தேசிய துக்க நாளான இன்று தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்குச் சபதம் எடுப்போம்! கூட்டமைப்பு அழைப்பு

இவ்வாறு கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த வரலாற்றுப் பெருந்துயரை நினைவு கொள்ளும் முகமாகத் தமிழ் மக்கள், மே 18ஆம் திகதியை தேசிய துக்க நாளாகக் கடைப்பிடித்து வருகின்றனர் என்று கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. அதேவேளை, போரில் உயிரிழந்தவர்களுக்காக நாளைய தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் அது கேட்டுள்ளது.
கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் மீது முள்ளி வாய்க்கால் காலத்தால் ஆற்றமுடியாத பெருந் துயரமாகப் பதிந்துவிட்டிருக்கிறது. இங்குதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற முற்றுகைப்போரில் எமது மக்கள் பால், வயது வேறுபாடின்றி வகை, தொகையின்றி ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டார்கள்; அங்க வீனமாக்கப்பட்டார்கள்; உணவும் மருந்தும் இன்றிப் பரிதவிக்க விடப்பட்டார்கள்; அவலங்களைக் கண்ணுற்று சித்தசுவாதீனமாக்கப்பட்டார்கள்.
எஞ்சியோர் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டார்கள். மொத்தத்தில் இங்குதான் மூன்று தசாப்த கால தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் உயிர்நாடி வெட்டி எறியப்பட்டது.
இந்த வரலாற்றுப் பெருந்துயரை நினைவுகொள்ளும் முகமாகவே தமிழ் கூறும் நல்லுலகு, மே 18ஆம் திகதியை தேசிய துக்க நாளாகக் கடைப்பிடித்து வருகின்றது.
முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் ஒடுக்கப்பட்டு இரண்டு வருடங்களைக் கடந்துவிட்டபோதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நிவாரணங்கள் உரிய முறையில் இன்னமும் எட்டப்படவில்லை. சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் இன்னமும் முகாம்களில் மக்கள் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.
சொந்த இடத்திற்கு திரும்பிய மக்கள்கூட தகரக் கொட்டகைகளின் கீழ் அரைவயிறும் கால் வயிறுமாகவே வாழ்நாளைக் கடத்திக் கொண்டிருக்கின்றனர். போரின்போது காணாமல் போனவர்களையும், அதன் பின்னர் சரணடைந்து காணாமல் போனவர்களையும் தேடி அவர்களது உறவுகள் கண்ணீரும் கம்பலையுமாக அலைந்துகொண்டிருக்கிறனர்.
இப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, போரில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் முகமாக நாளைய நாளிலும் (இன்று) தமிழர்கள் தத்தம் வீடுகளிலும் அருகிலுள்ள பிரார்த்தனை நிலையங்களிலும் வணக்கத் தலங்களிலும் வழிபாடுகளில் ஈடுபடுமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய துக்க நாளான இன்று தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்குச் சபதம் எடுப்போம்! கூட்டமைப்பு அழைப்பு
Reviewed by NEWMANNAR
on
May 18, 2011
Rating:

No comments:
Post a Comment