அண்மைய செய்திகள்

recent
-

ராஜேந்திர சோழன்: நெதர்லாந்தில் உள்ள சோழர் கால செப்பேடுகள் தமிழ்நாட்டுக்குத் திரும்புமா?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ராஜேந்திரச் சோழனின் தானங்களைப் பற்றிக் குறிப்பிடும் செப்புச் சாஸனங்கள் நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. தற்போது அந்நாடு வெளிநாட்டவர்களின் அரும்பொருட்களைத் திரும்பத் தர முடிவெடுத்திருக்கும் நிலையில் ராஜேந்திரச் சோழனின் செப்புச் சாஸனங்களும் நாடு திரும்புமா?

 ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் குடியேற்ற நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட அரும்பொருட்கள் குறித்து முடிவெடுப்பதற்காக ஆலோசனைக் குழு ஒன்று கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.அந்தக் குழு தனது பரிந்துரைகளை சில நாட்களுக்கு முன்பாக, அந்நாட்டின் கல்வி, கலாசார, அறிவியல் துறை அமைச்சர் இங்ரிட் வான் எங்கெல்ஷோவனிடம் அளித்தது.

 அந்தக் குழுவின் பரிந்துரைகளின்படி,நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகங்களில் குடியேற்ற நாடுகளின் அரும்பொருட்கள் இடம்பெற்றிருந்தால், அந்த அரும்பொருட்கள் உரிமையாளரின் சம்மதம் இல்லாமலோ, வலுக்கட்டாயமாகவோ, சட்டவிரோதமாகவோ கொண்டுவரப்பட்டிருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நாடு அதைக் கோரினால் அதனைத் திருப்பி அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரும்பொருட்கள் அந்தந்த நாடுகளுக்கு இதுபோல திருப்பியளிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. 

இந்த நிலையில்தான் நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சோழர் கால செப்பேடுகள் மீது அரும்பொருள் ஆர்வலர்களின் கவனம் திரும்பியுள்ளது. ஆனைமங்கலச் செப்பேடுகள் எனவும் Leiden Copper plates எனவும் அழைக்கப்படும் இந்தச் செப்பேடுகள், சோழ வரலாறு குறித்த முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகின்றன. இந்தச் செப்பேடுகள் இரண்டு காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. 21 ஏடுகளைக் கொண்ட முதல் தொகுதி ராஜேந்திரச் சோழனால் வழங்கப்பட்டது. 

3 ஏடுகளைக் கொண்ட இரண்டாவது தொகுதி ராஜேந்திரச் சோழனின் பேரனான குலோத்துங்கச் சோழனால் (1070-1120)வழங்கப்பட்டது. ராஜேந்திரச் சோழன் வழங்கிய 21 செப்பேடுகளும் ஒரு மிகப் பெரிய வளையத்தினால் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வளையம் ராஜேந்திரச் சோழனின் முத்திரையால் இணைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல, குலோத்துங்கனால் வழங்கப்பட்ட சிறிய செப்பேட்டுத் தொகுதியும் ஒரு வளையத்தால் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தச் செப்பேடுகளில் என்ன இருக்கிறது என்பது ஏற்கனவே படிக்கப்பட்டு, பதிப்பிக்கப்பட்டுவிட்டது. ராஜேந்திரச் சோழன் வழங்கிய செப்பேடுகளில் ஐந்து செப்பேடுகள் சமஸ்கிருதத்திலும் 16 செப்பேடுகள் தமிழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. சமஸ்கிருதத்தில் உள்ள பகுதி, சோழ மன்னர்களின் பரம்பரையைச் சொல்கிறது. தமிழில் உள்ள பகுதி ராஜேந்திரச் சோழனின் தந்தையான ராஜராஜ சோழனின் சில சாதனைகளைச் சொல்கிறது. பிறகு, ராஜராஜ சோழனின் 21வது ஆட்சிக் காலத்தில் ஸ்ரீ விஜயநாட்டு மன்னனான மாற விஜயதுங்க வர்மன், தன் தந்தையின் பெயரால் நாகப்பட்டினத்தில் கட்டிய சூடாமணி பன்ம விகாரம் ஆனைமங்கலத்தைச் சுற்றியுள்ள 26 கிராமங்களைத் தானமாகக் கொடுத்திருந்தான். அந்த தானத்தை இந்தச் செப்பேடுகள் மூலம் ராஜேந்திரச் சோழன் தாமிரசாசனம் செய்தான்.

 ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியா மற்றும் கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன் 

ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார்? - வரலாற்று ஆய்வாளர் பேட்டி 

முதலாம் குலோத்துங்கச் சோழன் வழங்கிய செப்பேடு, அந்த பௌத்த விகாரைக்கு அளிக்கப்பட்ட தானத்தை அவன் காலத்தில் உறுதிசெய்யவும் மேலும் விரிவாக்கிய தானத்தை அளிக்கவும் எழுதப்பட்டிருக்கின்றன. 

 19ஆம் நூற்றாண்டின் துவக்கப் பகுதிவரைகூட இந்த விகாரையின் இடிபாடுகள் நாகப்பட்டினத்தில் இருந்தன. 1867ல் விகாரை முழுவதுமாக இடித்துத்தள்ளப்பட்டது. இந்த இரண்டு செப்பேட்டுத் தொகுதிகளும் ஃப்ளோரன்சியஸ் கேம்பர் என்பவரால் நெதர்லாந்திற்குக் கொண்டுவரப்பட்டன. இவரது வழிவந்தவர்களின் வசம் இந்த செப்பேட்டுத் தொகுதிகள் இருந்த நிலையில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஹமேக்கர் குடும்பத்தினருடன் திருமணம் செய்துகொள்ள, செப்பேடுகள் ஹமேக்கர் குடும்பத்தினரிடம் வந்து சேர்ந்தன.

 முடிவாக, 1862ல் பேராசிரியர் எச்.ஏ. ஹமேக்கர் (1789 - 1835) குடும்பத்தினரால், லெய்டன் அருங்காட்சியகத்திற்கு இந்தச் செப்பேடுகள் வழங்கப்பட்டன நெதர்லாந்து இப்போது, வலுக்கட்டாயமாக அல்லது உரிமையாளரின் அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட அரும் பொருட்களை திரும்ப அளிக்க உத்தேசமாக இருக்கும் நிலையில், இந்தியா இந்தச் செப்பேடுகளைத் கோரிப்பெற வேண்டும் என்கிறார்கள் இந்தியாவின் கலைச் செல்வங்களில் ஆர்வம் காட்டுகிறவர்கள். இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய இந்தியா ப்ரைட் அமைப்பின் விஜயகுமார், தமிழ்நாடு அரசு நல்லெண்ண அடிப்படையில் இவற்றைக் கோரிப்பெற வேண்டும் என்கிறார். 

"இந்தியாவில் அரும்பொருட்கள் தொடர்பான Indian treasure trove சட்டம் 1878ல் இயற்றப்பட்டது. இந்த இரண்டு செப்பேட்டுத் தொகுதிகளும் அதற்கு முன்பாகவே இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டன. 1970 நவம்பரில் யுனெஸ்கோ இது தொடர்பாக ஒரு விதிமுறைகளை உருவாக்கியது. ஆனால், அவை 1970 நவம்பருக்குப் பிறகு திருடப்பட்டு, சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட பொருட்களுக்கே பொருந்தும். ஆகவே இதன் அடிப்படையிலும் இந்த செப்பேடுகளைக் கோர முடியாது. ஆனால், இந்தச் செப்பேடுகளின் கலாசார முக்கியத்துவத்தை மனதில்வைத்து, நல்லெண்ண அடிப்படையில் தமிழக அரசு இதனைக் கோரலாம்" என பிபிசியிடம் தெரிவித்தார் விஜயகுமார். "இந்த இரு செப்பேடுகளிலும் உள்ள தகவல்கள் முழுமையாகப் படிக்கப்பட்டுவிட்டன.

 வரிக்கு வரி எழுதப்பட்டுவிட்டது. இப்போது அந்தப் பல்கலைக்கழகத்தில் பத்திரமாக இருக்கிறது. இங்கு கொண்டுவந்தாலும் அவை பத்திரமாக இருப்பதையும் எல்லோராலும் பார்க்க முடிவதையும் உறுதிசெய்ய வேண்டும்," என்கிறார் வரலாற்றாய்வாளரான குடவாயில் பாலசுப்ரமணியன். டச்சு கிழக்கிந்தியக் கம்பனி மூலம் இந்தியாவுக்கு வந்த நெதர்லாந்து நாட்டினர் சோழ மண்டலக் கடற்கரையில் பழவேற்காடு, சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட சில இடங்களில் சுமார் 200 ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தினர்.




ராஜேந்திர சோழன்: நெதர்லாந்தில் உள்ள சோழர் கால செப்பேடுகள் தமிழ்நாட்டுக்குத் திரும்புமா? Reviewed by Author on October 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.