நாளை கரிநாள்; மரணித்தோருக்காக வீடுகளில் சுடரேற்றி அஞ்சலிக்குமாறு 18 மே இயக்கம் அழைப்பு
2009 மே 18இல் முள்ளிவாய்க்கால் எமக்குத் தந்த துயரை நினைவு கூரும் வகையில் நாளைய தினத்தை கரிநாளாகக் கடைப்பிடிக்குமாறும் நாளை மாலை 6.10 மணிக்கு வீடுகளில் சுடரேற்றி அந்தக் குறுகிய வன்முறை வெளியில் தம்மை ஆகுதியாக்கிக் கொண்டவர்களுக்கு மௌன வணக்கத்தை செலுத்துமாறும் 18 மே இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த இயக்கம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமிழர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்துயரங்கள் ஊடாகப் பயணித்த காலம் மூன்றாண்டுகளைக் கடக்கின்றது. முள்ளிவாய்க்காலில் மூர்ச்சையாகிப் போனவைகளுக்கு எந்தப் பெறுமதியையும் தராத உலகம் நம்மை வெறுங்கையோடு பார்த்துக் கொண்டு மட்டுமே இருக்கின்றது.
இந்த அலைந்துழல்வு வாழ்க்கைப் பாகத்தில் நம்மிடம் எஞ்சியிருப்பதெல்லாம் எம் மீது திணிக்கப்பட்ட வன்கொடுமைகளின் நினைவுகள் மட்டும் தான். முள்ளிவாய்க்கால் பறித்துக் கொண்டவைகளிலிருந்து மிச்சமாய் இருக்கும் அந்த நினைவுகளையாவது நாம் இறுகப் பற்றிக் கொள்ள முயற்சிக்கின்றோம்.
இழந்தவைகளும் அதன் துயரவலிகளும் அந்த நினைவுகளால் ஒத்தடம் பெறுவதை உணர்கின்றோம். ஆறாத வடுவாகி நிற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை 40,000 தமிழ் உயிர்களைத் தின்றது. இந்தக் கணிப்பு ஐ.நாவினுடையது. களத்தில் நின்ற தமி ழர்களுக்குத் தான் தெரியும் இன்னும் எத்தனை ஆயிரம் கொலைகள் சமநேரத்தில் நிகழ்ந்தனவென்று. தாயின் கருவில் இருந்த சிசு தொடக்கம், நாளை கட்டையேறத் தயாராயிருந்த மூத்தோர் வரைக்கும் கண்மூடித்தனமாகக் கொன்றொழித்தவர்கள் வெற்றியைக் கொண்டாடுகையில், நாம் ஒன்றுகூடி ஒரு துளிக் கண்ணீரைக் காணிக்கையாக்கும் வழி வகையின்றி நிற்கிறோம். இந்தக் காயங்களை சொற்களுக்குள்அடக்கி விடமுடியாது. நம் அவலத்திற்கு மொழியில்லை. அதனால் தான் அது இன்னமும் மௌனித்தே கிடக்கின்றது.
இந்த நாள்களில், நம்மிடம் இருக்கும் துயர் வலிமைபெறவேண்டும். முள்ளிவாய்க்கால் தந்த துயர நினைவுகளை நினந்துருகுதல் அந்த வலிமையைத் தரும் கணங்களாக இருக்கும். மே 18 இல் முள்ளிவாய்க்காலில் மரணித்த அனைத்து மக்களின் மரணப் பெறுமதியையும் கனதியாக்குங்கள். அன்றைய தினத்தை கரிநாளாகக் கடைப்பிடிப்போம். அதற்காக உங்கள் வீடுகளில் மே 18 ஆம் திகதி மாலை 6.10 மணிக்கு சுடரேற்றுங்கள். அந்தக் குறுகிய வன்முறை வெளியில் தம்மை ஆகுதியாக்கிக் கொண்டவர்களுக்காக ஒரு நிமிட மௌன வணக்கத்தைச் செலுத்துங்கள். இந்த நாள்களில் மௌனித்த ஆன்மாக்கள் மேன்மை பெறட்டும். நமக்கு வலிமை தரட்டும். என்றுள்ளது.
நாளை கரிநாள்; மரணித்தோருக்காக வீடுகளில் சுடரேற்றி அஞ்சலிக்குமாறு 18 மே இயக்கம் அழைப்பு
Reviewed by NEWMANNAR
on
May 17, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 17, 2012
Rating:

No comments:
Post a Comment