அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்! கோத்தபாய முடிவு செய்ய முடியாது! மட்டக்களப்பில் ரணில் -


கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டுமாக இருந்தால் அதனை தமிழர்கள்தான் முடிவு செய்யவேண்டுமே தவிர அதனை கோத்தபாய ராஜபக்ச தெரிவு செய்யமுடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுத்திப்படுத்தும், தேர்தல் பிரசாரம் ஒன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
கோத்தபாய ராஜபக்ஸ, மகிந்த ராஜபக்கச ஆகியோர் சொல்கின்றார்கள், அவர்கள் வெற்றிபெற்றால் பிள்ளையானை முதலமைச்சராக்குவோம் என்று. நாங்கள் எல்லாப் பதவிகளையும் முஸ்லிம்களுக்கு வழங்கப்போகின்றோம், அதனால் கிழக்கு முதலமைச்சர் பதவியை பிள்ளையானுக்கு வழங்கப்போகின்றோம் என்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கு உரிமை கிடையாதா? யார் முதலமைச்சராக வரவேண்டும் என்று தெரிவு செய்வதற்கு, அதுதானே ஜனநாயகம். தமிழ் மக்களுக்கு முதலமைச்சர் பதவியைப் பெற்றுக் கொள்வதற்கு உரிமை இருக்கின்றது. அது முஸ்லிம் மக்களுக்கும். சிங்கள மக்களுக்கும் இருக்கின்றது. இறுதியாக தமிழ் முஸ்லிம், சிங்களம் என்பதைவிட வேலைசெய்யக்கூடிய முதலமைச்சர்தான் தேவை. தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டுமாக இருந்தால் அதனை தமிழர்கள்தான் முடிவு செய்யவேண்டுமே தவிர அதனை கோத்தபாய ராஜபக்ச தெரிவு செய்யமுடியாது.

எங்களுக்கு முதலமைசர் பிள்ளையான் இருக்கின்றார், அதனை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அவர்கள் இன்னும் ஆணையிட்டு வேலைசெய்ய முயற்சிக்கின்றார்கள். அவர்கள் பிள்ளையானை விரும்புவதனால் பிள்ளையானை முதலமைச்சராக்க வேண்டுமாம். அப்படியானால் யோசப் பரராசசிங்கத்தின் மீது விருப்பமில்லாததனால்தானா அவரைக் கொலைசெய்தீர்கள். அந்தக் கேள்விக்குத்தான் கோத்தபாய ராஜபக்சவும், மஹிந்த ராஜபக்சவும் பதிலளிக்கவேண்டும்.
இப்போது தமிழ் மக்களின் உரிமை பற்றிப்பேசுவதற்கு மிகவும் விருப்பப்படுகின்றார்கள் ராஜபக்சாக்கள். அப்படியானால் தமிழில் தேசிய கீதத்தை பாடுவதற்கு நாங்கள் வழிவகை செய்தபோது ஏன் அதனை எதிர்த்தீர்கள். எதிர்வரும் 16 ஆம் திகதி அன்னப்பறவைக்கு வாக்களித்து சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்கினால் தமிழ் மக்களின் உரிமைக்கள் பாதுகாக்கப்படும்.

ஆகவே சுதந்திரத்தைப் பாதுகாத்து இந்தப்பகுதியை அபிவிருத்தி செய்யவேண்டும். கம்பெரெலிய, அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை, ரன்மாவத்தை, சமுர்த்தி மற்றும் தொழிற்பேட்டைகள் என இப்பகுதியில் அபிவிருத்திகளைச் செய்துள்ளோம். 350 மில்லியன் ரூபா செலவிலே பொருளாதார மத்திய நிலையத்தை இப்பகுதியில் அமைத்துள்ளோம்.
தேர்தலின் பின்னர் அதனை நாங்கள் திறந்து வைக்கவுள்ளோம். களுவாஞ்சிகுடிக்கு பொது வியாபார மத்திய நிலையத்தை வழங்கியிருக்கின்றோம். மண்டூர் ஓடத்துறைக்கு பாலம், மட்டக்களப்பு நாவலடி அணைக்கட்டு, போன்றவற்றை அமைத்துத் தருவோம்.
விவசாயத்தை நவீனமயப்படுத்தவுள்ளோம், நெல்லுற்பத்தியை அதிகரிக்க உதவிசெய்வோம், மின்பிடித்துறையை நாங்கள் நவீனமயப்படுத்துவோம், புதிய படகுகளை வழங்குவோம், மீன்பிடி மற்றும் விவசாயத்தையும் அபிவிருத்தி செய்ய தனியார் துறைகளின் ஆதரவுடன் குளிர்சாதனப் களஞ்சிய வசதிகளை உருவாக்குவோம்.

கப்பல்துறையிலே ஒருவர்த்தக மையத்தை அமைப்பதற்கு காணியைப் பெற்றிருக்கின்றோம். அம்பாந்தோட்டை, மொனறாகலை, வெள்ளவாய பகுதிகளில், 10000 ஏக்கர் காணியைப் பெற்றிருக்கின்றோம். அதுபோல் மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் இடையில் இன்னுமொரு வர்த்தக நிலையத்தை உருவாக்கவுள்ளோம்.
புதிய பொருளாதாரத்தை இப்பகுதிக்கு வழங்குவோம். மட்டக்களப்பிலே தற்போது விமான நிலையம் செயற்படுகின்றது. இந்தியாவின் சென்னையிலிருந்து மட்டக்களப்புக்கு விமானங்கள் வரும், மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு விமானங்கள் செல்லக்கூடியதாக இருக்கும். 2 விமான நிறுவனங்கள் சேவையிலீடுபடவுள்ளன. சுற்றுலாத்துறையினர் இங்கு வருகைதருவார்கள். அதிகமான தொழில்வாய்ப்புக்கள் உருவாகும். இதனூடாக சகலதுறையினருக்கும் தொழில்வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

பாரிய அபிவிருத்தித் திட்டத்தை கொண்டுவருவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம். இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாங்கள் இந்த வேலைத்திட்டங்களை முன்கொண்டு செல்வோம். எனவே நவம்பர் 16 ஆம் திகதி அன்னப்றவைக்கு நேரே புள்ளடியிட்டு சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக்கி அந்த வேலைத்திட்டங்களை நாங்கள் ஆரம்பிப்போம்.
2015 ஆம் ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி எமது மக்கள் சுதந்திரத்திற்காகவும், நல்லிணக்கத்திற்காகவும், ஒற்றுமைக்காகவும், வாக்களித்தீர்கள். இவை அனைத்தையும் உறுத்திப்படுத்திக் கொள்வதாற்காக எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி மக்கள் அனைவரும் அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்குமாறு நான் மக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

நாட்டின் முதலாவது பிரதம மந்திரி டிஸ்.சேனநாயக்கவை கறுப்பு சிங்களவர் என்று சொன்னார்கள். சிங்கள மக்களுடைய பாதுகாப்பு என்பது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து பயணிப்பதிலேதான் இருக்கின்றது என்று அதனால்தான் இலங்கையர் என்ற அடையாளத்த உண்டுபண்ணினார். ஆனால் இன்று மொட்டுக் கடசியினர் இனவாதத்தை மாத்தரமே பேசுகின்றனர்.
இந்த கிழக்கு மாகாணத்திலே தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் வாழ்கின்றார்கள். இந்த தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுத்திப்படுத்தப்பட்டது 2015 ஆம் ஆண்டின் பின்னரேதான். தற்போது மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள். என்றார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தியின் ஏற்பாட்டில் அவரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி, கிழக்கு மாகாண முன்னார் ஆளுனர் ரோகித போகல்லாகம ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், மற்றும் பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்! கோத்தபாய முடிவு செய்ய முடியாது! மட்டக்களப்பில் ரணில் - Reviewed by Author on November 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.