அண்மைய செய்திகள்

recent
-

திருகோணமலையில் மஹிந்த ராஜபக்ஸ: என்ன நடக்கிறது கடற்படைத் தளத்தில்?...

திருகோணமலை நகரம் கொழும்பு நகரைப் போல இல்லை. அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெறவில்லை. வன்முறைகளும் பதற்றமும் கிடையாது. பொதுவாக அமைதியாகவே இருக்கிறது. ஆயினும் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படை படைப்பிரிவு தலைமையகத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்ததும் கொழும்பு நகரின் பரபரப்பு இங்கும் ஒருநாள் தொற்றியிருந்தது. அது கடந்த மே 9-ஆம் தேதி திங்கட்கிழமை. கொழும்பு காலி முகத்திடலில் மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்கள் புகுந்து போராட்டக்காரர்கள் மீதும், கூடாரங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதால் நாட்டின் பல இடங்களிலும் ஆளுங்கட்சியினரைக் குறிவைத்து தாக்குதல்கள் நடந்தன. பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகையும் தப்பவில்லை.

 போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் பாதுகாப்பு கருதி அவர் திருகோணமலைக்கு வந்துவிட்டதாக அப்போதே தகவல் பரவிக் கொண்டிருந்தது. சத்தம் கேட்டு நான் இங்கு வந்தேன். இருந்தபோதிலும் முன்கூட்டியே மஹிந்த மற்றும் அவரது குடும்பத்தினர் கடற்படை தளத்தினுள் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இங்கே வந்து பார்த்த போது மிகவும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது," என்கிறார் இந்தப் பகுதியைச் சேர்ந்த ஹாஷி ஹெட்டியாராச்சி. மஹிந்த மற்றும் அவர்களின் குடும்பத்தை இங்கு தங்க விடாமல் வெளியேற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். 

அத்தோடு பாதுகாப்பு பலமாக இருந்ததாலும் பிரச்னைகள் இன்றி மாலை நான்கு மணியளவில் கூட்டம் கலைந்து சென்றது" என்றார் அவர். கூட்டம் அதிகமாக வந்ததும் பாதுகாப்புப் படையினர் கடற்படைத் தளத்தின் முன்பக்கச் சுவர்களில் இருந்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியதாக அருகே வசிக்கும் ஹுசைன் தெரிவித்தார். "முதலில் தடுப்புகள் ஏதுமில்லை. போராட்டக்காரர்கள் அதிகமானதும் வாசலைச் சுற்றி தடுப்புகள் வைக்கப்பட்டன" என்றார் அவர். போராட்டம் நடந்த அந்த ஒருநாள் மட்டும்தான் திருகோணமலையில் பதற்றம் இருந்தது. அந்தத் தருணத்தில் மஹிந்த குடும்பத்தினர் அங்குதான் இருக்கின்றனர் என்று யாரும் உறுதி செய்யவில்லை. சமூக ஊடகங்களில்தான் இந்தத் தகவல் அதிகமாகப் பரவியது. 

10-ஆம் தேதியன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாதுகாப்புத் துறைச் செயலாளர் குணரத்ன, பாதுகாப்பு கருதி மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தினர் திருகோணமலை கடற்படைத் தளத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்தபோதுதான் இந்தத் தகவல் உறுதியானது. ஆனால், அதன் பிறகு திருகோணமலையில் போராட்டங்கள் ஏதும் நடைபெறவில்லை. காவல்துறையும் பாதுகாப்புப் படைகளும் கடற்படைத் தளத்துக்குச் செல்லும் வழியில் தடுப்புகளை அமைத்து சோதனை செய்து வருகின்றனர். அடையாள அட்டைகளைக் காண்பித்த பிறகே கடற்படைத் தளத்துக்கு அருகே செல்ல முடிகிறது. வியாழக்கிழமையன்று அந்தப் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்றதுமே காவல்துறையின் உயர் அதிகாரிகள், காவலர்கள், காவல்துறையின் ஊடகப் பிரிவினர் என பலரும் அங்கே வரத் தொடங்கினர். காவல்துறையினரின் வாகனங்கள் வந்து சேர்ந்தன. பிபிசி தமிழ் குழுவிடம் அவர்கள் விவரங்களைக் கேட்டுக் கொண்டனர். 

எனினும் கடற்படைத் தளத்தைச் சுற்றி செய்தி சேகரிப்பதைத் தடுக்கவில்லை... ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நேரங்களிலும் கடற்படைத் தளம் அருகேயுள்ள பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டிருந்தன. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே இந்தப் பகுதியைக் கடந்து சென்றன. கடற்படைத் தளத்துக்குள் உள்ள பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றுவோர் மட்டும் அதற்குள் சென்று வருவதைக் காண முடிகிறது. இரண்டாம் உலகப் போர் நடந்தபோது ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் திருகோணமலை கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்த பிறகு இது இலங்கை பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 

திருகோணமலையில் இருக்கும் இயற்கைத் துறைமுகத்துக்கு அருகே அமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தளம் ஒப்பீட்டளவில் பாதுகாப்பு மிக்கது. இதன் அருகிலேயே விமான ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவியில் இருந்து விலகிவிட்ட நிலையில், அவரும் அவர் தொடர்புடைய 16 பேரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மே 9-ஆம் தேதி காலி முகத்திடலில் தொடங்கிய வன்முறை தொடர்பான வழக்கில் இந்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. அவர்களது கடவுசீட்டுகள் முடக்கப்பட்டிருக்கின்றன. திருகோணமலையில் அதிஉயர் பாதுகாப்பில் மஹிந்த ராஜபக்ஸ இருக்கும் அதே வேளையில் அதிபர் மாளிகையில், கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார்.

 திருகோணமலையில் இருந்தபடியே அவருக்கு வாழ்த்துச் செய்தியையும் ராஜபக்ஸ பதிவு செய்திருக்கிறார். இதேவளை ..! இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவிக்கின்றது. இலங்கை சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கம் ஒன்றையே தாம் கோரிய போதிலும், அதனை பொருட்படுத்தாது ரணில் விக்ரமசிங்கவை நியமித்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது' என மைத்திரிபால சிறிசேன கூறுகிறார் ஆயினும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இன்றும் தக்க வைத்துள்ள ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ரணில் விக்ரமசிங்கவின் நியமனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதை காண முடிகின்றது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அழைப்பின் பேரில், பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்ரமசிங்கவிற்கு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒரு சில நொடிகளில் வாழ்த்து தெரிவித்தமை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முழுமையான ஆதரவு ரணிலுக்கு இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அதேவளை.. ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிளவுபட்டு, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி இன்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையை கொண்ட ஒருவருக்கே பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என அரசியலமைப்பில் உள்ள போதிலும், தோல்வி அடைந்து தேசிய பட்டியலில் வருகைத் தந்த ஒருவருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டமை தவறானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவிக்கிறார். நாட்டை கட்டியெழுப்புவதற்கு மாறாக, குடும்பத்தை பாதுகாத்துக்கொள்வதற்காகவே ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ ஆகியோரின் கோரிக்கைக்கு அமையவே, ரணில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய நிலை வரும்போது, ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள ஒருவர் கூட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க மாட்டார்கள் என்றும் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார். ரணில் விக்ரமசிங்கவுடன் இனி கடமையாற்ற முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே, தாம் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வெற்றி கொண்டவரே பிரதமராக வேண்டும் எனக் கூறும் அவர், ஜனாதிபதியின் மனதை வென்றவரால் பிரதமர் பதவியை வகிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். இதன்படி, தமது கட்சி எந்தவொரு அமைச்சு பொறுப்புக்களையும் ஏற்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார்...

 இதேபோன்றே.. அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்புக்களை எந்தவிதத்திலும் பொருட்படுத்தாது, நேற்றைய தினம் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் எட்டியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். மக்களின் கருத்துக்களை கேலிக்கு உட்படுத்தும், மக்களின் கருத்துக்களை செவிமடுக்காத மிக மோசமான தீர்மானம் இதுவென அவர் கூறினார். பிரதமர் பதவிகளை வகித்து, அரசாங்கத்தை அமைத்து ஆட்சி செய்த ரணில் விக்ரமசிங்கவினால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு ஆசனத்தை கூட பெற முடியவில்லை என அவர் குறிப்பிட்டார். மக்கள் செல்வாக்கை பெறாத, ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவரையே ஜனாதிபதி இன்று பிரதமராக நியமித்துள்ளதாக அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார். 

கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்கவையும், ரணில் விக்ரமசிங்க கோட்டாபய ராஜபக்ஷவையும் மாத்திரமே நம்புகிறார்களே தவிர, பொதுமக்கள் அவர்களை நம்பவில்லை என அவர் குறிப்பிட்டார். ஜனநாயக விரோதமான வகையில் ரணிலை பிரதமராக ஜனாதிபதி நியமித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்... ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியாக இருந்து செயற்பட்டு வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அந்த கூட்டணியுடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்வதாக அண்மையில் அறிவித்திருந்தது. இதன்படி, நாடாளுமன்றத்தில் இரண்டு ஆசனங்களை கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தற்போது, சுயாதீனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய பிரதமர் தெரிவு தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புதிய பிரதமரின் எதிர்கால திட்டங்களை அவதானித்து வருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை வீட்டுக்கு அனுப்பும் மக்களின் உணர்வுபூர்வமான கோரிக்கை மற்றும் பொருளாதார மீட்சி குறித்து புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் உள்ள திட்டங்களை வெளிப்படுத்த வேண்டும் என அவர் கூறுகின்றார். ''ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை பதவி விலகுமாறு மக்கள் உணர்வுபூர்வமாக கோரிவந்த நிலையிலும், பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்ததன் காரணமாகவுமே நாம் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றோம். தற்போதைய நிலையில், புதிதாக பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். அவருக்கு சம்பிரதாய ரீதியாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளோம். நாம் அரசாங்கத்தில் இருந்து விலகியமைக்கான காரணங்கள் தொடர்பில் அவருடைய அடுத்த கட்ட செயல்பாடுகள் தொடர்பில் கரிசனைகளைக் கொண்டுள்ளோம் என செந்தில் தொண்டமான் கூறினார். 

குறித்த விடயங்கள் தொடர்பில் பிரதமரின் அறிவிப்புகள் வெளியான பிறகே இ.தொ.கா கூடி ஆராய்ந்து உரிய தீர்மானத்தை எடுக்கும் என தெரிவித்த அவர், என்றுமே மக்களின் கோரிக்கைக்கு ஏற்ற நிலைப்பாட்டில் இ.தொ.கா உறுதியாக நிற்கும் என கூறினார்.. இதேவேளை புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் தமது கட்சி பதவிகளை ஏற்காது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளுமாறு தமக்கு விடுத்த அழைப்பை தான் நிராகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். புதிய பிரதமரின் திட்டங்கள் தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

 நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் நன்மைகளை உருவாக்கக் கூடிய பிரதமரின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கத் தயாராக இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், 6ஆவது தடவையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு இருக்கின்ற அனுபவமும், சர்வதேச உறவுகளும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளை இலகுபடுத்தும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

அத்துடன், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களை பேசிக்கொண்டு இருக்காமல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் உருவாகவுள்ள புதிய அரசாங்கத்திற்கு ஏனைய தமிழ் தரப்புக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கவின் தெரிவுக்கு எதிர்கட்சிகள், எதிர்ப்பை வெளியிட்டு வருகின்ற நிலையில், நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றம் எதிர்வரும் 17ஆம் தேதி கூடவுள்ள நிலையில், அன்றைய தினத்தலேயே பிரதமருக்கான பெரும்பான்மை நிலவரம் தெரிய வரும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறினார். 

நன்றி...! 
ரஞ்சன் அருண் பிரசாத் 
மற்றும் எம். மணிகண்டன். 

BBC NEWS தமிழ் ..









திருகோணமலையில் மஹிந்த ராஜபக்ஸ: என்ன நடக்கிறது கடற்படைத் தளத்தில்?... Reviewed by Author on May 13, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.