மன்னார் ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல்! தனக்கு தொடர்பில்லை என்கிறார் ரிசாத் பதியுதீன்
மன்னாரில் உள்ள உள்ளுர் செய்தியாளர்கள் மூவருக்கு கடிதம் மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது குறித்து, அமைச்சர் ரிசாத் பதியுதீனை தொடர்புபடுத்தி இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்துக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் மறுத்துள்ளார்.
சியாத் இயக்கம் என்ற பெயரில் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருக்கின்றது.
பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அதை பொருட்படுத்தாமலும், இறைவனை மதியாமலும் செயற்படுவதினால் இறுதி எச்சரிக்கை என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அமைச்சர் ரிசாத் பதியுதீனை நீதிமன்றத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி செய்திகளை எழுதி இஸ்லாம் மதத்தைக் கேவலப்படுத்தியது போன்ற செயல்களுக்காக இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றனர்.
எனினும் இந்தச் சம்பவத்துக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று மறுக்கிறார் அமைச்சர் ரிசாத் பதியுதீன்.
அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மூவரும் தமக்கு நன்கு பரிச்சயமானவர்கள் என்றும், தம்மை இத்துடன் தொடர்புபடுத்தியுள்ளது திட்டமிட்டு தமிழ் முஸ்லிம் உறவுகளை சீரழிக்கும் ஒரு செயல் என்றும் பிபிசியிடம் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த மூன்று ஊடகவியலாளர்களில் இருவர் அரச ஊடக நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இது குறித்து முழுமையான ஒரு விசாரணையை நடத்தி உண்மையை கண்டறியுமாறு நாட்டின் தலைமை பொலிஸ் அதிகாரிக்கு தான் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றத்தை தான் செய்தபோது தம்மை ஆதரித்தவர்கள் இன்று முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் செய்யப்படும் போது ஏன் எதிர்க்கிறார்கள் எனவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கேள்வி எழுப்பினார்.
மன்னார் ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல்! தனக்கு தொடர்பில்லை என்கிறார் ரிசாத் பதியுதீன்
Reviewed by NEWMANNAR
on
January 16, 2013
Rating:

No comments:
Post a Comment