Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

கட்டுரைகள்

சினிமா

-

தமிழ் மக்கள் உரிய நேரத்தில் தக்க பாடம் புகட்டுவர்...


தமிழனுக்கு தமிழனே பகையாகிவிட்ட நிலையில் தமிழ் மக்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற ஏக்கம் பலரிடமும் இருக்கவே செய்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் பாவமன்னிப்பு வழங்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் அவர்களை நம்பி வாக்களித்தனர்.வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்தவர்களில் சிலர், இப்போது அரசுடனும் பேரினவாத சக்திகளுடனும் இணைந்து போவதில் மிகத் தீவிரமாக இருக்கின்றனர்.

இதனால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது என்ற நிலைமை உணரப்படுகிறது.

இந்நிலையில் வடக்கு மாகாண சபையில் நடந்த அதிரடிச் சம்பவங்கள் தமிழ் மக்களை கதிகலங்கச் செய்ததுடன் தமிழர்களுக்கு ஆட்சி என்பது பொருத்தமற்றது என்றவாறான கதைகள் தென்பகுதியின் விமர்சனமாக மாறியும் உள்ளது.

விடுதலைப் புலிகள் என்ற மண் மீட்புப் போராட்ட அமைப்பு உருவாகிய இத்தமிழ் மண்ணில், விடுதலைப் புலிகள் எவ்வாறாக நிர்வாகம் நடத்தினர் என்பதை இந்த உலகமே நன்கறியும்.

தவிர, விடுதலை புலிகள் அமைப்பின் ஒழுக்கம், கட்டுப்பாடு என்பன எதிரிகளையும் திகைக்க வைத்தது.

இவ்வாறாக ஒரு பெரும் விடுதலைப் போராட்டத்தை நடத்திய தமிழினம் இன்று மாகாண சபையைக் கூட நடத்த முடியாமல் தத்தளிக்கிறது என்ற அளவில் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை தமிழ் மக்களின் இயலாமையன்று.

மாறாக பேரினவாத சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு குழுவாக இயங்கும் தமிழ் அரசியல்வாதிகள் வேண்டுமென்றே செய்கின்ற திருகுதாளங்கள்.

இதன் ஓர் உச்சக்கட்டமே வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானமாகும்.

இவற்றைச் செய்கின்றவர்கள் இதன் பின் விளைவு பற்றி இம்மியும் சிந்திக்கவில்லை.

அத்தகைய சிந்தனை அவர்களுக்குத் தேவையுமற்றது. பேரினவாதத்துடன் சேர்ந்து எத்தகைய நிலைமையைத் தோற்றுவிக்க வேண்டுமோ அத்தகைய நிலைமையைச் செய்து முடிப்பதே அவர்களின் இலக்காக உள்ளது.

எனினும் இவற்றை தமிழ் மக்கள் ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள்.

வடக்கு மாகாண சபையில் என்ன நடக்கிறது. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் எப்படி உரையாற்றுகிறார்கள் என மக்கள் விழிப்பாக அவதானிக்கத் தலைப்பட்டுள்ளனர்.

தமது அரசியல் நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் விழிப்படைந்துள்ளதால்,

வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் மிகச்சிறப்பாக அமையும் என நம்ப முடியும்.

அதேவேளை சபை நடவடிக்கையை வேண்டுமென்றே குழப்ப யார் நினைத்தாலும் மக்கள் அதனை அனுமதிக்கப் போவதில்லை என்பது சர்வநிச்சயம்.
நன்றி- வலம்புரி-

தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் மூவர் கையில்.....


வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீழ்ச்சிக்கான நடவடிக்கையாகும்.

எப்பாடு பட்டும் விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்கிக் காட்டுகிறோம் என்பது தமிழரசுக் கட்சியில் இடையில் இணைந்து தங்களை முதன்மைப்படுத்தியவர்களின் முடிவு.

இந்த முடிவு கட்சியின் எதிர்காலம் பற்றியோ தமிழ் மக்களின் மனநிலை பற்றியோ சிந்திக் காத செயலாகும்.

எனினும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள் தனது கட்சியைக் காப்பாற்றும் கடமைப்பாட்டை உடையவர்.

மாவை சேனாதிராசா தலைவராக இருந்த போது தமிழரசுக் கட்சி வீழ்ச்சி கண்டது என்றொரு அவப்பெயரை அவர் தனதாக்கிக் கொள்ளமாட்டார்.

அதேநேரம் இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் போராட்டங்களில் ஈடுபட்ட ஆரம்ப கால உறுப்பினர் மாவை சேனாதிராசா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே அவர் நிலைமைகளை உணர்ந்து தமிழரசுக் கட்சியை உடைக்க, அதன் எதிர்காலத்தை நிர்மூலமாக்க, கட்சிக்குள் இருப்பவர்கள் செய்கின்ற வீம்புத்தனங்களைப் புரிந்து கொண்டு கட்சியைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை எடுப்பார் என நம்பலாம்.

இதைச் செய்வதாக இருந்தால் கொதிநிலையில் இருக்கக்கூடிய தமிழ் மக்களை ஆற்றுப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும்.

தமிழ் மக்களை ஆற்றுப்படுத்துவதாக இருந்தால், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தமிழரசுக் கட்சி செய்த பாவங்களுக்கு; கெடுதிகளுக்கு கழுவாய் தேட வேண்டும்.

இல்லையேல் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் நடந்து கொண்ட ஒரு விடயமே தமிழரசுக் கட்சியை தவிடுபொடியாக்கி விடும்.

ஆக, இன்றைய சூழ்நிலையில் மாவை சேனாதிராசா அவர்கள் தற்துணிவோடு தீர்மானங்களை எடுப்பாராக இருந்தால், முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் இணங்கி நிலைமையை சுமுகமாக்க வேண்டும்.

தவிர, இதற்கும் அப்பால் இன்னும் இருவர் தமிழரசுக் கட்சியைக் காப்பாற்ற முடியும்.

அவர்கள் சுகாதார அமைச்சர் டாக்டர் பா.சத்தியலிங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ப.டெனிஸ்வரன் ஆகியவராவர்.

ஆம், எங்கள் அமைச்சு மீது நீங்கள் நடத்தும் விசாரணைகளுக்கு நாங்கள் ஒத்துழைப்போம். எந்த இடையூறையும் செய்யமாட்டோம் என்ற கடிதத்தை  இருவரும் முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்து ஒப்படைப்பது.

இவ்வாறு இக்கடிதத்தை கொடுப்பதன் மூலம் இருவரும் தாங்கள் நேர்மையானவர்கள், விசாரணைக்கு அஞ்சவில்லை என்பதை நிரூபிப்பதாகவும் ஆக்கிக் கொள்ளலாம்.

எனினும் இவ்விருவரும் கடிதத்தை கொடுப்பதை சிலர் விரும்பமாட்டார்கள். ஏதாவது விளக்கம் கூறி கடிதம் கொடுப்பதை அவர்கள் தடுப்பார்கள்.

ஆனாலும் இவர்கள் இருவரும் துணிந்து கடிதத்தைக் கொடுத்தால், முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது தமிழரசுக் கட்சி கொண்டு  வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் பாவம் கழுவப்படும். நடக்குமா? இருந்து பார்க்கலாம்.  

வடக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி! சமரசத்தில் இறங்கியுள்ள சர்வதேசம்....


வடக்கு அரசியல் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் வெளிநாட்டு தூதுவர்கள் ஈடுபட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வட மாகாண சபையில் எழுந்துள்ள பிரச்சினையை தீர்க்க முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழத் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

தற்போது வரையில் சாதகமான நிலை கிடைக்காத நிலையில், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் கொழும்பிலுள்ள சில தூதரகங்கள் மற்றும் உயர் ஆணைக்குழுக்கள் இந்த விடயத்தில் தலையிட்டுள்ளன. பிரச்சினைக்கு இணக்கத்துடன் தீர்வு காணுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமாகாண சபை அமைச்சர்கள் இருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் வடக்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதனையடுத்து வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம், சபையின் உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனையடுத்து வடக்கு அரசியல் மட்டத்தில் கடந்த சில தினங்களாக நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வர அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என, தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன், வட மாகாண சபை முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

எனினும் குறித்த இரண்டு அமைச்சர்களிடமிருந்தும் எழுத்துமூல உறுதிமொழியை எதிர்பார்ப்பதாக வடக்கு முதமைச்சர் பதில் கடிதம் எழுதியிருந்தார்.

இதனை ஏற்றுக்கொள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மறுத்துள்ள நிலையில், வடக்கு அரசியல் நெருக்கடி இன்னும் முற்றுப்பெறதா நிலை நீடித்து வருவதாக குறித்து ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

ஈழத் தமிழனாகப் பிறந்ததன் பெரும்பேறு கண்டுற்றேன்.....


“...இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே என்பார் திருநாவுக்கரசர்.

மனிதப் பிறவி  எடுத்ததன் பேற்றை இயம்பு வதுதான் அவரின் நோக்கம். நம் நோக்கமும் அதுவாயினும் அவர் குறிப்பிடும் பேறும் நாம் குறிப்பிடும் பெரும் பேறும் வேறுபட்டவை. அவர் இறைதாளைக் காண்பது பேறு என்பார்.

நான் எங்கள் தமிழினத்தின் உணர் வெழுச்சி காண்பதே பேறு என்பேன்.
ஆம், வடக்கின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழரசுக் கட்சி கொண்டு வந்தபோது,

அது கண்டு எம் தமிழினம் பதறியடித்ததை; எம் இளைஞர்கள்  வீறுகொண்டெழுந்ததை கண்ணுற்ற போது இதுவே  ஈழத் தமிழனாகப் பிறந்ததன் பெரும் பேறு என்றுணர்ந்தேன்.

நேர்மையான - நீதியான - தமிழினத்தின் நம்பிக்கை  நட்சத்திரமாக -  ஈழத் தமிழினத்தின் தலைவனாக இருக்கும் வடக்கின் முதலமைச் சர் விக்னேஸ்வரனின் பதவியைப் பறிக்க பதறுகள் முடிவு செய்தன என்ற போது,

ஒரு கணப்பொழுதில் வடக்கு மாகாணம் முடங்கியது. யாரும் எங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. எங்கள் தலைவனுக்காக  நாங்களே கடைகளைப் பூட்டுகிறோம்; போக்குவரத்துச் சேவையை நிறுத்துகிறோம்; பாடசாலைகள், கல்விச்சாலைகள் எதுவும் இயங்கா! என்றுரைத்து ஒருகணப்பொழுதில் வடக்கு மாகாணத்தை ஒட்டுமொத்தமாக முடங்கச் செய்த தமிழ் மக்களின் காலம் உணர்ந்த செயல்கண்டு,

ஓ...! பெற்றேன் ஈழத் தமிழனாய் பிறந்ததன் பேறு என்றுணர்ந்தேன். பெறற்கரிய மானிடப் பிறப்பிற்கு இப்பேறு போதுமா? என்ற குறை ஏற்பட்டால்,

இதனையும் ஏற்றிடுக! என்பது போல், நேற் றைய தினமே நல்லூரில் அலையெனத் திரண்ட மக்கள், தலைவா! எதைக் கொடுத்தும் உனைக் காப்போம் என்று உணர்வுபூர்வமாக  - மனப்பூர்வமாக அண்டம் அதிர,

வானுலகத்தார் இஃதென்ன வடக்கில் பேரெழுச்சி என்று எட்டிப் பார்த்து பிரமிக்க,

ஐயகோ! எந்தப் பிரகிருதிகள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து,

பழுத்த தமிழரசுக் கட்சியை விழுத்த முயற்சி எடுத்தார் என்று; அக்கட்சிக்குள் குறையும் குற்றமும் கொப்பளிக்க,

விட்டிடு... விட்டிடு... விசர் வேலை, பார்த்த தெல்லாம் அதுதான் என்று கூட்டமைப்பின் தலைவர் குறையளக்க,

சித்தார்த்தா, சிறிதரா, நிர்மலநாதா தூது செல்லுங்கள். கட்சிக்கு ஏற்பட்ட களங்கத்தை; மக்களின் கடும் எதிர்ப்பை சமாளிக்க, விழுந்தாலும் ரோசமும் மானமும் இல்லா மீசையில் மண் பட்டால் என்ன? படாமல் விட்டால் என்ன? ஐயாவைச் சந்தித்து அமைதிப்படுத்துக என்று முயற்சி நடக்குமளவில், 

நீண்ட பெரும் மக்கள் பேரெழுச்சி கண்ட பேறு, ஈழத் தமிழனாய் பிறந்த எனக்கு பெரும் பேறு என்றுணர்ந்தேன்.

ஓ! எங்கள் தலைவன் ஒரு கணம் கண் கலங்கிய போது, காளத்திக் கண்ணப்பனுக்கு  ஈடாய் எங்கள் தமிழ் இளைஞர்களின் இதயம் சூடாகி கொதித்த குருதி,

அவர் தம் கண்களில் கண்ணீராய் வெளிக்கிட்டதைக் கண்ணுற்ற போது, ஐயனே! ஈழத் தமிழனாகப் பிறந்த பெரும் பேறு பெற்றேன்.
- நன்றி-வலம்புரி-


தமிழுக்கு மரியாதை! அழியும் நிலையில் உள்ள 25 மொழிகளில் தமிழ் 8ம் இடத்தில்.....


சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டாவது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு, உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழ் எழுத்தாளர்கள் வந்திருந்தனர்.

இந்த மாநாட்டை உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு என்று கூறுவதைவிட அயலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு என்றுதான் உண்மையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

தமிழக எழுத்தாளர்கள் இந்த மாநாட்டில் அதிகம் பங்கு பெறாமல் போனது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது.

தமிழ் மாநாடு என்கிற தனிநாயகம் அடிகளின் சிந்தனை, உலகளாவிய அளவில் தமிழறிஞர்களை ஒருங்கிணைக்க உதவியது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 1966ல் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழ் மாநாடும், சென்னையில் 1968ல் நடந்த இரண்டாவது உலகத் தமிழ் மாநாடும், தமிழையும் தமிழினத்தையும் உலகமே வியந்து பார்க்க வைத்தன.

கோவையில் 2010ல் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு ஆய்வுகளிலும், உலகளாவிய தமிழ் அறிஞர்கள் கூடித் தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்து விவாதிப்பதிலும் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.

உலகத் தமிழ் மாநாட்டை விரைவிலேயே நடத்துவதற்கான முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிகிறது.

அந்த மாநாடு நடக்கப்போவது அமெரிக்காவிலா இல்லை தென்னாபிரிக்காவிலா என்பது முடிவாகாத நிலையில், சிறிய அளவில் நடத்தப்பட்டாலும்கூட, சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு உலகமெலாம் பிரிந்து கிடக்கும் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

இந்த மாநாடு சில முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றி இருந்தது. மாநாட்டில் பேசியவர்கள் தமிழ் குறித்து, குறிப்பாக, அயலகத் தமிழ் எழுத்தாளர்கள் குறித்துத் தெரிவித்த கருத்துகள் ஆழ்ந்த சிந்தனைக்குரியவை.

தாய்த் தமிழகத்திலேயே தமிழ் மிகப்பெரிய பின்னடைவை எதிர்கொள்ளும் நிலையில், அயலகத் தமிழர்கள் தங்கள் தாய் மொழியையும், தமிழின் பண்பாட்டுக் கூறுகளையும் பாதுகாப்பதும், அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வதும் எந்த அளவு கடினம் என்பதை நாம் உணர வேண்டும்.

பல நாடுகளில், தமிழ் வம்சாவளியினர் தமிழை எழுதவும், பேசவும் முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அங்கெல்லாம், தமிழ் கற்றுக் கொடுப்பதற்கான முயற்சியில் சில அமைப்புகள் ஈடுபட்டிருக்கின்றன.

அவர்களுக்கு முறையான வழிகாட்டுதலும், ஆதரவும் தாய்த் தமிழகத்திலிருந்து தரப்படவில்லை என்பது மிகப்பெரிய குறை.

பிரிட்டிஷ் கவுன்சில், அலையன்ஸ் பிரான்சைஸ், இந்தி பிரசார் சபா போன்று மொழியைப் பரப்பவும், கற்றுக் கொடுக்கவும், ஏனைய மொழிகளில் அமைப்புகள் இருப்பதுபோல, தமிழுக்கு அமைப்பு எதுவும் இல்லை.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் சில முயற்சிகளை மேற்கொள்கின்றன. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இல்லை.

ஆனாலும்கூட, உலகளாவிய அளவில் உள்ள தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கவும், அந்த நாடுகளில் எல்லாம் தமிழ் கற்றுக் கொடுக்கவும் நாம் எந்தவொரு முறையான அமைப்பையும் இன்னும் ஏற்படுத்தாமல் இருக்கிறோம்.

இரண்டாவது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் தீர்மானத்தில் வைக்கப்பட்டிருக்கும் முக்கியமான கோரிக்கைகளில், அயலகத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் தாய்த் தமிழ் ஊடகங்களில் வாய்ப்பளிப்பது, அயலகத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளையும், தமிழக நூலகங்களில் இடம்பெறச் செய்வது, அயலகத் தமிழ் எழுத்தாளர்களையும் தமிழக அரசு விருது கொடுத்து கெளரவிப்பது ஆகியன மிகவும் முக்கியமானவை.

மாநாடு முடிந்த ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறையின் மானியக்கோரிக்கை விவாதத்தின்போது செய்திருக்கும் சில அறிவிப்புகள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவை.

பள்ளிக் கல்வித்துறையில் மிகப்பெரிய மாறுதல்களைச் செய்து வருவதைப் போலவே, தமிழைத் தரணியெங்கும் கொண்டு செல்லும் தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவித்திருப்பது வரவேற்புக்குரிய செயல்பாடு.

உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் வாரிசுகள் தமிழ் கற்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யக் காத்திருப்பதாகத் தமிழக அரசு உறுதி அளித்திருக்கிறது.

வெளிநாடு வாழ் தமிழ்க் குழந்தைகள் தமிழ் கற்றுக்கொள்வதற்கு உதவியாகத் தமிழில் பாடப்புத்தகங்களை அவர்களுக்கு அனுப்பி வைப்பது, இங்கிருந்து தமிழாசிரியர்களை அனுப்பி அங்குள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது, இணையதளம் வாயிலாகத் தமிழ் கற்றுத்தருவது உள்ளிட்ட தமிழக அரசின் முனைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

உலகில் எங்கெல்லாம் தமிழ் நூலகங்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் தமிழக அரசின் சார்பில் புத்தகங்கள் நன்கொடையாக வழங்குவது என்கிற முடிவும், பொதுமக்களிடமிருந்து ஒரு லட்சம் அரிய நூல்களை நன்கொடையாகப் பெற்று யாழ்ப்பாணம், மலேசியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலுள்ள நூலகத்திற்கு அனுப்புவது என்கிற முடிவும் வரவேற்புக்குரியவை.

அதேபோல, அயலகத் தமிழ் எழுத்தாளர்களுக்கும், அறிஞர்களுக்கும் விருது கொடுத்து கெளரவிப்பதையும் அரசு பரிசீலிக்க வேண்டும்.

உலக அளவில் அடுத்த நூறு ஆண்டுகளில் அழிந்து விடும் வாய்ப்புள்ள 25 மொழிகளில் தமிழ் எட்டாவது இடத்தில் இருப்பதாக 'யுனெஸ்கோ' அமைப்பு எச்சரித்திருக்கும் நிலையில், நாம் முனைப்புடன் விரைந்து செயல்பட்டாக வேண்டும்.

தமிழக அரசு இதை உணர்ந்திருக்கிறது என்பதைத்தான் அறிவிப்புகள் உணர்த்துகின்றன.

முதலமைச்சருக்கு நீங்கள் செய்தது தர்மமாகுமோ? நீதியாகுமோ?


வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை இலங்கைத் தமிழரசுக் கட்சி கொண்டு வந்ததால் தமிழ் மக்களின் இதயங்கள் தணலாய் எரிகின்றன.

எங்களுக்குக் கிடைத்தற்கரிய ஒரு தலைவனைப் பெற்றோம் என்ற ஆறுதல் ஒன்றுதான் எங்களிடம் இருந்தது.

அதற்கும் உலை வைக்கும் துரோகத்தனத்தை என்னவென்று சொல்வதென மக்கள் நெக்குருக; குரல் அடைக்கக்  கருத்துரைப்பதைக் கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது.

ஒரு புறத்தில் தலைவன் என்றால் விக்னேஸ்வரன் போன்றல்லவா இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது, அட! நாம் தமிழர் என நெஞ்சு நிமிர்ந்து கொள்கிறது.

அதேவேளை மிகப்பெரும் தலைவனுக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்  கொண்டு வந்து உலகம் சிரிக்கும் வண்ணம்  கூத்தாடும் குப்பைத்தனத்தை நினைக்கும் போது,

இறைவா! ஏன்தான் இந்தத் தமிழினத்தில் எங்களைப் படைத்தாய் என்று மனம் ஏங்கிக் கொள்கிறது.

ஆம், வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தயாரித்து;

அதில் சிலர் கையயாப்பமிட்டு; வடக்கின் ஆளுநரிடம் கையளிப்பதற்கு முன்னர் பல தடவைகள் சிந்தித்திருக்க வேண்டாமோ!

அதிலும் நடுநிலை காக்க வேண்டிய  உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கக்கூடிய அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுநர் கூரேயிடம் கையளித்தார் எனும் போது, வள்ளுவத்தின் நீதி புதைக்கப்பட்டதல்லவா?

காலைப்பொழுதில் முதலமைச்சருக்கு வாழ்த்து, இரவுப் பொழுதில் முதலமைச்சருக்கு எதி ராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கைய ளிப்பு. இது அவைத் தலைவரின் நடுவு நிலைக்கு அழகா என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும்.

ஐயா! ஆரை நம்புவது? தர்மம் அந்தளவுக்கு விலை போய்விட்டதா? பதவி ஒன்றுதான் இந்த உலகில் பெயர் தரக்கூடியதா? பதவி கிடைத்ததால் அழிவைச் சந்தித்தவர்களின் வரலாறு இல்லையா? ஏன்தான் இப்படி எல்லாம் செய்கிறார்கள்.

அடுத்த தேர்தல் பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா? அல்லது சிந்திக்க யாராவது தடை போடுகிறார்களா? சபை உறுப்பினர் ஒருவர், நந்தவனத்தில் ஓர் ஆண்டி... என்று பாடுகிறார்.

ஐயா! பாட்டின் பொருள் யார்க்குரியது. நீங்கள் பாடிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

இறுதியாக ஒன்று,  கெளரவ மாகாண சபை உறுப்பினர்களே! உங்கள் மனச்சாட்சிப்படி முடிவு எடுங்கள்.

மக்களின் மனநிலை அறிந்து அதற்கு மதிப்புக் கொடுங்கள். முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கரத்தைப் பலப்படுத்துங்கள். நிச்சயம் தமிழ் மக்கள் உங்களைப் போற்றுவர்.

தென்னிலங்கை அரசுடன் - பேரினவாதத்துடன் சேர்ந்து அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்குபவர்களின் சதித்திட்டத்துக்கு உங்கள் எதிர் காலத்தைப் பாழாக்கி விடாதீர்கள். உண்மையை உணர்ந்து; தமிழ் மக்களின் அவலம் அறிந்து முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பக்கபலமாக இருங்கள்.

போர் தந்த பெருந்துயர் போக்க நெஞ்சுக்கு நீதியாக முடிவெடுங்கள். இது இந்த மண்ணில்  நிகழ்ந்த தியாகத்தின் பெயரால் கேட்கப்படுகிறது.
-நன்றி-வலம்புரி-

வடக்கு முதலமைச்சர் யார்..? ; இறுதி முடிவு இன்று மாலை....


வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆளும் தரப்பினரால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதினை அடுத்து  வடக்கு மாகாண சபையின் இடைக்கால முதல்வர் இன்று மாலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வட மாகாண சபையின் ஆளும் கட்சியின் 16 உறுப்பினர்களும் எதிர்கட்சியின் 6 உறுப்பினர்களும் மொத்தமாக வட மாகாண சபையின்  21 உறுப்பினர்களின்  கையெழுத்துடன் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் நேற்று நள்ளிரவு கையளிக்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற வடக்கு வடக்கு மாகாண சபை சிறப்பு அமர்வில்  விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனையும், வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராசாவும் தாங்களாகவே பதவி விலக வேண்டும் என்றும் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் பா.டெனீஸ்வரன், பா.சத்தியலிங்கம் இருவரும் விடுமுறையில் செல்ல வேண்டும் என்றும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளமையின் பின்னரே குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இது தொடர்பில் இன்று யாழ்.தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரை எதிர்ப்பதுதான் நோக்கம் என்றால் எது செய்தாலும்...


தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தவர்கள். இதில் ஒரு பகுதியினர் உயிரிழப்புக்கள்,
சொத்தழிவுகள், உறவுகளின் பிரிவுகள் என தாங்க முடியாத துன்பத்தைத் தாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சிலர் கிரந்தம் விடுவதைக் காணும் போது இதயம் வெடித்து விடும் போல் உள்ளது.

 இன்று வடக்கு மாகாண சபை தனது முழுச் சிந்தனையையும் எதற்காகச் செலவிடுகிறதென்பது அனைவருக்கும் தெரிந்ததே.

வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தைக் குழப்ப நினைத்தவர்கள் மாகாண சபையின் செயலாக்கத்தை எங்கோ கொண்டுபோய் விட்டனர்.

இதனை அவர்கள் தமக்கான வெற்றி என்று நினைக்கலாம். ஆனால் இது வெற்றி அன்று.

வடக்கின் முதலமைச்சர் மீது பழி சுமத்தவும் அவரின் காலத்தில் மாகாண சபை திறம்பட இயங்கவில்லை என்பதை காட்டுகின்ற நோக்கத்தோடும் வடக்கு மாகாண சபையில் உறுப்பினர்கள் சிலர் திட்டமிட்டுச் செயற்படுகின்றனர்.

ஒரு கனதியான முதலமைச்சர் வாய்க்கப் பெற்ற சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பயன்படுத்தி எங்கள் மக்களுக்கு செய்யக்கூடிய நன்மைகளைச் செய்வோம் என்று நினைக்காமல், 

வடக்கு மாகாண சபையைக் குழப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எந்தளவு தூரம் தொந்தரவு கொடுக்க முடியுமோ அந்தளவுக்குத் தொந்தரவு கொடுப்பதை நோக்காகக் கொண்டவர்களின் கபடத்தனத்தால் தமிழ் மக்கள் எந்த நன்மைகளையும் பெற முடியாதவர்களாக உள்ளனர்.

ஆனால் ஒன்றை மட்டும் சொல்ல முடியும். இந்த உலகத்தில் எழுந்த அத்தனை காவியங்களும் இதிகாசங்களும் தர்மத்தைப் போதிப்பதற்கானவை.

மகாபாரதமாயினும் சரி, இராமாயணமானாலும் சரி அனைத்தும் அதர்மம் செய்தவர்கள் தங்களால் அழிந்து போவதை எடுத்துக் காட்டுவதாகும்.

 மகாபாரதம், இராமாயணம் என்றெல்லாம் நீண்ட தூரம் செல்ல வேண்டாம். அண்மையில் ஓகோ என்று வெளியாகிய பாகுபலி படத்தின் கருப்பொருளே அதர்மம் அழிவதும் தர்மம் நிலைப்பதும்தான்.

தன் மகன் பல்வாள்தேவன், மகிழ்மதியை ஆளவேண்டும் என்பதற்காக அவன் தந்தை செய்த நாசகாரங்கள், அக்கிரமங்கள் கொஞ்சமல்ல.

ஆனால் ஈற்றில் நடந்தது என்ன? மகனை மகனின் மகனை இழந்து மகேந்திர பாகுபலிக்கு நடந்த பட்டாபிசேகத்தில் பிங்கலத் தேவரே இராஜ முடியை எடுத்துக் கொடுக்கின்ற நிலைமையில் இருந்தாரே.

இதைப்படம் என்று  யாரும் நினைத்து விடக் கூடாது. இதுவே இயற்கை. இதுவே இறைவன்.

இதை மறந்து எந்த வழியிலும் வடக்கின் முதலமைச்சருக்கு இடுக்கண் கொடுத்து அவரை செய்ய விடாமல் செய்கிறேன் பார் என்றால் நிச்சயம் அதற்கான தண்டனையை இயற்கை வழங்கியே தீரும். இது சர்வ நிச்சயம்.

Popular Posts-Last 30 days