முஸ்லிம் சமூகத்தின் கன்னத்தில் அறைந்துள்ளது அரசு: மனோ கணேசன்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை பொருட்களுக்கு ஹலால் இலச்சினை வழங்க இணங்கும் அரசு, உள்நாட்டில் ஹலால் இலச்சினையை தடை செய்து இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ கணேசன்,
வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு ஹலாலை வழங்கிவிட்டு உள்நாட்டில் முஸ்லிம் சகோதர சமூகத்தின் கன்னத்தில் அறைந்துள்ளது. இதுதான் நடந்துள்ள உண்மை.
எதிர்காலத்தில் இலங்கைக்கு உள்ளே விற்பனை செய்யப்படும் பொருட்களில் ஹலால் இலச்சினை இருக்காது எனவும் ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு மாத்திரம் இலவசமாக ஹலால் இலச்சினை வழங்க அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை இணங்கியுள்ளதன் மூலம் ஹலால் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முஸ்லிம் மக்களின் மத ரீதியான நடவடிக்கைகளுக்கு பொறுப்பான தலைவர்கள் இந்த உடன்பாட்டுக்கு உடன்படுவார்களானால், இந்த முடிவு நடைமுறையாகட்டும்.
இதுபற்றி முஸ்லிம் சமூகம்தான் முடிவு எடுக்க வேண்டும். ஆனால் இதையடுத்து வெகு விரைவில் முஸ்லிம் பெண்கள் உடை அணியும் பாங்கு தொடர்பிலும் புதிய பேரினவாத எதிர்ப்பு கோஷங்களை இந்நாடு எதிர்கொள்ள வேண்டிவரும் என்ற எச்சரிக்கையை நான் இந்த வேளையில் முஸ்லிம் சகோதரர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
ஹலால் இலச்சினையை இலங்கையில் ஏற்றுகொள்ள முடியாவிட்டால், ஹலால் இலச்சினை கொண்ட பொருட்களை வாங்க வேண்டாம் என்று தமது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதுடன் தமது நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரும்படி பொதுபல சேனைக்கு அரசாங்கம் கண்டிப்பாக உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.
அதை செய்யாமல் இந்த மத அனுஷ்டான உணவு முறைமை இன்று முழுமையாக உள்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு நாட்டுக்கு அந்நிய செலாவணியை கொண்டுவரும் பொருட்களுக்கு வர்த்தக நோக்கில் இந்த இலட்சினை பொறிக்கப்படுகிறது. அதையும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையை கொண்டே அரசாங்கம் செய்யபோகிறது.
இது அரசாங்கத்திற்கு உள்ளே இருக்கும் சிங்கள-பெளத்த தீவிரவாத சக்திகளின் சாணக்கிய நிலைப்பாட்டுக்கு கிடைத்துள்ள வெற்றி.
இந்த நாட்டில் அநீதிகளுக்கு தலைவணங்கி உடன்படுவதா அல்லது அநீதிகளை எதிர்த்து ஜனநாயக ரீதியாக போராடுவதா, இல்லையா என முஸ்லிம் சமூகம்தான் தீர்மானிக்க வேண்டும்.
இந்நாட்டு தமிழர்களின் மத்தியில் அநீதிக்கு இணங்கி தலைவணங்கி உடன்படும் ஒரு சிறு பிரிவினர் இருக்கும் அதேவேளையில், அநீதிக்கு எதிராக தேசிய, சர்வதேசிய ரீதியாக போராடும் வல்லமை கொண்டவர்களாக நாங்கள் இருக்கின்றோம் என்பதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
முஸ்லிம் சமூகத்தின் கன்னத்தில் அறைந்துள்ளது அரசு: மனோ கணேசன்
Reviewed by Admin
on
March 12, 2013
Rating:
Reviewed by Admin
on
March 12, 2013
Rating:

No comments:
Post a Comment