கத் தலைவர் அருட்பணி தமிழ் நேசன் அடிகளார் Reviewed by Author on September 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.