அண்மைய செய்திகள்

recent
-

திடீர் சாமியார் அன்னபூரணியின் உண்மை அவதாரம்!

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் என்பார்கள்... அதுபோன்று தற்போது திடீரென சாமியார்கள் முளைத்துவிடுகிறார்கள். இவர்கள் யார்? என்ற முழு விவரத்தைத் தெரிந்துகொள்ளாமல் மக்கள் அவர்களிடம் சென்று காலில் விழுவதும், பணத்தைக் கொட்டுவதும் தொடர்கதையாகி வருகிறது. அப்படியாகத்தான் திடீரென சாமியார் என்ற போர்வையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருபவர் அன்னபூரணி. “அன்னபூரணி அரசு அம்மா” என்கிற பேஸ்புக் பக்கத்தில் இவரது வீடியோக்கள் பல பதிவிடப்பட்டுள்ளன. 

 தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, பொதுமக்கள் பக்தி பரவசத்தில், அன்னபூரணிக்குப் பூஜை செய்யப்படும் வீடியோக்களும் புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன. அதில் பல பக்தர்கள் இவரது காலில் விழுந்து கதறுகின்றனர். பின் ஆடியபடியே அன்னபூரணி ஆசிர்வதிக்கிறார். அதோடு இந்த முகநூல் பக்கத்தில், ‘அனைத்து மக்களுக்காகவும் இங்கு அவதாரமாக வந்துள்ளார் அன்னபூரணி. தன்னை நாடி வரும் அனைத்து பக்தர்களுக்கும் எல்லாம் வல்ல சக்தியான நம் அம்மா அருளாசி கொடுக்க இருக்கிறார். வருகிற ஜனவரி 01 ஆம் தேதி, சனிக்கிழமை அன்று அம்மாவின் திவ்ய தரிசனம் அனைத்து மக்களுக்கும் நடைபெற உள்ளது‌. தரிசனத்திற்கு அனுமதி இலவசம். அம்மாவைத் தரிசித்து அம்மாவின் அருளையும் ஆசியையும் பெறுவதன் மூலம் தீராத உடல் பிரச்சனை, மன பிரச்சனை மற்றும் அனைத்து வித கஷ்டங்களும் தீர்ந்துவிடும். புத்தாண்டில் அம்மாவின் அருளையும் ஆசியையும் பெற்று செல்லுங்கள்” என்று செங்கல்பட்டு முகவரி ஒன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 அன்னபூரணிக்குப் பூஜை செய்யப்படும் காணொளிகள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் அவரது உண்மை முகம் குறித்த தகவலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2014ஆம் ஆண்டு இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் நெறியாளராக இருந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் தான் இந்த திடீர் பெண் சாமியார் அன்னபூரணி. ஏற்கனவே திருமணமாகி, 15 ஆண்டுகள் குழந்தைகள், மனைவியுடன் வாழ்ந்த ஒருவரை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி வந்தவர் அன்னபூரணி. தற்போது, முழு மேக்கப்புடன், பட்டாடை உடுத்தி ஆதிபராசக்தி அவதாரம் என்ற போர்வையில் பகட்டாக வலம் வருகிறார். இந்நிலையில், இவர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்த வீடியோவையும், தற்போது சாமியார் அவதாரமாக உள்ள வீடியோவையும் பகிர்ந்து சமூக வலைதளவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர். 

 அன்னபூரணியின் செயல் தொடர்பாக புதிய தலைமுறைக்குப் பேட்டி அளித்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், “அன்னபூரணியின் வீடியோக்களை சிலர் எனக்கும் அனுப்பியிருந்தார்கள். அந்த வீடியோக்களையெல்லாம் பார்த்தபோது எனக்கு சிரிப்புதான் வருகிறது. அதேசமயம் மக்கள் ஏமாறுகிறார்களே எனக் கஷ்டமாகவும் இருக்கிறது. அன்னபூரணியின் கடந்தகால தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியோ, அவரின் நடத்தைக் குறித்தோ நான் எதையும் விவாதிக்க விரும்பவில்லை. இந்த மாதிரி சாமி என்று சொல்பவர்களின் காலில் மக்கள் விழுவது மிகவும் தவறான ஒன்று. எவ்வளவு நாள் நாம் ஏமாறத் தயாராக இருக்கிறோமோ, அதுவரை நம்மை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். நான் கடவுளின் அவதாரம்’ என்று சொல்லிக்கொண்டு வருபவர்களை மக்கள் நம்பக்கூடாது. சிந்தித்து கண் விழித்துக்கொள்ளவேண்டும். 

 என்னைப் பொறுத்தவரை நம் பெற்றோர் காலைத்தவிர வேறு யாருடையக் காலிலும் விழக்கூடாது. இன்று அன்னபூரணி சாமி என்கிறார். நாளை மற்றொருவர் சாமி என்று சொல்லும்போது எல்லோருடைய காலிலும் விழுவார்களா? நீங்கள்தான் சாமி. உங்களுக்குள்ளேதான் சாமி இருக்கிறது. வெளியில் ஏன் போய் தேடுகிறீர்கள்? தினம் காலையில் எழுந்ததும் நான் தான் சாமி என்று சொல்லிக்கொள்ளுங்கள். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு அவர்களாகவே தான் தேடி வந்தார்கள். அப்போது அன்னபூரணிக்கு எவ்வளவோ புத்திமதி சொன்னேன். ஆனால் என் மீது பழி வந்துவிட்டது. 

அதனால் தான் எங்களுக்குள் இப்படி ஆகிவிட்டது. அந்த நபருடன் தான் வாழ்வேன் என்று சொல்லிவிட்டுப் போனார். அப்போது, அந்த நபரின் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டுக்கு வந்துவிடுங்கள் அப்பா என்று கதறியது இன்னும் எனக்கு நினைவு இருக்கிறது” என்று கூறியுள்ளார். மற்றொரு பெண்ணின் கணவருடன் வாழ்வதாகக் கூறிச் சென்ற அன்னபூரணி இன்று ஆதிபராசக்தியாக வலம் வருகிறார். இவரைக் கடுமையாக விமர்சிக்கும் சமூக வலைதள வாசிகள் மக்கள் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்

திடீர் சாமியார் அன்னபூரணியின் உண்மை அவதாரம்! Reviewed by Author on December 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.