மீண்டும் முகாமுக்கு அனுப்பப்பட்ட முறிகண்டி குடும்பங்கள்
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் திருமுறிகண்டி பிரதேசத்தில் மீள்குடியேற்றுவதற்காக மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் இருந்து அழைத்து வரப்பட்ட 49 குடும்பங்களில் ஒரு தொகுதியினரை மீண்டும் மனிக்பாம் முகாமுக்கே கொண்டு செல்வத்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்திருக்கின்றார்.
கடந்த சனிக்கிழமை அழைத்து வரப்பட்டு முறிகண்டி பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்த இந்தக் குடும்பங்களில் ஒரு தொகுதியினர் அதிகாரிகள் காட்டியுள்ள காணிகளில் குடியேறுவதற்கு மறுப்பு தெரிவித்து, தமக்குச் சொந்தமான காணிகளிலேயே மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என கோரியிருக்கின்றார்கள்.
மனிக்பாம் முகாமில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களில் 28 குடும்பங்கள் அவர்களது சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றப்பட்டிருப்பதாகவும், ஏனைய குடும்பங்கள் அதிகாரிகளினால் தெரிவு செய்யப்பட்ட காணிகளில் குடியேற மறுப்பு தெரிவித்து சொந்தக் காணிகளிலேயே தங்களைக் குடியேற்ற வேண்டும் என கோரியிருந்தார்கள் என்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் கூறினார்.
எனினும் இவர்களிடம் காணிகளுக்குரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், அவர்கள் உரிமை கோருகின்ற காணிகள் அவர்களுடையதுதானா என்பதை உறுதி செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் இதன் காரணமாகவே அந்தக் குடும்பங்கள் மீண்டும் மனிக்பாம் முகாமுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
காணிக்கு உரிய உரிமையாளர்கள் யார் என்பதை உறுதி செய்வதற்கு மூன்று அல்லது நான்கு வாரங்கள் எடுக்கும் என்றும், அதன் பின்னர் தற்போது மனிக்பாம் முகாமுக்குக் கொண்டு செல்லப்படும் குடும்பங்கள் திருமுறிகண்டியில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்றும் வேதநாயகன் கூறினார்.
திருமுறிகண்டியில் மீள்குடியேற்றப்படுகின்ற குடும்பங்களுக்கு ஆளுரின் நிதியுதவி மூலம் தற்காலிக வீடுகள், கழிப்பறைகள் என்பவற்றைக் கட்டிக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என்றும் முல்லைத்தீவு அரச அதிபர் தெரிவித்தார்.
பின்னணி
திருமுறிகண்டி பகுதியில் மக்கள் குடியிருப்புக்கள் உட்பட, பெருமளவு காணிகள் இராணுவத்தினரால், அவர்களது பயன்பாட்டிற்காக எடுக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டு வந்தள்ளது.
யுத்த மோதல்கள் காரணமாக அந்தப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள், இதனால் தங்களுக்குச் சொந்தமான காணிகளில் மீண்டும் குடியேற முடியாதிருப்பதாகவும் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.
இந்தக் கோரிக்கைகளையடுத்து திருமுறிகண்டியின் சில பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறி அந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றத்திற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும், திருமுறிகண்டி கிராமத்தில் மீள்குடியேற்றம் இன்னும் முற்றுப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் முகாமுக்கு அனுப்பப்பட்ட முறிகண்டி குடும்பங்கள்
Reviewed by Admin
on
June 26, 2012
Rating:
Reviewed by Admin
on
June 26, 2012
Rating:


No comments:
Post a Comment