தேர்தல் விஞ்ஞாபன இலக்கை நோக்கி பயணிப்போம்: சுரேஸ்
வடமாகாண சபை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிய இலக்கை நோக்கிப் பயணிப்பதில் மிக உறுதியாகவும், கவனமாகவும் இருப்போம் என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் தலைவருமாகிய சுரேஸ் பிரமேச்சந்திரன் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அடுத்தகட்டப் போராட்டம் சர்வதேசத்தின் முன்னால் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ். ரில்ஹோ சிற்றி ஹோட்டலில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எப்பொழுதும் தமிழ் மக்களின் ஆணைக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதுடன், எமக்கு தமிழ் மக்களினுடைய விடுதலை மிக முக்கியமானது. அதற்காகவே விடுதலை போராட்டத்தில் எம்மை இணைத்துக் கொண்டமோ தவிர, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காகவும், மாகாண சபை உறுப்பினர் பதவிக்காகவும் இல்லை.
தமிழ் மக்களுக்கு சுயாட்சியை பெற்றுக் கொடுப்பதற்கான கூட்டு நடவடிக்கையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. 2002 ஆண்டு முதல் கூட்டாக இணைந்து செயற்பட்டு வரும் கூட்டமைப்புக்குள் பல முரண்பாடுகள் காணப்பட்டு வந்தன. இருந்தும் அவ்வாறான முரண்பாடுகளின் போது அங்கத்துவக் கட்சிகள் விட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்கின்றன.
எங்களுக்கு பதவி தேவை என்று ஒருபோதும் யாரிடமும் கேட்டதோ யோசித்ததோ இல்லை. மாறாக தமிழ் மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தும், யோசித்து கொண்டிருக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவதற்கு மக்கள் ஆணை தந்துள்ளார்கள். இந்நிலையில் கூட்டமைப்பாகச் செயற்படுகின்ற போது, ஒரு கட்சி தான் நினைத்தவாறு முடிவுகளை எடுப்பது ஜனநாயகமில்லை.
கூட்டமைப்பிலுள்ள 5 கட்சிகளும் ஒன்று சேர்ந்து அமைச்சரவையை அமைக்க வேண்டும். இருந்தும் அவ்வாறு அது அமையவில்லை. அமைச்சுப் பதவி தராவிட்டாலும் கூட உட்கட்சிக் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என பலமுறை கூறிய போதும், அது 'செவிடன் காதில் ஊதிய சங்காக போய்விட்டது.' என்றார்.
அமைச்சுப் பதவி கொடுப்பதாக இருந்தால் முல்லைத்தீவிற்கு கொடுங்கள் என என்னால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், அந்த கோரிக்கையினை தமிழரசுக்கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை.
அதேசமயம், கூட்டமைப்பின் கூட்டமொன்றில் மாவை சேனாதிராஜா முல்லைத்தீவிற்கு ஒருவரை நியமிக்குமாறு வலியுறுத்தியதாகவும், அதற்கு ஏனையோர் ஒத்துக் கொள்ளவில்லை என்றும் சுமந்திரன் தடுத்தாகவும், மாவை சேனாதிராஜா என்னிடம் தெரிவித்திருந்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஆரம்பித்திலிருந்து அங்கம் வகித்து வரும் நாம் கூட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் கூட்டாக பலமாக இருக்க வேண்டும்.
வடமாகாண சபை 4 அமைச்சுக்களில் தமிழரசு கட்சி இரண்டு அமைச்சுக்கள் தமக்கு வேண்டுமென்று கூறிவந்தது. தற்போதுள்ள பிரச்சினைக்கு மூலகாரணம் இதுவே தவிர ஏனைய கட்சிகள் இல்லை.
அத்துடன், முதலமைச்சரின் இணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்கள் ஊழல் நிறைந்தவர்கள் என்றும், முதலமைச்சரின் உறவினர்களும் ஆவார்கள். இவ்வாறான செயற்பாடுகளைத் தான் கூட்டமைப்பு என்ன செய்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒரு அமைச்சுப் பதவி கிடைத்திருந்தால், அந்த மக்கள் மிக சந்தோஷமடைந்திருப்பார்கள், இருந்தும் அது நடைபெறவில்லை. அதற்கு தவறான காரணங்களை சொல்லிக் கொண்டிருப்பது அநாகரிகமானதுடன், முதலமைச்சரும் தவறான காரணங்களையே கூறுகின்றார்.
நாம் யாருக்கும் விலை போகமாட்டோம் என்பதுடன், விலை போபவர்களைத் தட்டி கேட்பவர்களாவே எப்பொழுதும் இருப்போம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தேர்தல் விஞ்ஞாபன இலக்கை நோக்கி பயணிப்போம்: சுரேஸ்
Reviewed by Admin
on
October 13, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment