தமிழில் எழுத்துப் பிழை தொடர்பில் மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் மாணவர் சமூகம் விளக்கம்
இலங்கையின் மொறட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் சங்கத்தினால் நடாத்தப்படவுள்ள போட்டிகள் தொடர்பாக சில பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட விளம்பர சுவரொட்டிகளில் தமிழ் எழுத்துக்கள் தவறாக அச்சிடப்பட்டமை தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.
இந்த விடயம் தொடர்பில் விளக்கமளித்து மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் மாணவர் சமூகம் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது.
அந்த அறிக்கை அப்படியே வருமாறு,
மொறட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் சங்கத்தினால் நடாத்தப்படவுள்ள போட்டிகள் தொடர்பாக சில பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட விளம்பர சுவரொட்டிகளில்எழுத்துக்கள் தவறாக அச்சிடப்பட்டமை தொடர்பாக ஊடக செய்திகள் மூலம் அறிந்துகொண்டோம்.
இது தொடர்பாக உரிய அங்கத்தவர்களிடம் வினவிய வேளை சகோதர மொழி பேசுகின்ற மாணவர்களால் அச்சிடப்பட்டு தமிழ் மாணவர்களால் ஒப்புநோக்கப்படாது அனுப்பி வைக்கப்பட்ட இந்த சுவரொட்டியில் ,அச்சிடலின் போது எழுத்துரு மாற்றத்தின் காரணமாக இந்த பிழை ஏற்பட்டிருப்பதை அறிய முடிந்தது.
சரியான முறையில் தகவல்கள் தட்டச்சு செய்யப்பட்டிருந்தாலும் அச்சிடலின்போது உரிய எழுத்துரு மென்பொருள் அச்சகத்தில் இன்மை காரணமாக இத்தவறு இடம்பெற்றிருக்கின்றது. எனினும் அதனை தமிழில் ஒப்புநோக்கப்படாமை தொடர்பாக உரிய தரப்பினருக்கு நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம்.
இந்த விடயம் அவர்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து அனைத்து பாடசாலைகளுக்கும் தொலைபேசி அழைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு உடனடியாக மன்னிப்பு கோரப்பட்ட அதேவேளை. திருத்தப்பட்ட விளம்பரமும் விரைவில் அனுப்பிவைக்கப்படவுள்ளது. விளம்பரத்துடன் அனுப்பப்பட்ட கடிதம் சரியான தகவல்களை தாங்கி சென்றுள்ளதை உறுதிப்படுத்துகின்றோம்.
இது அச்சில் ஏற்பட்ட பிழை மட்டுமேயோழிய இன ஒதுக்கீடோ அல்லது மொழிப் புறக்கணிப்போ அல்ல என்பதை நாம் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள மாணவர்களும் சரி மொறட்டுவை பல்கலைக்கழக ஏனைய சகோதர மொழி மாணவர்களும் சரி இனங்களின் ஒற்றுமை தொடர்பாக மிகவும் கரிசனை கொண்டுள்ள நண்பர்கள் என்பதை பல்கலைக்கழக தமிழ் மாணவர்களாகிய நாங்கள் உறுதிப்படுத்துகின்றோம்.
இந்த விடயம் தொடர்பாக அந்த மாணவர்களுக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து அவர்கள் எம்மிடமும் மன்னிப்பும் கோரியிருந்தனர்.
தயவுசெய்து இந்த தவறினை ஒரு இன முரண்பாடாகவோ மொழிப்புறக்கணிப்பாகவோ கருதி செய்திகளையும் பரப்புரைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என ஊடகங்களையும் நண்பர்களையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி சுய விளம்பரம் தேடவோ இல்லாத முரண்பாடுகளை கற்பனையாக உருவாக்கவோ வேண்டாம் என பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
-மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் மாணவர் சமூகம்-
தமிழில் எழுத்துப் பிழை தொடர்பில் மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் மாணவர் சமூகம் விளக்கம்
Reviewed by Admin
on
October 23, 2013
Rating:

No comments:
Post a Comment