Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

மருத்துவம்

புகைப்படத்தளம்

கட்டுரைகள்

சினிமா

-

கிளிநொச்சியில் சற்றுமுன் விபத்து: ஒருவர் பலி....


கிளிநொச்சி இரத்தினபுரம் சந்திக்கு அருகாமையில் சற்று முன் உழவு இயந்திரத்துடன் மோட்டர் சைக்கிள் ஒன்று மோதுண்டதில் மோட்டர் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார்.

இரத்தினபுரம் சந்திக்கு அருகாமையில் உள்ள வாகன திருத்தகத்தில் இருந்து திருவையாறு நோக்கி செல்ல முற்பட்ட உழவு இயந்திரத்துடன் திருவையாறு பக்கத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டர் சைக்கிள் சாரதி சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த விபத்தில் உயிர் இழந்தவரது சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

எனினும் விபத்தில் பலியான நபர் யார் என்பது குறித்து அடையாளம் காணப்படவில்லை என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து எவரும் கண்டுகொள்வதில்லை : உறவினர்கள் கவலை


காணிப்பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் அதிகாரிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகள் குறித்து அக்கறை கொள்வதில்லையென உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் காணாமல் போன தமது உறவுகளை தேடித் தருமாறும் அவர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறும் வடக்கு கிழக்கில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இப் போராட்டங்கள் இரு மாதங்களை எட்டவுள்ள நிலையில், அரசாங்க அதிகாரிகள் தமது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லையென உறவுகளை தொலைத்தவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 60ஆவது நாளாகவும், வவுனியாவில் 56ஆவது நாளாகவும், முல்லைத்தீவில் 42ஆவது நாளாகவும், யாழ்ப்பாணம் – மருதங்கேணியில் 37ஆவது நாளாகவும், திருகோணமலையில் 47ஆவது நாளாகவும் இன்றும் (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கேப்பாபுலவு மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்றமில்லை - காதர் மஸ்தான்


கேப்பாபுலவு மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முப்படையினருடான சந்திப்பின் பின்னர்  படையினர் வசமுள்ள கேப்பா புலவு மக்களின் காணிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன், பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த பகுதிகளில் மக்கள் விவசாயம் செய்ததற்கான அனைத்து விதமான ஆதாரங்களும் காணப்படுகின்றன பலவருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட சில கட்டிடங்கள் காணப்படுகின்றன தென்னம் தோப்புகள் காணபடுகின்றன எனவே இவ்வாறு எல்லா வளமும் நிறைந்த ஒரு பகுதியை விட்டுக்கொடுப்பதற்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்டவன் என்ற வகையில் நானும் இடம்கொடுக்கப்போவதில்லை.

நல்லாட்சியில் மக்களது காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டாலும் அவை ஆமை வேகத்திலேதான் நகர்ந்துகொண்டிருக்கின்றன இந்த நிலை மாற்றமடைந்து மக்களுக்கு உரித்தான காணிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு அவர்களை நிம்மதியாக வாழ வழி சமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.


கிளிநொச்சியில் 59ஆவது நாளாகவும் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகன போராட்டம்...


கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் உரிய பதிலை வழங்கக்கோரி மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 59ஆவது நாளாகவும் தொடர்கிறது.

குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போதும் இது தொடர்பில் எவ்வித பதில்களும் கிடைக்காத நிலையில், அரசிற்கு அழுத்தங்களை கொடுக்கும் வகையில் போராட்டத்தினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நேற்று பிற்பகல் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய அன்னதான மண்டபத்தில காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான ஏற்பாட்டில் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.


இதன்போது, உரியபதிலை வழங்க அரசு காலத்தை இழுத்தடித்து வருகின்றது. இவ்வாறு தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பதால் பலர் நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே அரசுக்கு அழுத்தங்களை கொடுக்கும் வகையில் போராட்டங்களை விரிவு படுத்தவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டது.


இந்த கலந்துரையாடலில் மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புக்கள் கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையிலும் எதிர்வரும் 27ஆம் திகதி முதற்கட்டமாக முழு அளவிலான கதவடைப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கையில்,


இலங்கையில் வாழுகின்ற தாய், சகோதரர்கள் போன்ற நாங்கள் மாதக்கணக்கில் இப்படித் தெருவில் இருக்கும் போது ஜனாதிபதி பல ஆலயங்களுக்கும், விகாரைகளுக்கும் சென்று ஆசி வேண்டுவது எந்த பலனையும் அழிக்காது.

காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் உறவுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய பதிலை வெளியிட வேண்டும், மறைமுக தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை வெளிப்படுத்த வேண்டும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று இரண்டு மாதங்களை நிறைவு செய்யும் வகையில் 59ஆவது நாளாகவும் எந்தவித பதில்களும் இல்லாது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாங்கள் அவரது தாய்க்கு, சகோதரர்களுக்கு சமனானவர்கள். இந்த வயதில் எங்களது உறவுகளின் பதிலைத்தேடி இப்படி மாதகணக்கில் போராடி வருகின்றோம்.

எங்களுக்கு எந்த ஒரு பதிலையும் வழங்காத நல்லாட்சியின் ஜனாதிபதி இன்று ஆசிவேண்டி நயினாதீவு நாகபூசனி அம்பாள், நாகவிகாரை ஆகியவற்றில் விசேட வழிபாடுகளை செய்துள்ளார்.

இவ்வாறு தெருவில் கிடந்து பல துன்பங்களை அனுபவித்து எங்கள் உறவுகளை நினைத்து துன்பப்பட்டு எங்களைப் போன்ற எத்தனையோ உறவுகள் கண்ணீர் வடிக்கின்ற போது அவருக்கு எப்படி ஆசி கிடைக்கும். எங்களின் கண்ணீரை துடைப்பதன் மூலம் தான் அவருக்கு நல்லாட்சி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

08 ஆண்டுகளாக துன்பங்களை அனுபவித்து வரும் கிளிநொச்சி மக்கள்...


கிளிநொச்சி மாவட்டத்தில் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படாது தற்காலிக வீடுகளில் வாழ்ந்துவரும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் யுத்தத்தின் பின்னர் மக்கள் மீள்குடியேறி 08 ஆண்டுகளாகிய போதும் சுமார் பதினான்காயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிரந்தர வீட்டுத்திட்டங்கள் எவையும் கிடைக்காத நிலையில் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றதாக கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக காணிகளுக்கான உரிமைகள் இன்றியும், ஏற்கனவே மத்திய வகுப்புத் திட்டத்தின் கீழ் பிறிதொரு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட காணிகளில் நீண்டகாலமாக குடியிருப்பதாக மக்கள் கூறியுள்ளனர்.

மேலும், இவ்வாறு தற்காலிக வீடுகளில் தங்கியுள்ள குடும்பங்கள் போதிய வசதிகள் இன்றியும், அடிக்கடி நிலவும் சீரற்ற காலநிலை, அதிகூடிய வெப்பம் என்பவற்றால் துன்பங்களை அனுபவித்து வருவதுடன் தொற்றுநோய்களின் ஆபத்துக்களை எதிர்கொண்டு வருகின்றதாக குறிப்பிட்டுள்ளனர்.

மாமரம் ஒன்று மட்டுமே வளர்ந்துள்ளது குடியிருந்த வீட்டை காணவில்லை!


இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 8 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் தற்போது தாயகம் திரும்பி வருகின்றனர்.

அந்த வகையில், கிளிநொச்சியில் தாங்கள் குடியிருந்த பிரமாண்ட வீட்டின் அஸ்திவாரத்தின் மீதேறி நின்று கொண்டு சிதைந்துப்போன தமது குடியிருப்பு தொடர்பில் தாயகம் திரும்பிய தம்பதியினரான கந்தசாமி மற்றும் சிவமலர் ஆகியோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்திய ஊடகம் ஒன்று கருத்து தெரிவித்துள்ள அவர்கள்,

"கிளிநொச்சியில் பெரும்பாலான குடியிருப்புகள் போரினால் முற்றாக சிதைந்து போயுள்ளன. நாங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது மிகவும் சின்னதாக இருந்த மாமரம் ஒன்று தற்போது மிகவும் பெரியதாக வளர்ந்துள்ளது" என்கிறார் சிவமலர்.

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக அகதிகளாக வாழ்ந்து வந்தவர்கள் கந்தசாமி தம்பதியர். போதிய மருத்துவ சிகிச்சை இன்மையால் தற்போது தாயகம் திரும்பியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போருக்கு பின்னர் இதுவரை சுமார் 8,000 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். பெரும்பாலானவர்களுக்கு இலங்கையின் தற்போதைய சூழல் வருத்தம் அளிப்பதாகவே இருப்பதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம் போரினால் நாடு பிளவுப்பட்டதை அவர்கள் நேரில் பார்த்தவர்கள். மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதில் ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கின்படி, 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. 8 ஆண்டுகளுக்கு பின்னரும் போரினால் ஏற்பட்ட காயங்களை எப்படி குணப்படுத்த போகின்றோம் என்னும் பதற்ற நிலையிலேயே இலங்கை இன்னமும் உள்ளது.

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட மைத்திரிபால சிறிசேன அரசும் இதுவரை போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைப்பு காட்டவில்லை.

அத்துடன், மிகவும் பின்தங்கிய நிலையிலேயே நடவடிக்கைகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது. இதுவரை 50,000 குடியிருப்புகள் மட்டுமே புதிதாக கட்டப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இன்னும் 137,000 குடும்பங்கள் வீடின்றி போரினால் பாதிக்கப்பட்ட பகுதியிலேயே வாழ்ந்து வருகின்றனர் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிளிநொச்சியில் கறுப்பு ஆடையுடன் தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம்....


கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 54ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

சித்திரைப் புதுவருடமான இன்றும் தொடரும் போராட்டத்தில் கறுப்பு ஆடை அணிந்தும், கறுப்பு கொடிகளை ஏந்தியவாறும் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை போராட்டகாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டகாரர்கள்,

சித்திரை புதுவருட பிறப்போடு தங்களுக்கு நல்தொரு செய்தி கிடைக்க வேண்டும். அடுத்த வருடத்திலாவது எங்களின் உறவுகளோடு புதுவருட நிகழ்வை கொண்டாடுவதற்கு வழிசமைக்க வேண்டும்.


இதேவேளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட எங்களுடை அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எங்களுக்கு நல்லதொரு தீர்வை வழங்கவேண்டும்.


அத்துடன் எங்களுடைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபையினர் எங்களோடு வந்து இணைந்து போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.


மேலும், இன்று சித்திரைபுதுவருட பிறப்பில் அனைவரும் தங்கள் தங்கள் குடும்பங்களோடு வருடப் பிறப்பு நிகழ்வை கொண்டாடிக் கொண்டிருக்க நாங்கள் எங்களின் உறவினர்களுக்காக வீதியில் போராடிக் கொண்டிருகின்றோம்.

கிளிநொச்சியில் 45ஆவது நாளாக தொடரும் போராட்டம்...


கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் 45ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இரவு பகலாக தொடர்கிறது, இது தொடர்பில் கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்,

“எங்களை அனைவரும் கைவிட்டுள்ளனர். 45ஆவது நாளாக நாங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் உறவுகளுக்காக, அவர்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவை எதிர்பார்த்து இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற போதும் இந்த போராட்டத்தை எவரும் கண்டுகொள்ளவில்லை” என தெரிவித்துள்ளனர்.
மேலும், அடுத்து வரும் நாட்களில் நாங்கள் எங்களின் போராட்ட வடிவத்தை மாற்றி முன்னெடுக்கவுள்ளோம்.

அந்த வகையில் மாவட்ட மட்டத்தில் அரச நிர்வாக கட்டமைப்பை முடக்கி போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

Photos