அண்மைய செய்திகள்

recent
-

யாழில் பேஸ்புக்கில் காதல் வலை விரித்து யுவதியிடம் பெற்றோல் திருட்டு!

புதினங்களின் சங்கமம் யாழில் பேஸ்புக்கில் காதல் வலை விரித்து பெற்றோல் திருட்டு: பழகிப் பார்க்க பண்ணை கடற்கரைக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி! June 19, 2022 newtamils1 0 Comments பேஸ்புக்கில் காதல் வலை விரித்து யுவதியிடமிருந்து பெற்றோல் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த நூதன திருட்டு இடம்பெற்றது. ஆனைக்கோட்டையை சேர்ந்த யுவதியின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல், சுமார் ரூ.4,000 பணம் திருடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக பேஸ்புக்கில் அறிமுகமான நபரின் காதல் வலையில் சிக்கியே யுவதி இவற்றை இழந்துள்ளார். 

 யாழ் நகரிலுள்ள அழகுக்கலை நிலையமொன்றில் பணிபுரியும் யுவதிக்கு, ஒரு வாரத்திற்கு முன்னர் பேஸ்புக்கில் இளைஞன் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, நெருக்கமாக உரையாடியுள்ளனர். இருவரும் நேரில் சந்திக்க திட்டமிட்டு, கடந்த வெள்ளிக்கிழமை மாலை பண்ணை கடற்கரையில் சந்தித்துள்ளனர். யுவதி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பெற்றோல் தட்டுப்பாட்டினால் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வந்ததாக இளைஞன் தெரிவித்துள்ளார். இதன்போது, இளைஞனின் பேஸ்புக் புகைப்படத்திற்கும், நேரடி தோற்றத்திற்கும் வேறுபாடு காணப்பட்டுள்ளது. அது குறித்து யுவதி வினவிய போதும், இளைஞன் சாதுரியமாக நிலைமையை சமாளித்துள்ளார். பண்ணை கடற்கரையை ஒட்டிய சீமெந்து இருக்கையில் இருவரும் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்துள்ளனர். 

இதன்போது இளைஞனிற்கு சில தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளன. தன்னை ஏற்றி வந்த நண்பரின் நண்பரின் மோட்டார் சைக்கிள் சில்லு பஞ்சராகி விட்டதாகவும், அவரிடம் பணமில்லை, நகரத்தில் நிற்கும் அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு 10 நிமிடங்களிற்குள் வருவதாக கூறிய இளைஞன், பேஸ்புக் காதலியின் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு சென்றார். நகரில் பணிபுரிவதால் இளைஞனுடன் மோட்டார் சைக்கிளில் செல்வதை யுவதி தவிர்த்துள்ளார். குறிப்பிட்டதை போலவே 10 நிமிடங்களில் இளைஞன் திரும்பி வந்துள்ளார். மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துமிடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, யுவதி இருந்த இடத்திற்கு வந்து, நீண்டநேரம் உரையாடிக் கொண்டிருந்துள்ளார். அந்த இளைஞன் புறப்படும் நேரத்தில் நண்பரை தொலைபேசியில் அழைத்துள்ளார். நண்பர் வந்ததும், மோட்டார் சைக்கிளில் ஏறி இளைஞன் சென்றுவிட்டார். 

யுவதி தரிப்பிடத்திற்கு வந்து மோட்டார் சைக்கிளை இயக்கிய போது, மிகச்சிறிதளவு மீதம் விட்டு, ஏனைய பெற்றோல் உறிஞ்சி எடுக்கப்பட்டிருந்ததை அவதானித்தார். அத்துடன், மோட்டார் சைக்கிளிற்குள் வைக்கப்பட்டிருந்த பணப்பையிலிருந்த ரூ.4,000 பணமும் திருடப்பட்டிருந்தது. பண்ணை பகுதியில் நின்றிருந்த ஆனைக்கோட்டையை சேர்ந்த இளைஞன் ஒருவரும், நண்பர்களும் தலையிட்டு யுவதி வீடு திரும்ப சிறிதளவு பெற்றோல் வழங்கியதுடன், ஏனையவர்கள் ஏமாறாமல் இருக்க, சம்பவம் பற்றி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியுமாறு ஆலோசனை கூறினார். எனினும், யுவதி முறைப்பாடு பதிவு செய்யவில்லை. அநீதி நேர்ந்த பின்னரும், சமூகத்திற்கு அஞ்சி, மௌனமாக இருக்கும் ஒரு பகுதி பெண்களின் மனநிலை தொடரும் வரை, விதம் விதமான ரூபங்களில் ஏமாற்றுபவர்கள் இருக்கவே செய்வார்கள்.


யாழில் பேஸ்புக்கில் காதல் வலை விரித்து யுவதியிடம் பெற்றோல் திருட்டு! Reviewed by Author on June 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.