முல்லைத்தீவு மாவட்ட காணிப்பிரச்சனைக்கு அரசு விரைந்து தீர்வு காணவேண்டும்.-சிவசக்தி ஆனந்தன்
முள்ளியவளை இரண்டாம் வட்டாரப் பகுதியில் மீளக்குடியேறிய தமிழ் மக்களுடைய வீடுகளுள் நான்கு தற்காலிக கொட்டில் வீடுகள் அமைச்சர் ஒருவரின் தூண்டுதலால் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவமானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்த நாசகாரச் செயலை மேற்கொண்டோரை உடனடியாகக் கைது செய்வதுடன் அவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்த ஆளும் அரசானது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடகங்கள் மூலம் கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவரது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் முள்ளியவளை மத்தி தமிழ் மக்களின் குடியிருப்புப்பகுதிக்குள் புகுந்த குழுவினர் அங்குள்ள நான்கு வீடுகளை தீயிட்டு எரித்துள்ளதுடன் சொத்துக்களையும் நாசமாக்கியுள்ளனர். மேலும், ஏனையோரது வீடுகளை எரியூட்ட முற்பட்டபோது மக்கள் விழித்துக்கொண்டதால் நாசகாரர்கள் தப்பித்து ஓடிவிட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் காடழிப்பு நடவடிக்கைக்கு எதிராக மேல்நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில்தான் இவ்வளவு அடாவடித்தனங்களும் இடம் பெறுவதானது மிக மோசமான மனித உரிமை மீறலாகும்.
யுத்தத்தால் இடம்பெயர்ந்து செட்டிகுளம் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்ட இம்மக்களை, இலங்கையில் இடம் பெயர்வு முகாம்கள் எதுவும் இல்லையென்று சர்வதேசத்திற்குக் காட்டும் நோக்கத்தில், அரசானது அவசர அவசரமாக முல்லைத்தீவில் மீள்குடியேற்றியது . அவ்வகையில், முள்ளியவளையில் குடியேற்றப்பட்டோருக்குக் கடந்த இரண்டு வருடங்களாக எந்தவோரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாததால் அவர்கள் தாமாகவே, தற்காலிகக் கொட்டில்களை அமைத்துக் குடியிருந்தவேளை இந்தக் காட்டுமிராண்டித்தனமான நாசகாரச்செயல் இடம்பெற்றுள்ளது.
யுத்தம் ஓய்வுக்குவந்து நான்கு வருடங்கள் கடந்துள்ளபோதும், காணிப்பிரச்சினையுடன் வாழ்வாதாரம், தற்காலிக வீடு, சுகாதாரம், கல்வி மற்றும் உட்கட்டுமானம் போன்ற பல்வேறுபட்ட குறைபாடுகளோடு இம்மக்கள் வாழும்போது அரசு திட்டமிட்டு, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளை, நாயாறு , கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி முதலான இடங்களில் காடுகளை அழித்து அத்துமீறிய குடியேற்றங்களை முன்னெடுக்கின்றது. மறுபுறம், தமி;ழ் மக்களுக்குச் சொந்தமான உறுதிக்காணிகளில் அடாத்தாகச் சிங்கள மக்களைக் குடியேற்றி அவற்றிற்குப் புதிய உறுதிகளும் வழங்கப்பட்டும் வருகின்றன.
இத்தகைய மக்கள் விரோதச் செயல் அரசாலும் குறிப்பிட்ட அமைச்சராலும் மேற்கொள்ளப்படுவதோடு; தாம் இனமத, சாதி பேதமின்றி தமது கடமைகளைச் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீள்குடியேறியோரின் தற்காலிகக் கொட்டில்களை எரித்தல், காடழிப்பு, அத்துமீறின குடியேற்றம் முதலான சம்பவங்கள் தமிழ்மக்களுக்கு மரத்தால் விழுந்தவனை மாடு ஏறிமிதித்ததுபோல் உள்ளன.
எனவே, அரசும் குறிப்பிட்ட அமைச்சரும் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை உபயோகித்து, இனங்களிடையேயும் மதங்களுக்கிடையிலும் சித்து விளையாட்டுக் காட்டாமல் தமிழ் மக்களின் குடியிருப்புக் காணிப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஊடகங்களூடாக அரசையும் சம்பந்தப்பட்டவர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட காணிப்பிரச்சனைக்கு அரசு விரைந்து தீர்வு காணவேண்டும்.-சிவசக்தி ஆனந்தன்
Reviewed by NEWMANNAR
on
April 23, 2013
Rating:

No comments:
Post a Comment