இந்திய அரசின் வீடமைப்புத் திட்டத்தில் பாகுபாடு: தீர்த்துவைக்க கண்காணிப்புக்குழு

. இதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு கண்காணிப்புக்குழு ஒன்று அமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொண்ட இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா வவுனியா நெல்லி ஹொட்டலில் நேற்று முன்தினம் சனிக்கிழமை வவுனியா முல்லைத்தீவு மன்னார் மற்றும் கிளிச்நொச்சி மாவட்ட பிரஜைகள் குழுக்கள் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார். இந்திய அரசின் ஆதரவுடனான வீடமைப்புத் திட்டம் தொடர்பாக இதில் பிரதானமாக ஆராயப்பட்டது. இதன்போதே இத்திட்டத்துக்குப் பயனாளர்களைத் தெரிவு செய்வதில் பல குறைபாடுகள் காணப்படுவதாக இந்திய உயர் ஸ்தானிகருக்குச் சுட்டிக்காட்டப்பட்டது.
உயர் ஸ்தானிகர் அசோக் காந்தாவுடன் அவரது மனைவி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் மகாலிங்கம் மற்றும் உயர் ஸ்தானிகராலய பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொண்டனர். வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன் வவுனியா தெற்கு பிரதேச சபைத் தலைவர் சிவலிங்கம் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் வண.பிதா செபமாலை பரஜகள் குழு உறுப்பினர்கள் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரஜைகள் குழுக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் இந்தச் சந்திப்பில் பங்குகொண்டார்கள்.
இங்கு உரையாற்றிய வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுக்களின் பிரதிநிதிகள் வீடமைப்புத் திட்டத்துக்கான பயனாளர்களைத் தெரிவு செய்வதில் பெருமளவுக்குப் பாராபட்சம் இடம்பெறுகின்றது. போரினால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்தவர்கள் பலருக்கு இதன் மூலம் பலன் கிடைக்கவில்லை. குறிப்பாக செட்டிகுளத்தில் பாதிக்கப்பட்ட பலர் இந்த உதவியைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக உள்ளார்கள். இங்கு பயனாளிகளைத் தெரிவு செய்வதில் கிராம சேவகர்கள் சுதந்திரமான முறையில் செயற்பட முடியவில்லை எனவும் இவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
இந்திய அரசின் வீடமைப்புத் திட்டத்தைப் பொறுத்தவரையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் பிரதிநிதிகள் விளக்கிக் கூறினார்கள். குறிப்பாக போரின் போது இடம்பெயர்ந்த மக்களில் பலர் மீளக்குடியேற முடியாத நிலை காணப்படும் அதேவேளையில் அவர்கள் வசித்த பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டிருப்பதாகவும் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வாறு குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூலம் வீடுகளைப் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள் எனவும் குறிப்பிட்ட அவர்கள் எமது காணிகளைப் பறித்தவர்களுக்கும் வீடுகள் கொடுக்கப்படுகின்றது. அதனால் இந்த வீடமைப்புத் திட்டம் யாருக்காக எதற்காக உருவாக்கப்பட்டது என உயர் ஸ்தானிகரைப் பார்த்து கேள்வி எழுப்பினார்கள். போரினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கா அல்லது வீடுகள் இல்லாதவர்களுக்கா இந்தத் திட்டம் என்பதையும் இந்திய உயர் ஸ்தானிகர் விளக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரினார்கள்.
மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் போரினால் பாதிக்கப்பட்ட பலருக்கு உதவிகள் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்ட மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் இங்கு விவசாயம் செய்பவர்கள் சிலருக்கு வலைகளும் வள்ளமும் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்கள். விவசாயம் செய்பவர்கள் அவற்றை வைத்து என்ன செய்ய முடியும்? அவற்றை விற்பனை செய்வதற்கே அவர்கள் முற்படுகின்றார்கள் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
வீடமைப்புத் திட்டத்துக்கான பயனாளர்களைத் தெரிவு செய்யும் முறையில் குறைபாடுகள் காணப்படுகின்றன. புள்ளி அடிப்படையிலான தெரிவில் உண்மையில் பாதிக்கப்பட்ட பலருக்கு வீடுகள் கிடைக்காத நிலை காணப்படுகின்றது. அதேவேளையில் உண்மையாகவே வீடுகள் தேவையில்லாத பலர் வீடுகளைப் பெற்றுக்கொள்கின்றார்கள். இவ்வாறானவர்கள் பின்னர் தமது வீடுகளை வாடகைக்குக் கொடுத்துவிட்டுச் செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது எனவும் இவர்கள் இந்திய உயர் ஸ்தானிகருக்குச் சுட்டிக்காட்டினார்கள்.
அதேவேளையில் சில இடங்களில் வீடுகள் ஒழுங்கான முறையில் கட்டப்படவில்லை எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக செட்டிகுளத்தில் கட்டப்பட்ட வீடுகளில் 50 வீடுகள் பாவிக்க முடியாத நிலையில் காணப்படுவதாகத் கூறப்பட்டது. இதேபோல ஒட்டுசுட்டானிலும் 75 வீடுகள் பாவிக்க முடியாதவையாகவுள்ளன.
இதற்குப் பதிலளித்த அசோக் கே காந்தா இந்தியாவைப் பொறுத்தவரையில் அது ஒரு செல்வந்த நாடல்ல. இந்தியாவிலும் வீடுகள் இல்லாமல் பலர் உள்ளார்கள். ஒரு நல்லெண்ண அடிப்படையிலேயே இந்த வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்த்தைச் செயற்படுத்துவதில் இன ரீதியான பாகுபாடுகள் எதுவும் இந்தியாவினால் காட்டப்படவில்லை. இத்திட்டம் பத்து – பதினைந்து கட்டங்களாக முன்னெடுத்துச் செல்லப்படும் எனத் தெரிவித்தார்.
இதேவேளையில் வீடமைப்புத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைக் கண்காணித்து எதிர்காலத்தில் உரிய முறையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்படுவது அவசியம் என பிரஜைகள் குழுக்களின் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை இந்திய உயர் ஸ்தானிகர் ஏற்றுக்கொண்டார். அதன்படி கண்காணிப்புக்குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும் எனவும் வீடமைப்புத் திட்டம் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றது என்பதை இந்தக் குழு கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்பு பட்ட செய்திகள்
http://www.newmannar.com/2012/10/indain-home-project.htmlhttp://www.newmannar.com/2012/09/indian-home.html
இந்திய அரசின் வீடமைப்புத் திட்டத்தில் பாகுபாடு: தீர்த்துவைக்க கண்காணிப்புக்குழு
Reviewed by Admin
on
February 28, 2013
Rating:

No comments:
Post a Comment