அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆத்திமோட்டை கிராம பகுதியில் உள்ள அரச காணியில் சட்டவிரோத மணல் அகழ்வு

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆத்திமோட்டை கிராம பகுதியில் உள்ள அரச காணியில் தனி நபர்கள் முறையற்ற விதத்தில் மணல் அகழ்வுக்கான அனுமதிப் பத்திரங்களை பெற்று மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை (24) காலை ஆத்திமோட்டை பகுதியில் இடம் பெற்று வரும் மணல் அகழ்வை நிறுத்தக் கோரி ஆத்திமோட்டை கமக்கார அமைப்பினரால் அப்பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வாகனங்கள் இடை மறித்து தமது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கும், ஆத்திமோட்டை கமக்கார அமைப்பினருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது. குறித்த மண் அகழ்வின் காரணமாக கள்ளியடி- ஆத்திமோட்டை வீதி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மாந்தை மேற்கு பிரதேச சபையினால் புனரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என ஆத்திமோட்டை கமக்கார அமைப்பினர் விசனம் தெரிவித்துள்ளனர். 

 குறித்த வீதியூடாக மக்கள் பயணம் செய்ய முடியாத நிலையில்,பல்வேறு பிரச்சனைகளுக்கு தொடர்ந்தும் முகம் கொடுத்து வருகின்றனர். குறித்த மணல் அகழ்வு இடம்பெறும் காணியானது மேட்டு நில அரச காணியாக காணப்படுகின்ற போதும், தனி நபர்கள் முறையற்ற விதத்தில் மணல் அகழ்வுக்கான அனுமதிப் பத்திரங்களை பெற்று மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் (24) குறித்த பகுதியில் சட்ட விரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்ற நிலையில் மண் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்ட போது ஆத்திமோட்டை கமக்கார அமைப்பினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்களும் இடை மறித்துள்ளனர். 

 சம்பவ இடத்திற்கு வருகை தந்த இலுப்பைக்கடவை பொலிஸார் குறித்த விடயம் தொடர்பாக நாளை வெள்ளிக்கிழமை (25) மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதாக தெரிவித்து மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை செல்ல அனுமதித்துள்ளனர். எனினும் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மண் அகழ்வு இடம் பெறுவதற்கு பொலிஸார், புவிச்சரிதவியல் திணைக்களம், உரிய அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளே காரணமாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 எனவே ஆத்திமோட்டை பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற மணல் அகழ்வை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இவ்வாறு குறித்த பகுதியில் மணல் அகழ்வு உடனடியாக நிறுத்தப்படாது விட்டால் குறித்த பகுதி மக்கள்,விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என ஆத்திமோட்டை கமக்கார அமைப்பினர் கவலை தெரிவித்துள்ளனர். குறித்த ஆத்திமோட்டை பகுதியில் சட்ட விரோதமாக மணல் அகழ்வு செய்யப்படும் அரச மேட்டுக் காணி தனியாருடைய காணி என போலி ஆவணங்களை சமர்ப்பித்து மண் அகழ்வு இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
                 











மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆத்திமோட்டை கிராம பகுதியில் உள்ள அரச காணியில் சட்டவிரோத மணல் அகழ்வு Reviewed by Author on March 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.