கண்பார்வையற்ற பட்டதாரி ஆசிரியை ஒருவரை அவமானப்படுத்திய மன்னார் மக்கள் வங்கி முகாமையாளர்.
மக்கள் வங்கியின் மன்னார் கிளை அலுவலகத்திற்கு கடந்த சனிக்கிழமை (22-06-2013) தனது சம்பள பணத்தை பெற்றுக்கொள்ளச் சென்ற மாற்றாற்றல் கொண்ட ஆசிரியை ஒருவர் அன்றைய தினம் கடமையில் இருந்த அதிகாரி ஒருவரினால் அவமாணப்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் மன்னார் இணையத்துக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,
மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் கண்ணாட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பெணடிற்றா செபமாலை ஆகிய நான் பட்டதாரி ஆசிரியராக கடமையாற்றி வருகின்றேன்.
இரண்டு கண்களும் பார்வையற்ற நான் குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றி வருகின்றேன்.
2005 ஆம் ஆண்டு முதல் மக்கள் வங்கியில் கணக்கை ஆரம்பித்து குறித்த கணக்கினூடாக சம்பள பணத்தை பெற்று வந்தேன்.
கடந்த மாதம் வரை எனது சம்பள பணம் மற்றும்,எனது தேவைக்கேற்ப எனது கணக்கில் உள்ள பணத்தை வங்கிக்கு சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பணத்தை பெற்று வந்தேன்.
கண்பார்வை இல்லாத காரணத்தினால் நான் வங்கி கணக்கு ஆரம்பிக்கின்ற போது வங்கி புத்தகத்தில் கையொப்பம் வைக்க முடியாத நிலையில் கை நாட்டு வைத்து வந்தேன்.அதனையே தொடர்ந்தும் பின்பற்றி வந்தேன்.
-கைநாட்டு வைக்கின்றமையினால் பணத்தை மீளப்பெறும் படிவம் முகாமையாளரிடம் காண்பிக்கப்பட்டதன் பின் காசாளரிடம் ஒப்படைக்கப்பட்டு பணம் வழங்கப்பட்டு வந்தது.அதனை அங்குள்ள பணிளாயர்கள் சிறப்பாக செய்து வந்தார்கள்.
இந்த நிலையில் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை எனது சம்பள பணத்தை பெற்றுக்கொள்ள மக்கள் வங்கியின் மன்னார் கிளைக்கு நானும்,எனது சகோதரியும் சென்றோம்.பின் பணத்தை பெற்றுக்கொள்ளுவதற்காண படிவத்தை பூர்த்தி செய்து கைநாட்டு வைத்தேன்.
23 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொள்ளுவதற்காகவே நான் படிவத்தை அங்குள்ள பணியாளர்கள் மூலம் பூர்த்தி செய்தேன்.
அதன் பின் குறித்த படிவம் முகாமையாளரிடம் காண்பிக்கப்பட்ட போது குறித்த முகாமையாளர் என்னை அழைத்தார்.நான் முகாமையாளரை நாடிய போது குறித்த கை நாட்டை பரிசோதிக்கின்ற கருவி எங்களிடம் இல்லை.இது உங்களின் பணமா என எங்களுக்கு தெரியாது.உங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.இவ்வளது தொகை பணத்தை தர முடியாது.
திங்கட்கிழமை(24-06-2013) நீங்கள் கணக்கு திறந்த மன்னார் முருங்கன் மக்கள் வங்கி கிளையில் சென்று பெற்றுக்கொள்ளுங்கள்.உங்கள் தேவைக்காக 5 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்றார்.
நான் தொடர்ந்தும் மிகவும் தாழ்மையாக எனது அவசர தேவை கருதி எனது பணத்தை கேட்டேன்.
-ஆனால் தரவில்லை.குறித்த வங்கி கணக்கு எனது பெயரிலும்,எனது அக்காவின் பெயரிலும் உள்ளது. இதனால் அக்கா குறித்த பணத்தை பெற்றுக்கொள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பணத்தை பெற்றுக்கொள்ள சென்றார்.
நான் முகாமையாளர் இருந்த இடத்தில் இருந்து சுமார் 10 மீற்றர் தொலைவில் நின்றுகொண்டிருந்தேன்.இதன் போது குறித்த முகாமையாளர் என்னை பார்த்து கண்தெரியாத இவர் டீச்சராம்.இவருக்கு யார் டீச்சர் வேலை கொடுத்தது.என கூறி சிரித்து ககைத்துக்கொண்டிருந்தார்.
அடையாள அட்டையில் ஆசிரியர் என இருந்தும் அதனை பொருட்படுத்தாது அவர் செயற்பட்டார்.என்னை வேதனைப்படுத்தும் வகையில் எனது இயலாமையை கூறி கதைத்துக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் வங்கியில் உள்ள பணியாளர் ஒருவர் முகாமையாளரிடம் கூறினாப் இவர் ஆசிரியர் இங்கேதான் பணத்தை பெற்றுக்கொள்ளுகின்றார் என கூற குறித்த முகாமையாளர் மௌனம் காத்தார்.
பின் அக்கா வந்தவுடன் நான் மீண்டும் முகாமையரை நாடி நான் ஆசிரியர் என அடையாளப்படுத்த முயற்சி செய்த போது உங்கள் தேவை முடிந்து விட்டது.நீங்கள் வங்கியை விட்டு செல்லலாம் என முகாமையாளர் கூறினார்.
இந்த நிலையில் என்னைப்போன்ற கண்பார்வை அற்ற மற்றும் மாற்றாற்றல் கொண்ட வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வருகின்ற போது அவர்களை அவமானப்படுத்துகின்ற வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என கண்ணீர் மல்க தெரிவித்துக்கொண்டு வங்கியை விட்டு சென்றதாக குறித்த பட்டதாரி ஆசிரியரான பெணடிற்றா செபமாலை தெரிவித்தார்.
(25-06-2013)
கண்பார்வையற்ற பட்டதாரி ஆசிரியை ஒருவரை அவமானப்படுத்திய மன்னார் மக்கள் வங்கி முகாமையாளர்.
Reviewed by NEWMANNAR
on
June 25, 2013
Rating:

No comments:
Post a Comment