அண்மைய செய்திகள்

recent
-

விடுதலைப் புலிகள் மீதான சுமந்திரனின் வசைபாடலுக்கு வித்திட்டவர் சம்பந்தனே வேலிக்கு ஓணான் சாட்சியா என்கிறார் சிவசக்தி ஆனந்தன்

தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் வசைபாடுவதற்கு வித்திட்டவர் அதன் தலைவரான சம்பந்தனாக இருக்கின்றார் என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் வேலிக்கு ஓணான் சாட்சியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப்போராட்டம் சம்பந்தமாக எதிர்மறையான கருத்துக்களை கூட்டமைப்பின் பேச்சாளர் சிங்கள் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிந்தார். அதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தததை அடுத்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அக்கூற்று பற்றி தெளிவுபடுத்தல் அறிக்கையொன்றை விடுத்து அதற்கான நியயப்படுத்தல்களையும் செய்திருந்தார்.

உண்மையிலேயே சுமந்திரன் தன்னுடைய அரசியல் தலைவராக சம்பந்தனையே கொள்வதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் சம்பந்தனைப் பொறுத்தவரையில் அவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட ஆயுத இயக்கங்கள் பற்றி வெளிப்படையான நிலைப்பாடுகளை தெரிவிக்கும் ஒருவர் அல்லர்.

பாராளுமன்றத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தமிழ் மக்களுக்கான ஆயுத விடுதலைப் போராட்டத்தினை பயங்கரவாதமாக சித்தரித்து உரையாற்றியிருக்கின்றார். குறிப்பாக, போரின் பின்னரான நிலைமையிலும், கடந்த நல்லாட்சி அரசாங்கத்துடனான தேனிலவுக்காலத்திலும் இத்தகைய சித்தரிப்புக்களை அதிகமாகச் செய்திருந்தார்.

அதுமட்மன்றி, விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்றும் பாராளுமன்றத்திலே கூறியுள்ளார். அரச தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விடுதலைப்புலிகள் உருவாக்கவில்லை என்றும் கூறியிருக்கின்றார்.

அவர்கள் தன்னை கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கவில்லை என்றும், அவர்களின் கருத்துக்களுடன் இணைந்து செயற்படவில்லை என்றும் முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட காலத்தில் பொய்யுரைத்திருந்தார்.

இவ்வாறான நிலையில் அவரினை தலைவராக ஏற்றிக்கும் சுமந்திரன் விடுதலைப்புலிகளையும், ஆயுதப்போராட்டத்தினையும் எவ்வாறு ஆதரிப்பார். குருவுக்கு மிஞ்சிய சீடன் என்பது போன்று சம்பந்தனை விட ஒருபடி மேலே சென்று போராட்டத்தினை கொச்சைப்படுத்தியிருக்கின்றார். பின்னர் சர்ச்சைகள் ஏற்படவும் அவருடைய கருத்துக்களை தெளிவு படுத்தி சம்பந்தன் அறிக்கை விடுகின்றார். இது வேடிக்கையாக இருக்கின்றது. வேலிக்கு ஓணான் சாட்சியா?

மூன்று தசாப்தங்களாக எத்தனையோ உயிர்த்தியாகங்கள் நடைபெற்றிருக்கின்றன. அந்த தியாகங்களை மதிக்காது வெறுமனே வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களை தியாகிகள் என்பதும் பின்னர் அவர்களை துரோகிகள் என்பது மேட்டுக்குடி அரசியல் தரப்பின் வழக்கமாகிவிட்டது.

ஆகவே சம்பந்தன், சுமந்திரன் கூட்டணியே கடந்த நான்கரை வருடங்கள் தமிழர்களை ஏமாற்றி நீதிக்கான கோரிக்கையையும் மலினப்படுத்தியது. இப்போது அவர்களின் உண்மையான முகத்திரையும் கிழிந்துவிட்டது. எனவே தமிழ் மக்களே தீர்க்கமான தீர்மானம் எடுப்பதற்கு தலைப்பட்டள்ளார்கள் என்றுள்ளது.  
விடுதலைப் புலிகள் மீதான சுமந்திரனின் வசைபாடலுக்கு வித்திட்டவர் சம்பந்தனே வேலிக்கு ஓணான் சாட்சியா என்கிறார் சிவசக்தி ஆனந்தன் Reviewed by NEWMANNAR on May 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.