மன்னார் எமில் நகர் பகுதியில் அமைக்கப்படவிருந்த விளையாட்டு மைதானம் தாராபுரத்துக்கு இடமாற்றம்- மீண்டும் பெற்றுக்கொள்ள போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்

இதற்கு எதிராக நாங்கள் மக்களையும், விளையாட்டு வீரர்களையும் ஒன்று திரட்டி ஜனநாயக ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சினால் மன்னாரில் அமைக்கப்படவிருந்த பொது விளையாட்டு மைதானத்திற்கு மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட எமில் நகர் பகுதியில் சுமார் 17 ஏக்கர் காணி பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அங்கு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில் யாருக்கும் தெரியாத நிலையில் இரகசியமான முறையில் குறித்த மைதானம் மன்னார் தாராபுரம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
குறித்த விளையாட்டு மைதானமானது மாநகரம் அல்லது நகரப்பகுதியில் தான் அமைக்கப்பட வேண்டும்.ஜனாதிபதியின் பணிப்பும் அவ்வாறே காணப்படுகின்றது.
அவ்வாறு ஒரு சட்டதிட்டங்கள் உள்ள போதும் அவற்றை மறைத்து மக்களுக்கு தெரியப்படுத்தாத நிலையில் மன்னார் பகுதியில் இடப்பற்றாக்குறை காணப்படுவதாக கூறி அந்த மைதானம் தாராபுரம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
-நாங்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்திக்கொண்டிருக்க முடியாது.அரசாங்கம் சரியான முறையில் விடையங்களை கையான்டாலும்,இங்குள்ள அரசியல்வாதிகள் அதனை பிழையான வகையில் கையாண்டு அதிகாரிகளை தன்வசப்படுத்திய நிலையில் இந்த விளையாட்டு மைதானம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-அந்த வகையில் மன்னார் நகர சபை இவ்விடையத்தில் தன்னாலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,உபதலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.
-சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இப்பிரச்சினை தெடர்பில் கடிதம் மூலம் தெரியப்படுத்தி வருகின்றோம்.
அதற்கு அப்பால் விளையாட்டுத்துறை அமைச்சரை சில தினங்களில் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
அந்த வகையில் குறித்த விளையாட்டு மைதானம் மீண்டும் மன்னார் நகர சபை பிரிவிற்கே வரும் வாய்ப்புக்கள் உள்ளது.
அதனையும் மீறி அரசியல் வாதிகள் குறித்த விளையாட்டு மைதானத்தை மீண்டும் தாரபுரம் பகுதிக்கு கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொள்ளுவார்களாக இருந்தால் நகர சபை இந்த நகரத்தில் உள்ள மக்களையும்,விளையாட்டுத்துறை சார்ந்த இளைஞர்,யுவதிகளையும் ஒன்று திரட்டி மாவட்டம் தழுவிய ரீதியில் மக்களை ஒன்று திரட்டி மைதானத்தை பெற்றுக்கொள்ள ஜனநாயக ரீதியில் போராட்டங்களை மேற்கொள்ள தயாராக இருக்கின்றோம்.
அரச அரசியல் வாதிகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அபிவிருத்திக்கு இடைஞ்சலானவர்கள் என்ற மாயையை அரசாங்கத்திற்கு காட்டிக்கொண்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தொடர்புகளை துண்டித்த நிலையில் அவர்கள் தாங்கள் நினைத்த சித்து விளையாட்டுக்களை நடாத்தி வருகின்றனர்.
-அதற்கு அப்பால் எமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தையும் பெற்றுக்கொடுக்க தமிழ் தேசியக்கூட்டமைப்பு போராட்டங்களின் மத்தியில் போராடி அவற்றை பெற்றுக்கொள்ளுவதற்கு தயாராக இருக்கின்றோம்.
அந்த வகையில் குறித்த விளையாட்டு மைதானத்தை எந்த வகையிலும் இடம் மாறிச் செல்லுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
-மன்னார் நகரசபை ஏனைய மாவட்டங்களில் உள்ள விளையாட்டு ஆர்வலர்களுடன் கதைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இந்த விடையத்திற்கு மன்னார் மாவட்ட விளையாட்டுக்கழகங்கள், வீரர்கள்,பொது அமைப்புக்கள்,பெது மக்கள்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,மன்னார் நகர சபையின் தலைவர்,உப தலைவர்,சக உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்புக்களையும்,ஆதரவுகளை யும் வழங்கி வருவதாகவும் மன்னார் நகர சபையின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவித்தார்.
மன்னார் எமில் நகர் பகுதியில் அமைக்கப்படவிருந்த விளையாட்டு மைதானம் தாராபுரத்துக்கு இடமாற்றம்- மீண்டும் பெற்றுக்கொள்ள போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்
Reviewed by NEWMANNAR
on
March 30, 2013
Rating:

No comments:
Post a Comment