அண்மைய செய்திகள்

recent
-

அறிவை வளர்க்கும் சரஸ்வதி பூஜை,ஆயுதம் போற்றும் ஆயுதபூஜை, வெற்றி தரும் விஜயதசமி

நவராத்திரி பண்டிகையின் முக்கிய விழாவான ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகளை மக்கள் கொண்டி வருகின்றனர். 

 கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்தி பெருக்குடனும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. முப்பெருந்தேவியரையும் 9 நாட்கள் வழிபடுவதே நவராத்திரி. முதல் 3 நாட்கள் சக்திக்கு உரியதாகவும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவிக்கு உரியதாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியதாகவும் கொண்டாடப்படுகிறது.

 நாளைய தினம் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும். கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம்.

  ஆயுதம் போற்றும் ஆயுதபூஜை:

 ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது.வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம். இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

 நமது பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், கம்ப்யூட்டர், அக்கவுன்ட்ஸ் புத்தகங்கள் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட்டு அலுவலகங்களில் பூஜைகள் நடத்தப்படும். தொழிலையும் தொழிலாளர்களையும் போற்றும் இப்பண்டிகை  காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

 வெற்றி தரும் விஜயதசமி புதன்கிழமை விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

 அன்றைய தினம் குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது ‘வித்யாரம்பம்' எனப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் குடி கொண்டிருக்கும் சரஸ்வதி தேவியை ஏராளமானோர் சென்று வழிபட்டு குழந்தைகளுக்கு எழுத கற்றுக்கொடுப்பது வாடிக்கை. இதன் மூலம் குழந்தைகளின் கல்விவளம் பெருகும் என்பது ஐதீகம்.

 மகிஷனை வென்ற துர்க்கை:

 தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்ற நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனை அழிக்க தேவியானவள் துர்க்கை வடிவம் எடுத்தாள். 9 நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது என்கின்றன புராணங்கள். 

இந்த நாளில் அன்னை துர்கா தேவியை வேண்டி எந்த செயலையும் தொடங்கினால் தீமைகள் விலகி, நலங்களும் வளங்களும் சேரும் என்பது நம்பிக்கை. பண்டிகை தினத்தை கொண்டாடுவதற்காக பொரி, கடலை, தேங்காய், பழம், சுண்டல் ஆகியவற்றை வாங்குவதற்காக பொதுமக்கள் சந்தைகளில் குவிந்து வருகின்றனர். இதனால்  ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.


அறிவை வளர்க்கும் சரஸ்வதி பூஜை,ஆயுதம் போற்றும் ஆயுதபூஜை, வெற்றி தரும் விஜயதசமி Reviewed by Author on October 25, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.