றிசாட் மன்னிப்புக் கோரவேண்டும் சபையில் MPசெல்வம்!
மன்னார் ஆயரை தம்புள்ள பிக்குவுடன் ஒப்பிட்டு தரக்குறைவாகப் பேசிய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்தச்சபையில் பகிரங்கமாகப் பொது மன்னிப்புக்கோர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.இந்த நாடு தன்னிறைவடையவேண்டுமானால் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே செல்வம் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:
இந்த நாட்டை வளப்படுத்த வேண்டுமானால் பிரச்சினைகள் முதலில் தீர்க்கப்பட வேண்டும். எமது நாட்டில் ஏற்றுமதி செய்யக்கூடிய வளங்கள் இருக்கின்றன. இருப்பினும், இனப்பிரச்சினை தீர்க்கப்படாதமையால் பல சிக்கல்களும் உள்ளன. இந்த நாட்டில் தமிழ் மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்.
எமது நாட்டில் விவசாயத்துறையை எடுத்துக்கொண்டால், விவசாயிகள் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். அதேபோல் கடற்றொழிலை எடுத்துக்கொண்டால், அந்நிய நாடுகள் எமது வளங்களைச் சூறையாடும் நிலையே உள்ளது.
பாஸ் நடைமுறை அமுலில் இருக்கின்றது. வேறு இடங்களில் இருந்து எமது பகுதிக்குள் வந்து மீன் பிடிக்கின்றனர். இந்த நிலைமையால்தான் நாம் ஏற்றுமதி இறக்குமதிபற்றிப் பேசுகிறோம். பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் வாயளவில் மட்டும் இவற்றைப்பற்றிப் பேசிப் பயனில்லை.
நாட்டின் பொருளாதாரம் இன்று வீழ்ச்சி கண்டுள்ளது. இறக்குமதியை அண்டியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலும் இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகின்றது.
வேறெந்த நாட்டிலும் இல்லாதவாறு எமது நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரம் வளப்படுவதற்குத் தடையாக இருக்கின்ற இனப்பிரச்சினைக்கு அரசு தீர்வைக் காணவேண்டும்.
அவ்வாறு தீர்வைக்காணுமானால் இராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதி குறைவடையும்.
ரிஷாத்தின் கூற்றுக்கு கண்டனம்
தம்புள்ளையில் பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ள சம்பவங்களை நாம் கண்டிக்கின்றோம். ஆனால், அந்த விவகாரத்துடன் சமபந்தப்பட்ட பிக்கு ஒருவருடன் மன்னார் ஆயரைத் தொடர்புபடுத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தரக்குறைவாகப் பேசியுள்ளார்.
மன்னார் ஆயர், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தவர். மக்களின் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டியவர். நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் அவர் பிரச்சினைகளை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டியதால் நான்காம் மாடியில் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
எனவே, மன்னார் ஆயரை தம்புள்ளை பிக்குடன் ஒப்பிட்டுத் தரக்குறைவாகப் பேசியதால் இந்த அவையில் அமைச்சர் ரிஷாத் பொதுமன்னிப்புக் கோரவேண்டும். என்றார்.
றிசாட் மன்னிப்புக் கோரவேண்டும் சபையில் MPசெல்வம்!
Reviewed by NEWMANNAR
on
May 23, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 23, 2012
Rating:

No comments:
Post a Comment