அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்- செல்வரட்னம் சிறிதரன்

முப்பதாண்டு கால யுத்தச் சூழலில் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, அறுபதாண்டு கால அரசியல் நெருக்கடிகளிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வ காண்பதற்குரிய சரியான, ஆளுமையும், செயலாற்றலுமிக்க அரசியல் தலைமை இருக்கின்றதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இந்த நிலைமை நீண்ட காலமாகவே நிலவி வந்து கொண்டிருக்கின்றது.


 இலங்கை அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகப் படிப்படியாக ஒடுக்கப்பட்டே வந்திருக்கின்றார்கள். இதனை இந்த நாட்டின் இனப்பி;ரச்சினைக்கான அரசியல் வரலாறு தெட்டத் தெளிவாகக் காட்டி நிற்கின்றது. மிதவாத அராசியல் கொள்கைகளைக் கொண்டிருந்த தமிழ் அரசியல்வாதிகள் தம்மால் இயன்ற அளவில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போராடியிருக்கின்றார்கள். இல்லையென்று சொல்வதற்கில்லை. ஆனால் 'தமிழ் மக்களை இனிமேல் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்' என்று தமிழ் மக்களின் அரசியல் தந்தையாகப் போற்றப்படுகின்ற அமரர் செல்வநாயகம் அவர்கள் ஆற்றாமையோடு தெரிவிக்கும் வரையில் தான் அவர்களின் போராட்டம் சென்றிருக்கின்றது.

 இந்தக் கருத்தானது, தந்தை செல்வநாயகத்தின் புனிதமான அரசியல் பயணத்தையும், போராடி மறைந்துள்ள தமிழ் அரசியல் தலைவர்களின் உண்மையான, மனப்பூர்வமான போராட்டங்களை எந்த வகையிலும் குறைத்து மறைப்பதற்காக இங்கு குறிப்பிடப்படவில்லை. அன்றைய அரசியல் நெருக்கடிகளிலும், அன்றைய அரசியல் சூழ்நிலையிலும் அவர்கள் தமக்குத் தோன்றய வகையில், தங்களின் தூய்மையான அரசியல் பணிகளை முன்னெடுத்துச் சென்றிருக்கின்றார்கள்.

 அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இருப்பினும், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணும் விடயத்தில் அரசியல் தூரநோக்கத்தைக் கொண்டதாக, சரியான அரசியல் நிலைப்பாட்டை அவர்கள் எடுத்துச் செயற்பட்டிருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. தமக்குப் பின்னர், பிரச்சி;னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லத்தக்க ஓர் அரசியல் நிலைப்பாட்டை, ஒரு கட்டமைப்பை அவர்கள் உருவாக்கியிருந்ததாகத் தெரியவில்லை.

 சாத்வீக வழிகளிலான போராட்டங்களை முன்னெடுத்த எமது முன்னோடி அரசியல் தலைவர்கள், இந்த நாட்டுப் பெரும்பான்மை அரசியல்வாதிகளுடன் தமிழ் மக்கள் இணைந்து வாழ முடியாது. பிரிந்து சென்று தனியாக வாழ்வதே ஒரே வழியென்பதை வலியுறுத்தியிருந்தார்கள். அன்றைய சூழ்நிலையில் அத்தகைய ஒரு முடிவுக்கு அவர்கள் வரவேண்டிய கட்டாய நிலைமையையே மாறி மாறி ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களும், பேரினவாத அரசியல்வாதிகளும் உருவாக்கியிருந்தார்கள்.

 தனிநாடு குறித்த சிந்தனையில் அந்த இலக்கை எவ்வாறு அடைவது, அந்த இலக்கை அடைந்தால் என்ன செய்வது, அந்த இலக்கை அடைய முடியாவிட்டால் அடுத்ததாக என்ன செய்வது என்பதற்கான அடிக்கட்டமைப்பு குறித்து அவர்கள் சிந்தித்திருந்தார்களா என்பது தெரியவில்லை. இதற்கு ஆரம்பகாலம் தொடக்கம், தமிழ் அரசியல் தலைவர்கள் தமது கட்சிகளின் நலன்களுக்கு அப்பால், இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணும் விடயத்தில், ஒன்றிணைந்து, ஒரு வழிமுறை குறித்து சிந்தித்திருந்ததாகவும் தெரியவில்லை. சாத்வீகமும், தீவிர போக்கும் தமிழ் மக்களின் மூத்த அரசியல் தலைவர்கள் எத்தனையோ வகையான சாத்வீக முறையிலான போராட்டங்களைப் பல்வேறு தியாகங்கள், பேரிழப்புகளுக்கு மத்தியில் முன்னெடுத்திருந்தார்கள்.

அந்தப் போராட்டங்களின் ஊடாகத் தமிழ் மக்கள் எதிர்நோக்கியிருக்கின்ற அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுவிடலாம் என்று அவர்கள் உறுதியாக நம்பியிருந்தார்கள். இந்த நம்பிக்கைதான், தமது போராட்டத்தின் இலக்கை அடைவதற்குரிய மாற்று வழிகள் பற்றியும், தமது சந்ததியினர் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் அவர்களைச் சிந்திக்க விடவில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது. சாத்வீகப் போராட்டங்கள் தொடர்ச்சியாக சந்தித்து வந்த தோல்விகளை அடுத்து, தீவிரமான ஆயுதப் போராட்டத்தில் இளைஞர்கள் குதித்திருந்தார்கள்.

 இந்த ஆயுதப் போராட்டமும்கூட, இந்தியாவின் பிராந்திய நலனின் வழிவந்த சிந்தனையே என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும். ஏனெனில் இந்தியாவின் அனுசரணை இருந்திருக்காவிட்டால், அதன் வழிகாட்டல் இல்லாமமலிருந்தால், இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் ஒரு முயற்சியாக ஆயுதப் போராட்டம் வெற்றிகரமாகத் தலையெடுத்திருக்குமா என்பது சந்தேகமே. இனப்பிரச்சி;னைக்குத் தீர்வு காண்பதற்காக முன்னெடுக்கப்பட்ட தனிநாட்டை இலக்காகக் கொண்ட ஆயுதப் போராட்டம் - ஏற்கனவே நடந்திருப்பது போன்று தோல்வியடைந்தால், அடுத்து என்ன செய்வது என்பதுபற்றி, மிதவாதத் தலைவர்களும்சரி, ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த இளம் அரசியல் தலைவர்களும் சரி சிந்தித்திருக்கவில்லை.

 பல்வேறு குழுக்களாகப் பிரிந்திருந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தலைவர்களும் தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் நன்மையைக் கருத்திற்கொண்டு, தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லத்தக்க வகையிலான அரசியல் இலக்கு குறித்து தமக்குள் சிந்தித்திருக்கவில்லை. என்றாலும், திம்புப் பேச்சுவார்த்தைகளின்போது, தமிழர் தரப்பில், அரசியல் தீர்வுக்கென ஓர் ஆக்கபூர்வமான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இது வரவேற்கத்தக்க முன்னேற்றகரமான ஒரு நடவடிக்கையாகும். ஆயினும் திம்பு பேச்சுவார்த்தைக்கென முன்வைக்கப்பட்ட யோசனைகள் அதன் பின்னர் தொடர்ச்சியாகக் கொள்கை ரீதியாக முன்னெடுக்கப்பட்டதாகவோ, அல்லது அந்த யோசனைகளின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குரிய தமிழர் தரப்பு நிலைப்பாடுகளை வெளிப்படுத்துகின்ற யோசனைகளாக – திட்டங்களாக மேம்படுத்தப்பட்டதாகவோ தெரியவில்லை.

 சாத்வீகப் போராட்ட தசாப்தம் முடிவடைந்து, ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியது. அந்த ஆயுதப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு உரமூட்டக் கூடிய வகையில் அரசியல் ரீதியான பலமான நிலைப்பாடும், கட்டமைப்பும் உருவாக்கப்படவில்லை. இதன் காரணமாகத்தான், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான ஆயுதப் போராட்டம், சர்வதேச ரீதியில், வெறும் பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டு மோசமான முறையில் முறியடிக்கப்பட்டிருக்கின்றது.

 போருக்குப் பிந்திய நிலைமை சாத்வீகப் போராட்டங்களைடுத்து, தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டமும் முறியடிக்கப்பட்டு, நான்கு வருடங்களாகின்றன. இந்த நிலைமையிலும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட சுயநிர்ணய உரிமை, தாயகப் பிரதேசம் என்ற வகையிலான நில உரிமை போன்றவைகள் படிப்படியாகக் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட, விவசாயம் மற்றும் மீன்பிடி உள்ளிட்ட தொழிலுரிமை, இந்த நாட்டுக் குடிமக்கள் என்ற ரீதியில் தமிழ் இளைஞர் யுவதிகளின் தேசிய ரீதியிலான கல்வி, விளையாட்டு, மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட தொழில்வாய்ப்புக்கள் என்பன அரசியல் ரீதியாக ஒடுக்கப்படுகின்றன. மறுக்கப்படுகின்றன.

 ஆக, தொடர்ச்சியான சாத்வீகப் போராட்டம், தீவிரவாதப் போராட்டங்களின் பின்னர், தமிழ் மக்கள் மேலும் மோசமான நிலைமைக்குள்ளேயே இன்று தள்ளப்பட்டிருக்கி;ன்றார்கள். சிவில் நிர்வாகம் மட்டுமல்லாமல், நாளாந்த வாழ்க்கையிலும் இராணுவ தலையீடுகளும், நெருக்குதல்களும் அதிகரித்திருக்கின்றன. தமிழ் மக்களின் போராட்டங்களை ஒடுக்கியுள்ள அரசாங்கம், மனிதாபிமான ரீதியில் அவர்களை நடத்தவோ அல்லது, பெருந்தன்மையான முறையில் அவர்களின் அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளித்து, அதிகாரங்களைப் பரவலாக்கவோ இன்னுமே முன்வரவில்லை.

அவ்வாறு முன்வருவதற்குத் தயாரில்லை என்பதையே, தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. தமிழ் மக்களுக்கான தலைமைகள் மோசமாகிச் செல்கின்ற இந்த நிலைமைகளுக்கு ஈடுகொடுத்துச் செயற்படுவதற்கு, தமிழ் மக்களுக்கென, வலிமையான ஓர் அரசியல் தலைமையின் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவில் இப்போது எழுந்திருக்கின்றது. தமிழ் மக்களுக்குத் தலைவர்கள் இருக்கின்றார்கள். அதுவும் இரண்டு விதமாக இருக்கின்றார்கள். இணக்க அரசியல் தலைவர்கள் என்றும், எதிர்ப்பு அரசியல் தலைவர்கள் என்றும் அவர்கள் இனம் காணப்பட்டிருக்கின்றார்கள்.

 இணக்க அரசியலில் ஈடுபட்டிருப்பவர்கள், அரசாங்கத்தோடு இணைந்து செல்வதன் ஊடாக தமிழ் மக்களின் உரிமைகளை சலுகைகளாகவும், உரிமைகளாகவும் வென்றெடுக்க முடியும் என்று நம்புகின்றார்கள். மக்களையும் நம்ப வைத்து அந்த வழியில் அவர்களை வழிநடத்திச் செல்ல முற்படுகின்றார்கள். எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகின்ற பல கட்சிகளைச் சேர்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள் ஓரணியில் கூட்டுச் சேர்ந்து செயற்பட்ட போதிலும், தமிழ் மக்கள் மீது நெருக்கடிகளையும் நெருக்குவாரங்களையும் பிரயோகிக்கின்ற அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது தாக்கங்களை உருவாக்குகின்ற அரசியல் வலிமை அற்றவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

 இதனை அவர்களின் பலவீனம் அல்லது இயலாமை என்று குறிப்பிடுவதிலும்பார்க்க, அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஈடு கொடுக்கத்தக்க வகையில் அவர்கள் தமது பலத்தை அதிகரித்துக் கொள்ளாதவர்களாகக் காணப்படுகின்றார்கள் என்று கூறலாம். ஓர் அரசியல் பலம் தேவை என்பதை அவர்கள் உணராமலில்லை. ஆனால், அதனை உருவாக்க முன்வருவதற்கு இன்னும் தயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கென தனித்துவமான அரசியல் பலத்தை உருவாக்குவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் முன்வராமலிருப்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும், கட்சிகளின் தனித்துவம், அனுபவம், பழைமை என்பவற்றைக் காட்டி, அதன் ஊடாக மக்களின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும் என்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.

இந்த அடிப்படையில் அந்தக்கட்சி மக்களுடைய ஆதரவை முழுமையாகத் தானே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. மறுபக்கத்தில், ஆயுதமேந்திப் போராடி, ஜனநாயக வழிக்கு வந்துள்ள ஈபிஆர்எல்எவ், டெலோ, புளொட், ஆகிய கட்சிகளைத் தனக்கு சமமான கட்சிகளாகத் தமிழரசுக்கட்சி கருத மறுக்கின்றது. அதற்கு விருப்பமற்றவர்களாகவே அதன் தலைவர்கள் காணப்படுகின்றார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள போதிலும், முன்னைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை விடயத்தில் ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவங்களை மறந்து அதன் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரியுடன் சரி சமனாகச் செயற்படுவதற்கும் தமிழரசுக் கட்சியினர் விருப்பமற்றவர்களாக இருக்கின்றார்கள்.

 பல கட்சிகளை உள்ளடக்கி, தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் அணியாக முன்னர் திகழ்ந்தது. அப்போது, அதன் தலைமைக்கான உரிமைப் போட்டியொன்று உருவாகி, அந்தக் கட்சியின் உதயசூரியன் சின்னத்தைக் கொண்ட கொடிக்கு சொந்தம் கொண்டாடி, அதனை எடுத்துக் கொண்டு, வி.ஆனந்தசங்கரி பிரிந்து சென்றதைப் போன்றதொரு நிலைமை மீண்டும் உருவாக மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்ற கேள்வியையும் அவர்கள் கேட்கின்றார்கள். இது விடயத்தில் தமிழரசுக் கட்சியினரைத் திருப்திப்படுத்தத் தக்க வகையில் எவராலும் உத்தரவாதமளிக்க முடியாதிருப்பதாகவே தெரிகின்றது.

 இத்தகைய ஒரு நிலைமையில் - அள்ளிக்கட்டப்பட்ட ஒரு தேங்காய் மூட்டையைப் போன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. கட்டு அவிழ்ந்தால் கட்சிகள் சிதறிவிடுகின்ற நிலைமைதான் காணப்படுகின்றது. இன்றைய தேவை தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை, விசுவாசம் என்பவற்றை மேலும் வளர்த்து, அந்தக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்பதே சிவில் சமூகத்தினர் உட்பட பலதரப்பினரதும் விருப்பமாக இருக்கின்றது. தமிழ் மக்களும் அதனையே விரும்புகின்றார்கள். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், தமிழ் மக்கள் மீது அரசியல் ரீதியாக அரசாங்கம் கொடுத்து வருகின்ற நெருக்கடிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கும் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளுக்கும், இந்த நிலைப்பாடு அவசியம் என்பதைப் பலரும் வலியுறுத்துகின்றார்கள்.

ஆனால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்துவதிலும், அதனைத் தனியான ஓர் அரசியல் அணியாகக் கட்டியெழுப்புவதிலும், தமிழரசுக் கட்சிக்கு விருப்பமற்ற நிலைமையே காணப்படுகின்றது. இது விடயத்தில் தமிழரசுக் கட்சியினர் முழு மனதோடு ஈடுபட்டிருந்தால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தனியொரு கட்சியாகக் கட்டியெழுப்பப்பட்டிருக்கும். தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தை விட்டு, அது தனக்கென தனியான ஒரு சின்னத்தையும், கொடியையும்கூட கொண்டிருந்திருக்கும். அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் ஓர் அணியில் இறுக்கமான முறையில் செயற்பட வேண்டிய அவசியம் இன்று உருவாகியிருக்கின்றது. இது தவிர்க்கப்படக்கூடிய விடயமல்ல.

இறுக்கமான தமிழர் தரப்புத் தலைமையென்பது இன்றியமையாதது. இத்தகைய தலைமையொன்று இல்லாவிட்டால், தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலை, கலாசார இருப்பே இல்லாமல் போய்விடக் கூடிய ஆபத்தான நிலைமை படிப்படியாக உருவாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலைமையில் தனிக் கட்சிகளின் செல்வாக்கையும்விட, தமிழ் மக்களின் ஏகோபித்த குரலில் - உரத்தும், உறுதியாகவும் பேசி, செயற்படத்தக்க ஓர் அரசியல் தலைமையே இன்று தேவைப்படுகின்றது.

 அது மட்டுமல்ல. தேர்தலை நோக்கிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமையையும்விட, தமிழ் மக்களின் பிரச்சினைகளை நீண்டகால அடிப்படையில் சிந்தித்து அவற்றுக்குத் தீர்வு காணும் விடயத்தில் உறுதியான அடித்தளத்தைப் போட வேண்டிய கால கட்டத்தில் இன்று தமிழ் அரசியல் தலைவர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள். ஏனெனில் இன்றைய தலைவர்களுடைய காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுனக்குத் தீரவு காண்பதென்பது நடைபெறுகின்ற காரியமாகத் தெரியவில்லை. ஆகவே, தமிழ் மக்களை ஓரணியில் திரட்டுகின்ற அதேநேரத்தில், தமிழ் அரசியல் தலைவர்களும் ஓரணியில் விசுவாசமான முறையில் இணைந்திருக்க வேண்டும். அரசியல் தீர்வு காண்பதற்கு பல்வேறு தெரிவுகளைக் கொண்ட நீண்டகாலச் செயற்பாட்டுக்கான வழிமுறைகள் குறித்து, சிந்தித்து, அவற்றை உருவாக்கவும், செயற்படவும் வேண்டியுள்ளது.

இந்தத் தேவைகளை அடியொட்டி, சிவில் சமூகத்தினர் சில முக்கியமான யோசனைகளை முன்வைத்திருக்கின்றார்கள். இதனைத் தமிழ் அரசியல் தலைவர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும். அவற்றைத் தீவிர சிந்தனைக்கு உட்படுத்தி அவற்றிற்குச் செயல்வடிவம் கொடுக்க வேண்டும். சிவில் சமூகத்தினரின் ஆலோசனைகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பலமுள்ள ஓர் அரசியல் அமைப்பாகக் கட்யெழுப்பி, அதனைப் பலமுள்ள ஒரு தனிக்கட்சியாக உருவாக்க வேண்டும் என்பது சிவில் சமூகத்தினர் முதன்மை யோசனையாகும். அதேநேரத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளையும் தெளிவாக ஆராய்ந்து, தமிழர்களின் தேசிய மட்டத்தில் விடயங்களை இனங்காண்பதற்கென, ஒரு தேசிய மன்றம் உருவாக்கப்பட வேண்டும்.

 பிரச்சினைகளின் அடிப்படையில் இனங்காணப்படுகின்ற விடயங்களை அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், பல்வேறு வழிகளில் எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பதுபற்றியும் இந்த மன்றம் விரிவாக ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும். இதைவிட தமிழர் தரப்புக்கென ஒரு புத்திஜீவிகள் குழுவொன்றும் அமைக்கப்பட வேண்டும் என்பதும், சிவில் சமூகத்தின் யோசனையாகும். ஆரசியல் தீரவு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் சட்டரீதியான விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பி;ல் ஆராய்ந்து இந்தக் குழு ஆலோசனைகளையும் திட்டங்களை வகுத்து வழங்கும்.

 முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழ் மக்களின் அரசியல் நிலைமையானது வெறுமையாகியிருக்கின்றது. இந்த வெறுமையானது, தமிழ் மக்களை அரசியல் ரீதியாப் பலவீனப்படுத்தியிருக்கின்றது என்றுகூடச் சொல்லலாம். எனவே இத்தகைய ஓர் இக்கட்டான நிலைமையில் அரசியலில் ஈடுபட்டிருப்பவர்கள் மட்டுமல்ல, தாயகத்திலும், புலம் பெயர்ந்திருப்பவர்களும், துறை சார்ந்தவர்களும், அறிஞர்கள், கல்விமான்கள், கலைஞர்கள், தொழில்துறை நிபுணர்கள், வர்த்தகத் துறை விற்பன்னர்கள் என பலதரப்பினரும் தத்தமது தகுதிக்கும் அனுபவத்தி;ற்கும் ஏற்ற வகையில் பங்களிப்பு செய்ய முன்வர வேண்டும்.

 தமிழ்த்தேசிய மன்றம் மற்றும் புத்திஜீவிகள் குழு என்பவற்றில் தமிழர்கள் சார்பில் அவர்கள் எங்கிருந்தாலும், பல தரப்பினரும் உள்ளடக்கப்பட்டதாக அமைக்கப்பட வேண்டும். ஜனநாயக அடிப்படையில் இவை இரண்டும் வலுவாகச் செயற்படத்தக்க வகையில் உருபாக்கப்பட வேண்டும். ஜனநாயகப் பண்புகளுக்கு இடம் கொடுத்து, ஒற்றுமையாகச் செயற்படாத காரணத்தினாலேயே தமிழ் மக்களின் சாத்வீகப் பேராட்டங்களும், ஆயுதப் போராட்டமும் தமது இலக்குகளை அடைய முடியாமல் போயிருக்கின்றன என்று கூறினால் அது மிகையாகாது. தற்போதைய சூழலில் ஜனநாயக வழிமுறையில் சிவில் அமைப்புக்களின் ஊடாக மக்களை அணிதிரட்டுவதும், பிரச்சினைகளுக்கு எதிராக அரசுக்கு அழுத்தம் கொடுப்பதும் முக்கிய தேவையாக இருக்கின்றன.

 யுத்தத்தினாலும். அரசியல் ஒடுக்குமுறையினாலும் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சமூம் மீண்டும் தலை நிமிர்த்துவதற்கு வெறும் கட்சி நலன் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை. இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கயிருப்பது போன்ற நிலைமைகளை உலக நாடுகளில் மக்கள் எதிர்நோக்கியிருக்கின்றார்கள். அவற்றில் இருந்து அவர்கள் வெற்றிகரமாக வெளிப்படுவதற்கு இத்தகைய பல முனைசார்ந்த உறுதியான நிர்வாகக் கட்டமைப்புக்கள் பெரிதும் உதவியிருக்கின்றன. னவே நீண்டகால அடிப்படையில் செய்யப்பட வேண்டிய இந்த விடயங்களை இலங்கைத் தமிழ் மக்களும் முன்மாதிரியாகக் கொண்டு செயற்பட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்- செல்வரட்னம் சிறிதரன் Reviewed by Admin on April 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.