காயாக்குளியில் மீள்குடியமர்த்தப்பட்ட தமிழ்க் குடும்பங்களை அமைச்சர் றிசாத் சந்திப்பு _
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள முள்ளிக்குளத்தை அண்மித்த காயாக்குளி புதிய மீள்குடியேற்றத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள 110 தமிழ்க் குடும்பங்களை வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் அக்கிராமத்துக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அம்மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சனிக்கிழமை இரவு அங்கு சென்ற அமைச்சர் அந்த மக்கள் எதிர் கொள்ளும் சிரமங்களை நேரில் கண்டறிந்ததுடன்,அந்த மக்கள் தமது வீடுகளைத் தற்காலிகமாக நிர்மாணித்துக் கொள்ளவென நிதி ஒதுக்கீடுகளையும் உடன் செய்தார்.
அதே வேளை இம்மக்கள் தங்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்படல் வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் ஏற்கனவே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும்,அது நிறைவேற்றப்படாத நிலையில் கவலையடைந்திருப்பதாகவும்,தாங்களே இந்த உதவிகளைச் செய்து தர வேண்டும் என்று மிகவும் உருக்கமாக அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் வேண்டுகோளையும் முன்வைத்தனர்.
இப்பிரதேச காடழிப்புக்கு என உடனடியாக 50 இலட்சம் ரூபா நிதியையும்,பாதை,பொதுக்கட்டிடம்,குடிநீர் வசதி திட்டத்திற்கென 45 இலட்சம் ரூபாவையும் ஒதுக்குவதாகத் தெரிவித்த அமைச்சர் தற்காலிக பொது மண்டபம் ஒன்றை உடனடியாக நிர்மாணிக்குமாறு பிரதேச செயலாளருக்கு பணிப்புரை வழங்கினார்.
இங்கு 500க்கும் மேற்பட்டவர்கள் குடியமர்ந்துள்ளதாலும்,அவர்களது பிள்ளைகளது கல்வி மேம்பாட்டுக்காக பாடசாலையினை ஆரம்பிப்பதற்குத் தேவையான வசதிகளைச் செய்யுமாறு கல்விப் பணிப்பாளருக்கு பணிப்புரை வழங்கினார்.
இப்பிரதேசத்தின் குடிநீருக்காக முதற்கட்டமாக இரண்டு பொதுக்கிணறுகளை நிர்மாணிக்குமாறு மீளெழுச்சித் திட்டப் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கிய அமைச்சர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமது வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள 40 பேர்ச் காணியையும்,விவசாய செயற்பாடுகளுக்காக ஓர் ஏக்கர் காணியினையும் வழங்குவதாக உறுதியளித்தார்.
தற்போது மீள்குடியேறியுள்ள காயாக்குளி மக்களை இந்திய வீடமைப்புத்திட்டத்துக்குள் உள்வாங்குவதாகவும்,அதற்கான சிபாரிசினை பிரதேச செயலாளருக்கு தாம் வழங்குவதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அங்கு தெரிவித்தார்.
இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹ_னைஸ் பாருக்,ரியர் அட்மிரல் பெரேரா,பிரிகேடியர் டயஸ்,முசலி பிரதேச சபைத் தலைவர் தேசமான்ய யஹ்யான்,பிரதி தவிசாளர் எஸ்.எம்.பைரூஸ்,முசலி பிரதேச செயலாளர் ,கேதீஸ்வரன்,மீளெழுச்சி திட்ட மாவட்டப் பணிப்பாளர் ரொபர்ட் பீரிஸ் ,அமைச்சரின் மன்னார் மாவட்ட இணைப்பு செயலாளர்களான அலிகான் ஷரீப்,எம்.முனவ்வர்,முஜாஹிர் உட்பட பலரும் சமுகமளித்திருந்தனர்.
காயாக்குளியில் மீள்குடியமர்த்தப்பட்ட தமிழ்க் குடும்பங்களை அமைச்சர் றிசாத் சந்திப்பு _
Reviewed by NEWMANNAR
on
July 15, 2012
Rating:

No comments:
Post a Comment