முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்றபோது ஓடி ஒளிந்த நீங்கள் எனக்கு எதிராக கத்துகிறீர்கள்:ரிஷாத்துக்கு ரணில்
முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான வன்முறைகள் மற்றும் பிரச்சினைகள் எழுந்த சந்தர்ப்பத்தில் ஓடி ஒளிந்து கொண்ட நீங்கள் இன்று உங்களது மக்களுக்காக குரல் கொடுக்கும் எனக்கு எதிராக இங்கு கத்துகிறீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் ரிஷாட் பதியுதீனைப் பார்த்து கடுமையான தொனியில் சாடினார்.
பாராளுமன்றத்தில் நேற்று முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கூற்று ஒன்றை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிக்கொண்டிருந்தார்.
இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுந்து எதிர்க்கட்சித் தலைவரின் உரைக்கு குறுக்கீடு செய்ததுடன் ஏதோ கூறினார். இதனையடுத்தே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆத்திரமடைந்த நிலையில் மேற்கண்டவாறு கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையின் போது இஸ்லாத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் ஹலால் சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகள், முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் புத்த பிக்குகளால் முன்னெடுக்கப்படுகின்ற பிரசாரங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியே உரையாற்றினார்.
இதன்போது சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா எழுந்து ஏதோ கூறுவதற்கு முற்பட்டார். எனினும் அதற்கு இடமளிக்காத எதிர்க்கட்சித் தலைவர் நீங்கள் பதிலளிப்பதற்கு உங்களுக்கு நாளைய தினத்தில் அவசாசம் உள்ளது. எனவே எனது உரைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம். இது ஒரு முக்கியதுவம் வாய்ந்த பிரச்சினையாகும் எனக் கூறியதும் அமைச்சர் நிமல் அமர்ந்து கொண்டார்.
இதேவேளை சபையில் அமர்ந்திருந்த அமைச்சர் ஹக்கீம், ஆளும் கட்சி எம்.பி. அஸ்வர் ஆகியோர் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்து போதும் அமைச்சர் ரிசாட் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏதோ கூறிக்கொண்டிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில், உங்கள் மதத்துக்கும் உங்கள் மக்களுக்கும் எதிராக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலேயே நான் இங்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் நீங்கள் ஓடி ஒளிந்தீர்கள். அவ்வாறு செய்து விட்டு இங்கு வந்து கத்துகிறீர்கள். நான் செய்ய வேண்டி கடமையைத்தான் செய்கின்றேன். பௌத்தர்கள் என்றாலும் கிறஸ்தவர்கள் என்றாலும் குற்றம் என்றால் குரல் கொடுப்பேன்.
நியாயத்தின் பக்கமே நான் நிற்பேன். உங்களைப் போன்று நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கவில்லை. எனவே சத்தமிடாது அமருங்கள் என்றார்.
முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்றபோது ஓடி ஒளிந்த நீங்கள் எனக்கு எதிராக கத்துகிறீர்கள்:ரிஷாத்துக்கு ரணில்
Reviewed by NEWMANNAR
on
February 07, 2013
Rating:

No comments:
Post a Comment