மன்னார் பிரதேச ஊடகவியலாளர்கள் 4 பேருக்கு தொடர் கொலை மிரட்டல்
மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் நான்கு பேர் தமக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டியில் அமைந்துள்ள மன்னார் ஜோசப்வாஸ் நகர் மீனவர்களுடைய வாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் மற்றும் மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் ஆகிவற்றின் எதிரொலியாக மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் 4 பேருக்குத் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை மன்னார் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற குறித்த ஊடகவியலாளர்கள் மன்னார் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்தவைச் சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பாகத் தெரியப்படுத்தினர்.
துஸார தலுவத்த அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் பொலிஸார் குறித்த ஊடகவியலாளர்களிடம் முறைப்பாட்டை பதிவு செய்து கொண்டனர்.
தமது முறைப்பாட்டில் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கையில்,
கடந்த மாதம் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி மீன் பிடி இறங்கு துறைமுகத்தில் அமைந்துள்ள மீனவர்களின் வாடிகளை உப்புக்குளம் மக்கள் உடைந்து சேதப்படுத்தியமை,அதனைத் தொடர்ந்து கடந்த 16 ஆம் திகதி உப்புக்குளம் மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம்,கடந்த 18 ஆம் திகதி உப்புக்குளம் மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் மற்றும் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலும் அவ்விடயம் தொடர்பில் சம்பவ இடங்களில் நின்று செய்தி சேகரித்த தமக்கே ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவென்றினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் தொலைக்காட்சி,பத்திரிகை மற்றும் இணையங்களில் வெளியாகிய செய்திகள் தொடர்பிலேயே குறித்த ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டு வருவதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களான ஏ.எஸ்.எம்.பஸ்மி,ஏ.ரி.மார்க்,என்.ஜே.பெலிஸ்ரஸ் பச்சக், எஸ்.ஆர்.லெம்பேட் ஆகிய நான்கு பேருக்குமே தொடர்ந்தும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதே சமயம் கடந்த 31 ஆம் திகதி மன்னார் சந்தைக்கட்டிடப் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன் மன்னார் பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டமை தொடர்பிலும் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் மன்னார் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் பிரதேச ஊடகவியலாளர்கள் 4 பேருக்கு தொடர் கொலை மிரட்டல்
Reviewed by NEWMANNAR
on
August 13, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 13, 2012
Rating:

1 comment:
Enna koduma sir?
Post a Comment