மடுக்கரை கிராம மக்களில் 30 குடும்பங்கள் வரை இடைத்தங்கல் முகாமில் தொடர்ந்தும் தங்கவைப்பு.
குறித்த வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மடுக்கரை,பள்ளமோட்டை,பள்ளிமோட்டை,75 வீட்டுத்திட்டம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மடுக்கரை ம.வி பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்களில் அதிகளவானவர்கள் மீண்டும் தமது வீடுகளுக்கும்,உறவினர்களுடைய வீடுகளுக்கும் திரும்பிச் சென்றுள்ளனர்.
எனினும் சுமார் 30 குடும்பங்கள் வரை தமது வீடுகள் தற்போது வரை வெள்ள நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுவதாகவும்,தாம் தொடர்ந்தும் குறித்த பாடசாலையில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் குறித்த பாடசாலையில் உள்ள மக்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று சனிக்கிழமை மாலை நேரில் சென்று சந்தித்தார்.
இதன் போது மடுக்கரை பாடசாலையில் தங்கியுள்ள குறித்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். தாங்கள் மீண்டும் வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள போது அதிகாரிகள் எம்மை உடன் பாடாசாலையை விட்டு வெளியேறுமாறு பணித்துள்ளனர்.
தற்போது இங்கு அடிப்படை வசதிகள் இன்றி உள்ளோம்.எங்களில் பலருக்கு தொற்று நோய் ஏற்பட்டுள்ளது.எனவே எங்களை தொடர்ந்தும் சில தினங்களுக்கு பாடசாலையிலே தங்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இப்பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நானாட்டான் பிரதேச செயலாளர் மற்றும் உரிய கிராம அலுவலகரின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு நேரில் சென்று சந்தித்து உரையாடினார். இதன் போது நிலமையை அவதானித்து தொடர்ந்தும் பாடசாலையில் அல்லது பொது மண்டபம் ஒன்றில் குறித்த மக்களை தங்க வைப்பதாக பாராளுமன்ற உறுப்பினரிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மடுக்கரை கிராம மக்களில் 30 குடும்பங்கள் வரை இடைத்தங்கல் முகாமில் தொடர்ந்தும் தங்கவைப்பு.
Reviewed by NEWMANNAR
on
January 06, 2013
Rating:
No comments:
Post a Comment