சந்தேக நபர்களை 48 மணிநேரம் தடுத்துவைக்க புதிய மசோதா
இலங்கையில் காவல்துறையினரால் கைதுசெய்யப்படும் சந்தேகநபகர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தாமல் 24 மணிநேரத்தை தாண்டி, 48 மணிநேரத்துக்கும் தடுத்துவைத்திருக்க அதிகாரம் வழங்கும் பொருட்டு கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத் திருத்தத்துக்கு மனித உரிமை ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.இலங்கை குற்றவியல் நடவடிக்கை கோவையில் திருத்தம் கொண்டுவரும் புதிய சட்டமூலத்தை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருப்பதாக அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு 24 மணிநேரத்துக்குள் நீதவான் முன்னிலையில் பொலிசார் ஆஜர்படுத்தவேண்டும் என்றே தற்போதைய குற்றவியல் சட்டம் கூறுகிறது.
ஆனால் புதிதாகக் கொண்டுவரப்படுகின்ற திருத்தத்தின்மூலம் அந்த நேரம் 48 மணிநேரமாக நீடிக்கப்படுவதன்மூலம் காவல்துறையினர் அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடவும் அதன்மூலம் சந்தேகநபர்களின் உரிமை பாதிக்கப்படவும் வாய்ப்புகள் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எதிர்வரும் 24-ம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள இந்த சட்டமூலத்தின் ஊடாக ஜனநாயகத்துக்கு முரணான, அடிப்படை உரிமைகளை மீறுகின்ற பல அம்சங்கள் நிரந்தர சட்டமாக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில ஆஜர்படுத்தாமல் 48 மணிநேரம் தடுத்துவைப்பதன் மூலம் காவல்துறையினர் சந்தேகநபர்களுக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுக்களை சோடித்து, பொய் சாட்சியங்களை உருவாக்க வழி இருப்பதாக முன்னிலை சோசலிஸக் கட்சி கூறியுள்ளது.
புதிய திருத்தம் உரிமைகளை மீறும்'
அதுமட்டுமன்றி, பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலை ஏற்படுகின்றபோது சந்தேகநபர்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் நேரடியாக மேல்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு புதிய சட்டத்தில் பொலிசாருக்கு கிடைக்கின்ற அதிகாரத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு இருக்கின்ற மேன்முறையீட்டு உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் அந்தக் கட்சி விடுத்துள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அதுமட்டுமன்றி, பொலிசாரின் விசாரணையின் போது அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள் குற்றவியல் விசாரணைகளில் சாட்சியாக எடுக்கப்படாது என்கின்ற அடிப்படை குற்றவியல் சட்ட விசாரணை நடைமுறையை மாற்றி, பொலிசாருக்கு அளிக்கின்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் சாட்சியாக ஏற்க வைக்கும் முயற்சியும் புதிய சட்டத்திருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோலவே, 2009-ம் ஆண்டுவரை பின்னோக்கிச் சென்று அந்தக் காலத்து சம்பவங்களுக்கும் பொருந்தும் விதத்தில் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட உள்ளதாகவும் முன்னிலை சோசலிஸக் கட்சியின் அறிக்கை தெரிவிக்கிறது.
இதேவேளை, ஏற்கனவே நாட்டில் அவசாரகால சட்டத்தை அரசாங்கம் நீக்குவதாக கூறியுள்ளபோதிலும் அதில் உள்ள பல ஏற்பாடுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு நாட்டில் நிரந்தர சட்டமாக்கப்பட்டுள்ளதை இலங்கையின் குற்றவியல் துறை சட்டத்தரணி கே.வி.தவராசா பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமையில், சந்தேகநபர்களை 48 மணிநேரத்துக்கு தடுத்துவைக்கும் அதிகாரம் பொலிசாருக்கு வழங்கப்படுவது பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் பொலிசாரின் காவலில் இருந்தபோது பல சந்தேகநபர்கள் உயிரிழந்தமை மற்றும் சித்திரவதைக்கு உள்ளாமை போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சட்டத்துக்குப் புறம்பான கொலைகள்,ஆட்கடத்தல்கள், தடுத்துவைத்தல்கள் என அங்கு பலதரப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த முறைப்பாடுகள் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கையின் குற்றவியல் சட்டத்தில் கொண்டுவரப்படுகின்ற புதிய திருத்தம் மற்றும் அதன் தேவை குறித்த கவலைகள் பற்றி, அரசு மற்றும் நீதியமைச்சரின் கருத்துக்கள் கிடைக்கப்பெறவில்லை.
சந்தேக நபர்களை 48 மணிநேரம் தடுத்துவைக்க புதிய மசோதா
Reviewed by NEWMANNAR
on
October 13, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 13, 2012
Rating:

No comments:
Post a Comment