அண்மைய செய்திகள்

recent
-

சிவசக்தி ஆனந்தன் சீற்றம்-உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?


கோரிக்கைகளை முன்வைத்த தமிழ்க் கட்சிகளை சம்பிரதாயத்திற்கு கூட அழைத்துப் பேசாத உங்களுக்கு தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டுமென அரச தரப்பு மற்றும் எதிர்க்கட்சியை பார்த்து வன்னி மாவட்ட எம்.பி. சிவசக்தி ஆனந்தன் கேள்வியெழுப்பினார்.

அத்துடன், வாக்களிக்க விரும்பாதோர் பயன்படுத்தும் வாக்களிப்பு முறையான நோட்டவை இலங்கையிலும் அறிமுகப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் அவர் கோரிக்கையும் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை (07.11.2019) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்;

வடக்கு, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், மதத் தலைவர்கள், சுயாதீன அமைப்புகள் இணைந்து 5 கட்சிகளினால் கொண்டுவரப்பட்ட 13 அம்சக் கோரிக்கையானது கடந்த 70 வருட காலம் தீர்க்கப்படாதிருக்கும் முக்கியமான அம்சங்களே அவை. அவற்றில் அரசியல் தீர்வு தவிர்த்து ஏனையவை யுத்தத்திற்குப் பின்னரான நிலைமைகளாகவே உள்ளன. அதாவது, அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்குதல், அபிவிருத்தி, வேலைவாய்ப்பு ஆகியன காணப்படுகின்றன. இவை தனி நாட்டுக்கான கோரிக்கைகளல்ல.

 தமிழ் மக்களின் மீதான இனப் படுகொலை காரணமாக தீர்க்கப்படாதிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் வகையிலேயே 13 அம்சக் கோரிக்கைகளை வேட்பாளர்களுக்கு கையளிக்க நடவடிக்கையெடுத்தோம். ஆனால், பொதுஜன பெரமுன வேட்பாளர் வெளிப்படையாக நாங்கள் அவர்களைச் சந்திக்கத் தயாரில்லையெனக் கூறிவிட்டார். அதேபோன்று சஜித் பிரேமதாசவும் ஒரு படி மேலே சென்று எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திடப் போவதில்லை. அவர்களைச் சந்திக்கவும் தயாரில்லையெனவும் கூறியுள்ளார்.


இவ்வாறான நிலைமையில் நீங்கள் தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்பார்த்துக்கொண்டு எமது கோரிக்கைகளை நிராகரித்துக்கொண்டு சம்பிரதாயப்படியாவது சந்திக்கத் தயாரில்லாத நேரத்தில், தமிழ் மக்கள் உங்களுக்கு எந்த அடிப்படையில் வாக்களிக்க வேண்டுமென்பது தமிழ் மக்களிடம் இருக்கும் கேள்விகளாக இருக்கின்றன.


2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ வரக்கூடாது என்பதற்காக இறுதிக்கட்ட யுத்தத்தை வழிநடத்தி, தளபதியாக இருந்து ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு, பில்லியன் கணக்கான சொத்துகளை அழித்த ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக இருந்த சரத் பொன்சேகாவுக்கு வாக்களிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருந்தது. 2015 ஆம் ஆண்டிலும் மீண்டும் மகிந்த ராஜபக்ஷ வந்துவிடக்கூடாது என மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தனர். ஆனால், கடந்த 5 வருடங்களில் என்ன செய்தீர்கள்? உங்களால் அடிப்படை வசதிகள் கூட தீர்க்கப்படவில்லை. யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்துள்ளன. இன்னும் மக்கள் தற்காலிக வீடுகளிலும் வாழ்கின்றனர். உருப்படியான வீட்டுத்திட்டமும் கிடையாது. வடக்கு, கிழக்கில் வேலைவாய்ப்புகளை பெரும்பான்மை இனத்தவர்களுக்கே வழங்குகின்றீர்கள். இவற்றுக்கு நிரந்தரத் தீர்வை காணவேண்டும்.


கடந்த 10 வருடங்களில் இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் மகிந்த ராஜபக்ஷ வரக்கூடாது என்பதற்காகவே தமிழ் மக்கள் வாக்களித்தனர். ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. இன்று இரண்டு பெரும்பான்மை வேட்பாளர்களும் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக இனவாதம் பேசுகின்றனர். கோதாபய ராஜபக்ஷ நான்தான் யுத்தத்தை முடித்து வைத்தேன் எனும்போது மறு பக்கத்தில் சஜித்தின் மேடையில் சரத் பொன்சேகாவோ தானே யுத்தத்தை வென்றதாகக் கூறுகின்றார். இந்த யுத்தத்தில் அழிக்கப்பட்ட சொத்துகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. நீங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணக்கிய விடயங்களையே நீங்கள் நடைமுறைப்படுத்தப் போவதில்லையென்றால் எப்படி தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகின்றீர்கள்?


தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லமுடியாத நிலைமையிலேயே இருக்கின்றனர். குற்றவுணர்வுடனேயே அவர்கள் செல்கின்றனர். சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே செயற்படுகின்றீர்கள். இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குப் பொறுப்புள்ளது. இவர்கள் இணஙகிய விடயங்களை எவ்வாறு செயற்படுத்தப் போகின்றார்கள் என்பதனை ஆராய வேண்டும். இந்தப் பொறுப்பைச் செய்ய வேண்டும்.


இதேவேளை, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தலைவர்களுக்கு வாக்களித்து எந்தத் தீர்வையும் பெற்றதில்லை. இதனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை போன்று நோட்டா என்ற முறைமையையும் தேர்தல்கள் திணைக்களம் கொண்டுவர வேண்டிய தேவையுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். சிங்கள மக்களுக்கு நீங்கள் உண்மையைக் கூறுங்கள். தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை என்பதைக் கூறுங்கள். இவ்வாறான நிலைமையில் நாங்கள் இவருக்கு வாக்களித்தால் தீர்வு கிடைக்குமென என்ன உத்தரவாதத்தை தமிழ் மக்களுக்கு வழங்குவது. இதனால் இங்கும் நோட்டா என்ற முறை இருக்குமாக இருந்தால் வடக்கு, கிழக்கில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிராகரிக்கின்றனர் என்பதைக் காட்டியிருப்பர். இதனால் எதிர்காலத்தில் இந்த நோட்டா முறைமையைக் கொண்டுவர வேண்டும் என்றார்.


சிவசக்தி ஆனந்தன் சீற்றம்-உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? Reviewed by Author on November 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.