அண்மைய செய்திகள்

recent
-

இனிய தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள்

ஆண்டு தோறும் தை மாதம் பௌர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையொட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) வருவது தைப்பூசம். இந்த நாளில் எல்லா சிவன் கோயில்களிலும், ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. 

 முருகனுக்கு வேல் வழங்கிய நாள் 

 தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். 

 தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்..

 கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால் அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில் தான். 

 அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோயில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருகக்கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால் தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம். 

பழனியில் தைப்பூசம் 

 முருகப்பெருமானுக்கும், தைப்பூசத்திற்கும் உள்ள இத்தகைய தொடர்பின் காரணமாகவே இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரையாக வருகிறார்கள். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். 

 சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். 

 தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். முருகன் உறையும் எல்லா தலங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்.. 

 தைப்பூசத்தின் சிறப்புகள்: 

 முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன் சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும். தைப்பூச நாளின் சிறப்புகள் பற்றிப் பார்ப்போம். 

 தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப் பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவிடைமருதூர் கோயிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது. அங்கு தைப்பூசத்தன்று முறைப்படி தரிசனம் செய்து, அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால், பிரும்ம ஹத்தி தோஷம் நீங்கும். சோழ மன்னர் ஒருவரைப் பின் தொடர்ந்து வந்த பிரும்மஹத்தி கோயில் வாசலில் நின்று விட்டதால், அங்கு கோயிலின் வாயிலில் ஒரு பிரும்மஹத்தி வடிவம் அமைக்கப் பட்டுள்ளது. சிவபெருமான் தனது அம்பிகை உமாதேவியுடன் இருந்து ஞானசபையான சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணியத் திருநாள் தைப்பூசம். 

 வேத ஒலியும், வாத்திய ஒலியும், வாழ்த்தொலியும் - ஒலிக்க சிவபெருமான் நடத்திய அந்த ஆனந்தத் திருநடனத்தை; வியாக்கிர பாத முனிவர், பதஞ்சலி முனிவர், தில்லை மூவாயிரவர், தேவர்கள், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் சிவபெருமானை தரிசித்து ஆனந்தமடைந்தார்கள். பிறகு பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா ஆன்மாக்களும் உயர்வு அடைவதற்காக சிதம்பரத்திலேயே, என்றும் ஆனந்த நடனக் கோலத்தைக் காட்டி அருள் புரிந்து கொண்டிருக்கிறார். 

 சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, சித்சபேசனான நடராஜப் பெருமானை, இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இப்புண்ணிய தினத்தன்று தான். அதன் காரணமாகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

 தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

 `அருட்பெருஞ் ஜோதி - தனிப் பெருங்கருணை‘ எனும் மகாமந்திரத்தை உலகுக்குத் தந்த வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆன்மீக உண்மையை உலகுக்கு உணர்த்தி, ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள். 

தைப்பூச விரத முறை : 

 தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, ருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்ற சிவஞான நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். மாலையிலும் குளித்து விட்டுச் சிவபூஜை செய்ய வேண்டும். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

                                          வேல் உண்டு வினை இல்லை! 
                                          மயில் உண்டு பயம் இல்லை! 
                                          குகன் உண்டு குறை இல்லை! 
                                       கந்தன் உண்டு கவலை இல்லை! 

நியூமன்னார் ஊடக குழுமத்தின்  இனிய தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள் 





இனிய தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள் Reviewed by Author on January 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.