இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துமாறுகோரி 132 கிறிஸ்தவ குருமார் ஐ.நாவுக்கு கடிதம்
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என கோரி மன்னார் ஆயர் உட்பட வடக்கு, கிழக்கை சேர்ந்த 132 கிறிஸ்தவ குருமார் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் குறித்த விவகாரங்களைக் கையாளும் ஆணையாளரை நியமித்தல், சிறிலங்கா இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல், ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள், இறந்தவர்கள், காணாமற்போனவர்களை நினைவுகூருதல் என்பன உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கியமான பரிந்துரைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதுடன், மீறப்படுகின்றன என்பதற்கு நாமும் சாட்சிகளாக இருக்கிறோம்.
கடந்த ஆண்டில், அமைதியான வழியில் சிறிலங்கா அரசை விமர்சித்தவர்கள் அல்லது சவால் விடுத்தவர்கள், ஐ.நாவுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள்கூட, சிறிலங்கா அமைச்சர்கள், அதிகாரிகள், இராணுவத்தினர், காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளனர். விசாரிக்கப்பட்டுள்ளனர், கைது செய்யப்பட்டுள்ளனர், அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட எம்மில் சிலரான மதகுருமார், தாம் பழிவாங்கப்படுவோம் என்பதால் இந்தக் கடிதத்தில் கையெழுத்திடவில்லை.
பத்தாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், காணாமற்போயும் உள்ள நிலையில், தமிழ் மக்களின் சமூக, கலாசார, மத, மொழி, நிலஉரிமைகள் - ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் போருக்கு முன்னரும், போரின் போதும், போருக்குப் பின்னரும், அடக்கப்படுவதை நாம் உணர்கிறோம்.
இது எம்மை பகுதியாகவோ முழுமையாகவோ அழிக்கும் நோக்குடனான முயற்சியாகவே தோன்றுகிறது. எனவே, அனைத்துலக சமூகம் மோசமான இந்த இறுதிக்கட்டத்திலேனும் பதிலளிக்க வேண்டியது கட்டாயம்.
போருக்கு பின்னர், வேகப்படுத்தப்பட்டுள்ள இந்த அடக்குமுறைகள் எங்கள் மக்களின் அடையாளத்தை எதிர்காலத்தில் அழிந்து விடும் என்று நாம் அஞ்சுகிறோம். எனவே தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வு அளிக்கப்பட வேண்டியது ஒரு அவசர தேவை உள்ளது.
நாம் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை, குறிப்பாக வடக்கு, கிழக்கை மையப்படுத்தியுள்ள நிலையில், ஒட்டுமொத்த சிறிலங்காவில் அதிகரித்து வரும் சர்வாதிகாரத்தனம் குறித்தும் நாம் கவலை கொண்டுள்ளோம்.
முஸ்லிம்களுக்கு எதிரான சமீபத்திய தாக்குதல்கள், கடந்த நவம்பர் மாதம் 27 சிங்கள கைதிகள் கொல்லப்பட்டது, மாத்தளையில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டவர்களினது என்று சந்தேகிக்கப்படும் எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை, அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள், மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், மாணவர் தலைவர்கள், மதகுருமார் மீதான அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் குறித்தும் கரிசனை கொண்டுள்ளோம்.
எனவே, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய நிலைமைகளில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாததைச் சுட்டிக்காட்டும் வகையிலும்,
போரின்போது எல்லாத் தரப்பினராலும் இழைக்கப்பட்ட அனைத்துலக சட்டமீறல்கள் குறித்து விசாரிக்க சுதந்திரமான அனைத்துலக விசாரணைக் குழுவை உருவாக்கும் வகையிலும், கடந்தகால, தற்போதைய மனிதஉரிமை மீறல்களுக்கு பரந்தளவிலான பதிலளிக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கும், நல்லிணக்க முயற்சிகளுக்கு சிறிலங்கா அரசுக்கு உதவவும், ஆலோசனை வழங்கவும் சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்கவும்,
போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நாவின் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்தத் தவறிய அதிகாரிகள் குறித்து பொறுப்புக்கூறும் பொறிமுறையை உருவாக்கவும், கடுமையான நடவடிக்கை எடுக்கும் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர கோருகிறோம். என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துமாறுகோரி 132 கிறிஸ்தவ குருமார் ஐ.நாவுக்கு கடிதம்
Reviewed by Admin
on
February 19, 2013
Rating:
Reviewed by Admin
on
February 19, 2013
Rating:

No comments:
Post a Comment