முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கே மே-18 அஞ்சலி செய்தோம்!- த.தே.முன்னணியினர் விளக்கம்
மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் யுத்தகளத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவேந்தும் நாளாகவே உணரப்படுவதாகவும், விடுதலைப்புலிகளை நினைவு கூர்ந்ததாக கூறப்படுவதில் எந்தவொரு உண்மையும் இல்லையெனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 18ம் திகதி மன்னார் மாவட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் சிலர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னரும் அவர்கள் மீதான விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்சந்திப்பில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,
பொலிஸாரினாலும், பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினாலும் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது முள்ளிவாய்க்காலில் மக்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடுகின்றீர்கள் அவ்வாறெனில், கொன்றவர்கள் யார் என்று எம்மிடம் கேட்கப்பட்டது.
அதற்கு, கொன்றவர்கள் யார் என்ற சரியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் யார் கொன்றிருந்தாலும் மக்கள் கொல்லப்பட்டது உண்மை. அந்த மக்களுக்கான அஞ்சலியையே நாம் நடத்தியிருந்தோம் என கூறியுள்ளோம்.
அதேபோன்று 18ம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தாம் கொன்றதாகவும், அந்த தினத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவது பிரபாகரனை நினைவுபடுத்தும் செயல் எனவும் கேட்டனர். ஆனால் நாம் விடுதலைப் புலிகளையோ, அதன் தலைவரையோ நினைவுபடுத்தும் நோக்கில் அந்த நினைவேந்தலை நடத்தவில்லை.
அது மக்களுக்கானது மட்டுமே அந்த நோக்கிலேயே கூட்டமைப்பு உள்ளிட்ட பல தரப்பினரும் நினைவேந்தல், நிகழ்வுகளை பரவலாக நடத்தியிருந்தனர் என குறிப்பிட்டோம்.
எனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நாம் நடத்தியமை விடுதலைப் புலிகளுக்கானது எனவும் விடுதலைப் புலிகளுடைய தலைவருக்கானதும் என திசைமாற்றம் செய்யப்படுவதில் எந்த உண்மையும் கிடையாது என இச்சந்திப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவிருந்த இடங்களில் சிவில் உடைதரித்த இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம் அதிகரித்திருந்த நிலையில் குறித்த சம்பவங்கள் சமகாலத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுவரும் எமது கட்சியின் செயற்பாடுகளை முடக்குவதற்கான ஒரு முயற்சியாக இருக்கலாம் எனவும் தாம் சந்தேகிப்பதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கே மே-18 அஞ்சலி செய்தோம்!- த.தே.முன்னணியினர் விளக்கம்
Reviewed by NEWMANNAR
on
May 22, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 22, 2013
Rating:

No comments:
Post a Comment