அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா தவசியா குளம் அ.த.க பாடசாலையின் அதிபர் பன்முக ஆளுமை கொண்ட நித்தியானந்தன்

வவுனியா தவசியா குளம் அ.த.க பாடசாலையின் அதிபர் திரு நித்தியானந்தன் அவர்களுக்கு 20.02.2020 அன்று சேவை நலன் பாராட்டு விழா பாடசாலை உப அதிபர் திருமதி மகேஸ்வரி பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசா,வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தனிகாசலம்,அயல் பாடசாலை அதிபர்கள்,வலயக்கல்வி பணிமனையின் பிரதிநிதிகள்,வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ஜெயரூபன்,வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தின் ஓய்வு பெற்ற அதிபர் திரு பத்மநாதன்,தவசியாகுளம் அ.த.க பாடசாலையில் ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள்,பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு திரு நித்தியானந்தன் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் ஓய்வு பெற்று செல்லும் திரு நித்தியானந்தன் அவர்களை பாராட்டி உரையாற்றுகையில்

முப்பத்திரண்டு ஆண்டு கால கல்வி சேவையைப் பூர்த்தி செய்து   அகவை அறுபதில்  மணிவிழாக் காணும் திரு சண்முகம் நித்தியானந்தன் அவர்கள் பன்முக ஆளுமை     கொண்ட ஓர் சிறந்த ஆசிரியராக அதிபராக கல்விச் சமூகத்திற்கு பெரும்பணியாற்றியுள்ளார்.ஆரம்ப மற்றும் உயர்தர கல்வியை வ/கனகராயன்குளம் ம.வி இல் பயின்று பின்னர் யாழ் பல்கலைக் கழகத்தில் கலைமானி  பட்டதாரியாக வெளியேறினார்.அதனை தொடர்ந்து கல்வி முதுமானிப் பட்டத்தை முடித்துக் கொண்டதன் மூலம் தனது உயர் கல்வித் தகைமையினையும் உயர்த்தி தனது பிரதேசத்திற்கு பெருமை சேர்த்தவர்.

32 வருட கால ஆசிரிய,அதிபர் சேவையின் மூலம் பாடசாலைகளின் சூழலை நன்கு புரிந்து கொண்டு கல்விப் பணிமனையின் ஒத்துழைப்புக்களுடன் அர்ப்பணிப்பான பணிகள் மூலம் பாடசாலைகளின் தரவிருத்திக்கு உழைத்த அதிபர் என்றால் அது மிகையாகாது.இவரது கல்விச் சேவையில் அதிகமான காலம் வவுனியா வடக்கு வலய பாடசாலைகளில் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. வவுனியா வடக்கில் உள்ள அனேகமான உத்தியோகத்தர்கள் இவரிடம் கல்வி பயின்றவர்களாவர்.

சாந்தமும், அமைதியும்,புன்சிரிப்பும்,தன்னடக்கத்தையும் தன்னகத்தே கொண்டு கல்விப் பணிமனையின் மேலதிகாரிகளுடனும் அவரின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோருடன் எந்தவித முரண்பாடுகளுமற்ற சமநிலையைப் பேணி பாடசாலையினை சிறப்பாக நிர்வகித்த பெருமை இவரைச் சாரும்.சிறந்த அரசியல் அறிவும் சமூகம் சார்ந்த பார்வையும் கொண்ட இவர்  புத்தகங்கள் பத்திரிகைகள் வாசிப்பதில் அதிக நாட்டம் கொண்டவர். வறுமையிலும் கல்வி முக்கியம் என்பது இவரது கோட்பாடாகவும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தன்னை நூறுவீதம் அர்ப்பணித்து அதை நிறைவேற்றியும் காட்டியிருந்தார்.


இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் மாவட்ட,மாகாண,தேசிய மட்டத்திலான பல்துறை சார்ந்த போட்டிகள் போன்றவற்றில் பாடசாலை மாணவர்கள் சாதனைகள் பல படைக்கவும் காரணமாகவிருந்து வழிகாட்டியவர் குறிப்பாக தேசிய மட்ட போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்து முதன்முறையாக வவுனியா வடக்கு வலயத்தை தேசிய ரீதியில் இரண்டாம் இடத்திற்கு கொண்டு சென்றவர் என்ற வகையிலும் அவர் பாராட்டுக்குரியவர்.

பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள், கல்விப் பணிமனையின் அலுவலர்கள் போன்ற அனைவரதும் ஆசிகளுடன் தனது பணியை நிறைவு செய்துள்ள இச் சந்தர்ப்பத்தில் அவரது ஓய்வுக் காலத்தில் நல்லாரோக்கியத்துடன் குடும்பத்தினருடன் இணைந்து இனிதே வாழவேண்டும் என இந் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்  வாழ்த்துரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






வவுனியா தவசியா குளம் அ.த.க பாடசாலையின் அதிபர் பன்முக ஆளுமை கொண்ட நித்தியானந்தன் Reviewed by Author on February 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.