அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! அரச சாட்சியாக ஆஜராக மூவர் இணக்கம் -


வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் தொடர்பான வழக்கு விசாரணையில் மூன்று சந்தேக நபர்கள் அரச தரப்பு சாட்சியாக முன்னிலையாவதற்கான தங்களது விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற இந்த வழக்கு மீதான விசாரணை டிசம்பர் வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பு – தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேரது வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இன்றைய தினம் இடம்பெற்றது.

இந்த வழக்கில் 10வது சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெளிநாடு தப்பிச்சென்று மீண்டும் நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்ட கடற்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரி லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அத்துடன் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி தஸநாயக்க உட்பட 15 சந்தேக நபர்களும் இன்றைய தினம் மன்றில் வரிசையாக முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணையை நெரிப்படுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் எனக்கூறி, சுவிட்சர்லாந்துக்கு தப்பிச்சென்ற நிலையில், பொலிஸ் பரிசோதகர் அணில் என்கிற அதிகாரி தலைமையில் இரண்டு அதிகாரிகள் இன்றைய தினம் மன்றில் முன்னிலையாகினார்கள்.

வழக்கு மீதான விசாரணையின்போது, இந்த வழக்கினை விசாரணை செய்த விதம் குறித்து சில கருத்துக்களை முன்வைத்த இரகசிய பொலிஸார், மறுவிசாரணைக்கு உத்தரவிடும்படி கோரிக்கை முன்வைத்தனர்.
இருந்த போதிலும் இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதவான் ரங்க திஸாநாயக்க, விசாரணைகள் முற்றுப்பெற்றிருப்பதாக ஏற்கனவே மன்றில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையை சுட்டிக்காட்டினார்.
எனினும் இன்று பிற்பகலில் வழக்கை விசாரணை செய்யும்படி இரகசிய பொலிஸார் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, வழக்கு இன்று பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் விசாரணை இன்று மாலை 3.30 அளவில் ஆரம்பமாகியது.

இதன்போது முன்னிலையாகிய இரகசிய பொலிஸார், இந்த வழக்கு தொடர்பில் தெரிவுசெய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமை பிரதம நீதியரசர் இன்னும் நியமிக்காததினால் அதுவரை வழக்கை ஒத்திவைக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

அதேபோல, இந்த வழக்கில் மூன்று சந்தேக நபர்களுக்கு முன்வைக்கப்பட்ட பொது மன்னிப்பு நிபந்தனைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், அதற்கமைய அவர்கள் அரச தரப்பு சாட்சியாக முன்னிலையாவதற்கு விருப்பத்தை வெளியிட்டிருப்பதாகவும் மன்றில் குறிப்பிட்டனர்.
இவற்றைக் கவனத்திற்கொண்ட நீதவான் ரங்க திஸாநாயக்க, லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை எதிர்வரும் டிசம்பர் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதோடு ஏனைய 15 சந்தேக நபர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ம் திகதி முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டார்.
தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! அரச சாட்சியாக ஆஜராக மூவர் இணக்கம் - Reviewed by Author on November 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.