சொந்தப் பகுதிக்குச் சென்றுள்ள போதிலும் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்படாமல் கூடாரங்களில் அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் மன்னார் மீள்குடியேற்ற வாசிகள்

நடந்து முடிந்துள்ள பொதுத்தேர்தலையடுத்து, அந்தப் பகுதிக்கு விஜயம் செய்த செல்வம் அடைக்கலநாதன் அங்கு சொந்தக் காணிகளில் மீளக்குடியேறியுள்ளவர்களையும், சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்வதற்காக ஈச்சலவக்கை பொதுநோக்கு மண்டபப் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மார்ச் மாதம் 19 ஆம் திகதி இந்தப் பகுதிக்குத் தம்மை அழைத்து வந்த அதிகாரிகள் 72 குடும்பங்களைத் தவிர்ந்த ஏனைய குடும்பங்களை அவர்களது காணிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், மிஞ்சியுள்ள 72 குடும்பங்களும் பொதுவான பெரிய கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இந்த விஜயம் குறித்து செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்ததாவது:
மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள குடும்பங்கள் உடைந்த கூரையில்லா வீடுகளில் தரப்பாலை கூரையாகப் பயன்படுத்தி தங்கியிருக்கின்றார்கள். பல குடும்பங்களுக்கு குடிநீர் வசதியில்லை. காணிகளில் பல வருடங்களாகக் கைவிடப்பட்டு கவனிப்பாரற்று கிடந்த கிணறுகள் இறைத்து சுத்தம் செய்யப்படவில்லை. தொண்டு நிறுவனம் ஒன்று நீர் விநியோகத்திற்காக வீதியோரங்களில் வைத்திருந்த குடிநீர்த் தொட்டிகளையும் திரும்பவும் கொண்டு வந்து தருவதாகக் கூறி எடுத்தச் சென்று விட்டதாக அந்த மக்கள் தெரிவித்தனர்.
இதனால் பல குடும்பங்கள் நீண்ட தூரத்திற்குச் சென்று குடிநீரை எடுத்து வரவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
ஈச்சலவக்கை பொது நோக்கு மண்டபமும் இடிந்து பழுதடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. இந்தப் பகுதியில் உள்ள வெளியான பகுதியில் பெரிய கூடாரங்கள் அமைக்கப்பட்டு 5 அல்லது 6 குடும்பங்கள் வீதம் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள். சிலர் சிறிய கூடாரங்களிலும் தனிக் குடும்பங்களாகவும் தங்கியிருக்கின்றார்கள். அருகில் தற்காலிக மலகூடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சொந்தக் காணிகளில் மீளக்குடியமர்ந்துள்ள பல குடும்பங்கள் மலகூட வசதியின்றி தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக காட்டுக்குள் சென்று வரவேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்கள் பலவற்றிற்குச் சொந்தக் காணிகள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. காணிகள் இருந்தும், அந்தக் காணிகள் அவர்களுக்கு உரித்துரிமை வழங்கப்படாத நிலையில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இத்தகைய குடும்பங்களை உரிய நடைமுறைப்படி மீள்குடியேற்றம் செய்வதற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக இடம்பெயர்ந்த மக்களிடம் கூறியிருக்கின்றாரகள்.
அதேவேளை, சொந்தக் காணிகளுக்குச் செல்ல வேண்டியவர்களின் காணிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள போதிலும், அவை பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கண்ணி வெடி பாதுகாப்பு உத்தரவாதம் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், அந்த உத்தரவாதம் வழங்கப்படுவதற்காக அதிகாரிகள் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பாதுகாப்பு உத்தரவாதம் கிடைத்ததும் பல குடும்பங்கள் உடனடியாக அவர்களது இடங்களில் மீளக்குடியமர்த்தப்படும் என அதிகாரிகள் அங்குள்ள மக்களுக்குத் தெரிவித்திருப்பதாக அந்த குடும்பங்கள் தெரிவித்தன.
ஈச்சலவக்கைக்கும் பள்ளமடு சந்திக்கும் இடைப்பட்ட சுமார் பத்து கிலோ மீற்றர் தூரமும் காடடர்ந்து ஆளரவமற்ற பிரதேசமாகக் காணப்படுகின்றது. இந்த இடைத்தூரத்தைக் கடந்து பாடசாலைக்கு வருவதற்கு இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு ஒரேயொரு பஸ் சேவையே நடத்தப்படுகின்றது. பொதுமக்களின் தேவைக்காக காலையில் வந்து செல்லும் பஸ் வண்டி மன்னார் நகரத்திலிருந்து மாலையிலேயே திரும்பவும் சேவையில் ஈடுபடும்.
இதனால், பள்ளமடு வைத்தியசாலைக்கும் மன்னார் நகரத்திற்கும் தமது தேவைகளுக்காக ஈச்சலவக்கை கிராமப்பகுதியில் இருந்து செல்லும் பொதுமக்கள் மாலை வரையில் காத்திருந்து ஒருநாட் பொழுதை வீணடிக்க நேர்கின்றது. தற்போது பாடசாலைகளுக்கு விடுமுறையாதலால் பாடசாலை மாணவர்களுக்கான பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதனால் பொதுமக்கள் மேலும் கஸ்டங்களுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள்.
ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள், அவசர நேரத்தில் பள்ளமடு வைத்தியசாலைக்குச் செல்வதற்காக அம்புலன்ஸ் வண்டிச் சேவை ஏற்பாடு செய்யப்பட்டு, தொலைபேசி இலக்கம் ஒன்று பொதுமக்களுக்குத் தரப்பட்டிருக்கின்றது. தேவை ஏற்படும்போது இந்தத் தொலைபேசியுடன் தொடர்பு கொண்டால் உடனடியாக அம்புலன்ஸ் வண்டி தேவையான இடத்திற்கு வந்து நோயாளியை வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆயினும் மின்சார வசதியற்ற இந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் தமது கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்வதற்கு வசதியற்ற நிலையில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்த முடியாதிருக்கின்றது. இந்த நிலையில் அவசர தேவைக்கான அம்புலன்ஸ் வண்டியை எவ்வாறு தொலைபேசி அழைப்பின் மூலம் எவ்வாறு அம்புலன்ஸ் வண்டியை வரச் செய்ய முடியும் என கேள்வி எழுப்புகின்றார்கள்.
இந்த நிலைமையில் தான் மன்னார் ஈச்சலவக்கை பெரியமடு பிரதேசத்தின் மீள்குடியேற்ற நிலைமை உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

சொந்தப் பகுதிக்குச் சென்றுள்ள போதிலும் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்படாமல் கூடாரங்களில் அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் மன்னார் மீள்குடியேற்ற வாசிகள்
Reviewed by NEWMANNAR
on
November 09, 2009
Rating:

No comments:
Post a Comment