அண்மைய செய்திகள்

recent
-

அழகிரியால் ஸ்டாலின் உயிருக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பு வழங்க கோரி மன்மோகன் சிங்கிற்கு கருணாநிதி கடிதம்

திமுக பொருளாளரும் தனது மகனுமான மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதி உள்ளார்.

ஸ்டாலின் 3 மாதங்களில் இறந்து விடுவார் என அழகிரி கூறியதாக கருணாநிதி நேற்று தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக ஸ்டாலின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.

கட்சிக்கு எதிராக செயல்படுவதாக சமீபத்தில் மதுரை மாவட்ட திமுக அமைப்பு கலைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கட்சியின் கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் வகையில், கூட்டணியை பாதிக்கும் வகையிலும் பேட்டி அளித்ததாக தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி தற்காலிகமாக கட்சியின் அனைத்து பொறுப்புக்களிலும் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

அழகிரி நீக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருணாநிதி நேற்று விளக்கம் அளித்தார். அப்போது ஸ்டாலின் இன்னும் 3 மாதங்களில் இறந்து விடுவார் என அழகிரி கூறியதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ஸ்டாலினுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அலுவலகத்திற்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என திமுக எம்.பி.,க்கள் ஒரு மாதத்திற்கு முன்னரே பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கட்சி எதிரான செயல்பாடுகள் மற்றும் ஸ்டாலினுக்கு எதிராக கூறப்பட்ட கருத்துக்கள் குறித்து அழகிரியிடம் விளக்கம் கேட்டு திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நோட்டீஸ் மீது ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அழகிரிக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, மு.க.அழகியின் உருவ பொம்மை, கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல இடங்களில் எரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொண்டர்கள் அழகிரியின் உருவ பொம்மையை எரிக்க வேண்டாம் என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில், அழகிரி தன்னை பற்றி கூறியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அழகிரி உருவ பொம்மை எரிப்பு குறித்த தகவல்கள் தனக்கு வேதனையை ஏற்படுத்துகிறது என்றும், ஆத்திரத்தில் ஈடுபடும் இதுபோன்ற செயல்கள் தி.மு.க.,வை பாதிக்கும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மண்ணில் பிறந்தவர்கள் அனைவரும் என்றாவது ஒருநாள் இறக்க வேண்டியது தான்; அதனால் எனக்கு வந்துள்ள மிரட்டல் பற்றி கவலைப்படாமல் திருச்சியில் நடைபெற உள்ள மாநாட்டில் தொண்டர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
அழகிரியால் ஸ்டாலின் உயிருக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பு வழங்க கோரி மன்மோகன் சிங்கிற்கு கருணாநிதி கடிதம் Reviewed by NEWMANNAR on January 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.