மக்களை தேடிச் சென்று சேவையாற்றும் துறையாக அரச துறை மாறவேண்டும்: பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்
அரசதுறை மக்களின் தேவைகளை அறிந்து மக்களை தேடிச்சென்று சேவையாற்றும் துறையாக மாற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச செயலகத்தில் வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட நூறு பயனாளிகளில் முதற்கட்டமாக இருபது பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் மேம்பாட்டை மையமாக வைத்து அரசினால் இன்று பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவற்றுக்கான உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இவ்வாறான திட்டங்களின் முழுமையான பயனை மக்கள் பெறுவதற்கு உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
குறிப்பாக கிராம மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் அதிக அக்கறை எடுத்து செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது அந்த மக்களும் விரைவாக வறுமையிலிருந்து விடுப்பட்ட மக்களாக மாறுவர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சமூர்த்தி வங்கிகளில் 109 கோடி ரூபாக்கள் வறிய மக்களின் பணம் சேமிப்பில் உள்ளது. இந்த பணத்தை மக்கள் அந்த வங்கிகளிலிருந்து நடைமுறைக்களுக்கு அமைவாக இலகு கடன்களாக பெற்று சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
அரசின் உதவிகளை நம்பியிருக்காது சுயதொழில் முயற்சிகள் மூலமும் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட வேண்டும் என்றார்.
சங்கானை பிரதேச செயலாளர் சோதிநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், யாழ். மாவட்ட சமூர்த்தி உதவி ஆணையாளர் மகேஸ்வரன், இணைப்பாளர் இரகுநாதன், வலி.மேற்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் பாலகிருஸ்னண், பிரதேச சபை உறுப்பினர் செல்வகுமார், சமூர்த்தி வங்கி முகாமையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மக்களை தேடிச் சென்று சேவையாற்றும் துறையாக அரச துறை மாறவேண்டும்: பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்
Reviewed by NEWMANNAR
on
February 01, 2014
Rating:
No comments:
Post a Comment